Monday, 5 August 2013

நான்கு ரம்பூத்தான் விதைகள், மற்றும் நாங்கள்.









போகன் சங்கர் அவருடைய நண்பர் பாலமுருகனுடன் வந்தார். முதன் முறையாகப் பார்க்கிறோம். முதன் முறையாக, முன் பின் அறிமுகமற்ற இருவரை, எங்கள் வீட்டுக்கு வருகிற பாதையில் இருக்கும் இன்னொரு தெருவில், காற்றுக்கு மத்தியில் ஒரு சருகு இலை போல நகர்ந்துகொண்டிருக்கும் ஞாயிற்றுக்கிழமை சாயுங்காலம் ஒன்றில், சந்திக்க வாய்த்தது எனக்குப் பிடித்திருந்தது.

பழங்கள் வாங்கி வந்திருந்தனர். ’ரம்பூத்தான் பழம் பிடிக்கும் இல்லையா?’ என்று கேட்டுக்கொண்டே போகன், பாலமுருகனிடம் பழப்பையை வாங்கி நீட்டினார். ஒரு கை மாறி அவரிடமிருந்து அதைப் பெற்ற நேரம் போகன் சங்கரை எனக்கு மேலும் இணக்கம் ஆக்கிற்று. ஜெயமோகன் எப்படி அவர் படைப்புகளால் எனக்கு முக்கியமானவரோ அதே போல போகனும் அவருடைய கவிதைகளால் சமீபத்தில் எனக்கு முக்கியமானவராக உணரப்படுபவர்.

பையை வாங்கின கையோடு ஒரு சிறு கணம் உள்ளே உற்றுப் பார்த்தேன். மஞ்சளா, ஆரஞ்சா, சிவப்பா எனத் தீர்மானிக்க முடியாத ஒரு அற்புத நிறத்தில் பழங்கள். பழுத்த பாகல் பழங்கள் இப்படித்தான் இருக்கும். ஊமத்தங்காய்களுக்கு வண்ணம் பூசினால் கூட இப்படித்தான். எட்டாம் வகுப்பு சி பிரிவு தேவேந்திரன் தீப்பெட்டிக்குள் எப்போதும் அருகம்புல்லுடன் வைத்திருந்த வெல்வெட் பூச்சி - இந்திரகோபப் பூச்சி என்ற பெயர் எல்லாம் ‘வெல்வெட் பூச்சி’க்கு முன்னால் எம்மாத்திரம்? - மாதிரிக் கூட.

‘சாப்பிட்டதில்லை போகன், குத்தாலத்துல பார்த்திருக்கிறதோடு சரி’ என்றேன். எனக்கு எது மங்குஸ்தான், எது ரம்பூத்தான் என்று தெரியாது. மருதங்காய் போல மஞ்சளாகப் பழுத்த நிறத்தில் ஒன்று இருக்கும். அதன் பெயரும் தெரியாது. போகன் அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று சொன்னார். சொல்லும்போதே, சாப்பிடவேண்டும் என்று தோன்றும்படி அவரால் சொல்லமுடிந்தது.

நேற்றுச் சாப்பிடவில்லை. பேசிக்கொண்டு இருந்துவிட்டு அவர் போன பின்பும் பார்க்கவில்லை. சில சமயங்களில் தூக்கம் வராத இரவுகளில் தண்ணீர் குடிக்கப் போகும்போது, மேஜையில் இருக்கும் கருப்புத் திராட்சைக் குலையைப் பார்ப்போம். அதை மேலும் பார்த்துக்கொண்டே இருக்கும்படி இரவு அதை வசியம் செய்திருக்கும். சற்றுப் புளித்த திராட்சை வாசனையை இந்த உலகம் முழுவதும் கசிந்து பரவச் செய்துவிடும் கனிவுடன் அந்த ஒற்றைக் குலை ஏதோ செய்யும். பறிக்கப் பட்ட கனிகள் நம்முடைய சாப்பாட்டு மேஜைகளின் யாருமற்ற இரவுகளில் பெரும் துக்கத்தின் சாம்பல் பளபளப்புடன் காத்திருக்கின்றன.

இன்று காலை சாரல் விழுந்துகொண்டிருந்தது. ஆடிக் காற்றுக்கு அதன் வரைபடக் கோடுகளை உயர்த்திச் சிகை கலைக்கிற உற்சாகம். இரவில் உதிர்ந்த வேப்பம் பழங்கள், சுபாஷ் கடைக்கு முன் உதிரத் தொடங்கியிருக்கும் ