Friday, 6 September 2013

ஜப்பானியம்.




இன்றுவரைக்கும் அவர் இயற்பெயர் என்னவென்று தெரியாது.’சண்முக சுந்தரம்’ என்று நினைக்கிறேன். இப்படி ‘நினைக்கிறேன்’ என நினைப்பது அனேகமாகச் சரியாகவே இருக்கும். அவரை ‘ஜப்பான்’ என்றுதான் கணபதி அண்ணன் சொல்வான். அவனுடன் ஆரம்பப் பள்ளியில் இருந்து படித்தவர். எதனால் அந்தப் பெயர் என்று நானும் கேட்டதில்லை. அண்ணனும் சொல்லியதில்லை. அந்தக் காலத்தில் எல்லாம் கேட்டுத் தெரிவதை விட, தானாகப் புரிந்துகொள்கிறதே அதிகம். 

எங்கே எந்த இடத்தில் பார்த்தாலும், காசு கேட்பார். ‘ஏ. காப்பி குடிக்கக் காசு தரப்பிடாதா டே?’ என்பார். ‘ஒரு ரெண்டு ரூவா கொடு டே’ என்பார். வங்கியில் காசாளராகக் குனிந்து வேலையில் இருக்கும் போது, மொஹைதீன் டாக்டரைப் பார்த்துவிட்டு மருந்துவாங்க நிற்கையில், ஆனித் திருவிழா தேரோட்டம் பார்த்துவிட்டு, தேரை விட கூட்டம் நகர்கிற (அதில் ஒரு தேர் அசைவின் லயம் வந்திருக்கும்) அழகைப் பார்க்கையில், கல்யாண வீட்டு வாழைமரக் குளிர்ச்சியைத் தடவிக்கொண்டு தெற்குமேட்டுச் சித்தப்பாவுடன் பேசிக்கொண்டு இருக்கையில், பரமனின் க்ராஜுவேட் காஃபி பாரில் நிற்கையில், ஒரு முறை கருப்பந்துறை மயானத்தில் வேம்படித் தெரு பெரியம்மைக்கு எரியூட்டிவிட்டு வருகையில் கூட, அவருடைய ‘ காப்பி குடிக்க துட்டுக் கேட்கிற’ குரல் நமக்கு அருகில் கேட்கும்.

ஒருதடவை, நான் போயிருந்த கல்யாணவீட்டில் பந்தியில் உட்கார்ந்திருந்த அவரை எழுப்பி வெளியே விரட்டிக் கொண்டு இருந்தார்கள். கல்யாணமே ஆகாத அவருக்குத் தெரியாமலே அவரைக் கூட்டிக்கொண்டு போய் குடும்பக் கட்டுபாடு ஆப்பரேஷன் பண்ணிவிட்டுவிட்டதாகவும் அதிலிருந்து அவர் பாதி ஆளாக மெலிந்துவிட்டதாகவும் சொன்னார்கள். சமீபத்தில் ஒன்றிரண்டு கல்யாண வீடுகளில் மேளக்காரர்களோடு ஒருவராக பின் வரிசையில் உட்கார்ந்து சிங்கியைத் தட்டிக்கொண்டு இருந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன். கையில் காசிக் கயிறு, கழுத்தில் உத்திராட்சம், திருநீறு என மிகுந்த ஒருமையுடன் தாளத்திற்கும் தவிலுக்கும் நாதஸ்வரத்திற்கும் ஒன்றி அப்படிஅவர் அமர்ந்திருப்பது எனக்குப் பிடித்திருந்தது.

எப்போது பார்த்தாலும் அண்ணனைப் பற்றிக் கேட்பார். அண்ணனுக்கு எத்தனை பிள்ளைகள், அண்ணனுக்கு பாரிஸ் கார்னரில் அலுவலகம் எங்கே, எங்கள் பூர்வீக சுடலமாடன்கோவில் தெரு வீட்டில் யார் இருக்கிறார்கள், ரத்தினச் சித்தப்பா இறந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிவிட்டது எல்லாம் அவருக்குத் தெரியும் அதைக் கேள்விகளாகக் கேட்டு உறுதிசெய்துகொள்வார். ஆனால் , கடைசியில் அவருடைய நிழல் நம்முடைய நிழலைத் தொடுவது போல், மெதுவாக ‘ காப்பி குடிக்கக் கிடைக்குமா டே?’ என்பார்.

