நேற்று என்னுடைய நடைச் சுற்று தன் கடிகாரத்தை 12, 11, 10,9 என்று திருப்பியிருந்தது. வராத மழைக்கு முந்திச் செல்லும் வேகத்தில் வியர்த்துக்கொண்டு இருந்தேன். வியாழக்கிழமை மாலைப் போக்குவரத்தின் முதுகைப் பார்த்தபடி நடப்பது சற்றுப் புதியதாக இருந்தது, விரைகிற இருசக்கர வாகனஓட்டிகள் புறமுதுகிட்டு விரைந்து கொண்டு இருந்தார்கள், கன்ணுக்கெட்டிய தூரத்தில் எந்தப் போரும் நிகழாத ஆறு மணி மாலையில்.
என் வலது புறம், வேகம் மட்டுப்பட்டு ஒரு ஸ்கூட்டி நின்றது. ஒரு சின்னஞ்சிறு பெண். உயர்நிலைப் பள்ளிக் களை. சீருடைகள் எதுவும் இல்லை. வெளியூராகக் கூட இருக்கலாம். ’கனரா பாங்க் காலனி எப்படிப் போக வேண்டும்?’ என்று கேட்டது. கேட்டபடியே சிரிக்கவும் அல்லது சிரித்தபடியே கேட்கவும் ,அதற்கு முடிந்தது. எந்தப் பதற்றமும் இல்லை. என் கண்களில் இருந்து அகலாத அந்தப் பார்வை என்னிடம் கனரா பேங்க் காலனி வழியை வாங்கிக்கொண்டு, மீண்டும் ஒரு முறை திருப்பிச் சொல்லி உறுதி செய்து, சிரித்து, நன்றி சொல்லி, வாகனத்தைக் கிளப்பியது. சீறிக்கொண்டு எல்லாம் செல்லவில்லை. நிதானமாக வேகம் எடுத்து மறைந்தது. எனக்கு அந்த முகம் பிடித்திருந்தது. சில முகங்களில் இப்படி எந்தக் களங்கமும் தூசும் வலியும் படிவதே இல்லை போல.
தென்றல் நகர் முடிகிறவரை இந்த முகத்தைக் கூடவே வைத்திருந்தேன். எந்தப் பிரயாசையும் இன்றிக் கையில் பிடித்திருக்கிற பலூன் கொத்துப் போல அந்தச் சிரிப்பு. என்னுடன் வந்துகொண்டே இருந்தது.
தென்றல் நகர் தெரு முடிந்து மைதானம் துவங்கும் இடம். மூலைக் காலி மனை. சமீபத்தில் தான் ஆவாரம் செடியை எல்லாம் பொக்லைன் வைத்து அப்புறப்படுத்தி இருந்தார்கள். ஒரு ‘ட’ போன்ற அந்த மனை, ஒரு கட்டுமானத்திற்குத் தயாராகிக்கொண்டு, தன் கடைசி மைனாக்களுடன், ஆட்காட்டிக் குருவிகளுடன் பேசிக்கொண்டு இருந்தது.
அந்தப் பையனுக்கும் பதினாறு பதினேழு வயதுதான் இருக்கும். ஒரு கருநீல பனியனும் அடர் நிறத்தில் ஒரு கால்சட்டையும் அணிந்திருந்தான். உடன் வேறு யாரும் இல்லை. தனியாக அவனும் அவனுடைய கால் பந்து மட்டுமே. கால்பந்தை விசையுடன் உதைக்கிறான். அது மேலே எவ்வுகிறது. ஓடிப்போய்,கீழிறங்கும் முன் காலால் நிறுத்துகிறான். மறுபடி உதைக்கிறான். அது நெடுக்கு வாட்டில் நாலைந்து மனை தாண்டி அப்புறம் போய் விழுகிறது. இவனே அதுவரை ஓடிப் போய்ப் பந்தைப் பொறுக்கி, மார்புடன் உருட்டியபடி, மறுபடியும் இந்த மனைக்கே வருகிறான். மறுபடி வியர்த்த உடம்புடன் உதைக்க பந்து வேறொரு திசை ஏகுகிறது. அவன் முகத்தில் துளியும் சிரிப்பு இல்லை. பெரும் தீவிரம் இறுகிக் கிடக்கிறது. ஒரு தீயைக் கூடாரமிட்டு மூடிவைத்திருப்பது போன்று இரண்டு கண்களும் புகைபடிந்து கிடக்கின்றன.
அவனுடைய தனிமையே அவனுடைய கால்பந்தாகத் திரண்டு உருள்வது போல, அவன் உலகத்தில் பந்தைத் தவிர எதற்கும், யாருக்கும் இடம் இல்லை என்பதாக, அவன் அந்த மனையின் எல்லா எல்லைகளுக்குள்ளும் உதைபட்டு, உருண்டு நகர்ந்துகொண்டிருந்தான். என்னைப் பார்க்கவே இல்லை.
அந்தப் பையனிடம் எனக்குப் பேசவேண்டும் போல இருந்தது. என்ன பேசுவது என்று தெரியவீல்லை. என்னிடம் அந்தச் சிறுபெண் கேட்டு நான் வழி சொன்னது ஞாபகம் வந்தது.
நான் அவனைக் கூப்பிட்டுக் கேட்டேன், ‘தம்பி, கனரா பாங்க் காலனிக்கு எப்படிப் போகணும்?’
வழி சொன்னவர்கள் வழி கேட்கக் கூடாதா என்ன?
v
No comments:
Post a Comment