நேற்று அவரை நீண்ட இடைவெளிக்குப் பின் பார்த்தேன். டவுணில் சின்னச் சின்ன ஜோலிகள் இருந்தன. அப்பர் க்ளாப்டன் பள்ளிக்கூடம் பக்கம் காத்திருக்கிறேன். சாரல் விழுந்துகொண்டு இருக்கிறது, ரத்னா நெய், வெண்ணெய் ஸ்டோர் என்ற போர்டைப் பார்க்கும் போதே அந்த வினோத வாசனை மூக்கில் ஏறுகிறது. ஜெய்ன் கோவிலில் இரண்டு மார்வாரிப் பெண்கள் மஞ்சள், சிவப்பு முக்காடிட்டு நிற்கிறார்கள். புகைத் திரளின் அருபத்திலிருந்து தன்னைத் திரட்டிக் கொண்டுவந்தது போல்
’ஜப்பான்’ வந்துவிட்டார். வழக்கமாக கையில் அகப்படுவதை அவரிடம் கொடுத்துவிடுவேன். நேற்று ஏன் அப்படித் தோன்றியது என்று தெரியவில்லை. காப்பி குடிக்கத் துட்டுக் கேட்டால் கொடுக்கக் கூடாது. என்ன நச்சரித்தாலும் கிடையாது என்ற முடிவில் இருந்தேன்.

‘என்னடே நல்லா இருக்கியா?’ என்றார். நான் ஒற்றைச் சொல்லில் பதில் சொல்லிவிட்டு, இப்படித்தான் ஆரம்பிப்பார், ஆனால் கடைசியில் துட்டுக் கேட்பார் என்று பக்கத்தில் நிற்கிற ஆட்டோ நம்பரை வாசிக்கிறேன். ‘பென்ஷன் ஆய்ட்டுதுல்லா? அறுபத்தஞ்சு இருக்காது உனக்கு?’ என்றார். நான் அதைச் சுருக்கமாக ஒப்புக்கொண்டேன். இன்னும் இரண்டு விசாரிப்புக்களின் பின் அவர் நிச்சயம் காசு கேட்பார் கொடுக்கக் கூடாது என்று என்னைக் கெட்டிப்படுத்திக்கொண்டேன்.அவர் முகத்தைப் பார்க்கவில்லை.

‘அண்ணனுக்கு என்ன டே செஞ்சுது? இடையில ஒரு நாள் அப்பாவைப் பார்த்தேன். அவ்வோ தான் அவன் தவறிப் போன விபரம் சொன்னா’ என்றார். ‘புள்ளகள் எல்லாரும் நல்லா இருக்காங்க இல்ல? எல்லாத்துக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்திட்டான் இல்லையா?’ என்றார். ‘நீ அடிக்கொருக்க எல்லாத்தையும் போய் எட்டிப்பார்த்துக்கோ என்ன?’ என்று அவர் சொலும் போது எனக்குக் கண் கலங்கிவிட்டது.

‘உன்னைப் பாத்ததும் கணவதியைப் பத்தி விசாரிக்கணும்னு தோணுச்சு’ என்று சொன்னதுடன் நிறுத்தவில்லை, ‘பொறத்தாலே இருந்து பார்க்கும் போது நீ அப்படியே அவன் மாதிரித்தான் இருக்கே’ என்று சொல்லிவிட்டு
’அப்போ பாப்போம்’ என்று விட்டு ப் புறப்பட்டார். போகும் போது முதல் முறையாக என் தோளை லேசாகத் தட்டிக் கொடுத்தார்.

அவர் மார்க்கெட் பக்கமாகத் திரும்பும்வரை அவரை அப்படியே பார்த்துக்கொண்டு இருந்தேன்.

அவர் இனிமேல் எதுவும் என்னிடம் கேட்கவே மாட்டாரோ என்று எனக்குக் கஷ்டமாக இருந்தது.

4 comments:

  1. சூப்பரா எழுதறீங்க சார்... அந்த கடைசி வரிகள் கண்களை கலங்க வைக்கிறது.... என் மகள்தான் உங்களைப் பற்றி நேற்று கூறினார் அவளுடைய தோழி கூறியதாக, இது என் தந்தையின் ப்ளாக் என்று....

    நீங்கள் வங்கி ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவரா? நானும் அப்படித்தான்.என்னுடைய ப்ளாக் விலாசம்:http://ennulagam.blogspot.com சமயம் கிடைக்கும்போது சென்று பாருங்கள்.

    அடிக்கடி எழுதுங்கள். தமிழ்மணத்தில் இணைத்துக்கொண்டீர்களா? உங்கள் ப்ளாகைப் பார்த்தால் அப்படி தெரியவில்லை.

    ReplyDelete
  2. 'ஜப்பான்' போன்றவர்களை நானும் சந்தித்திருக்கிறேன். அவர்களை உதாசீனம் செய்து கடந்திருக்கிறேன்.
    தற்போது நான் எப்படிப்பட்டவள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  3. வாழையின் குளிர்ச்சியாய்...அப்படியே வழுவழுவென்று செல்கின்றன வார்த்தைகள்.
    வாசிக்கும் நாங்கள் பாக்கியவான்கள்.

    ReplyDelete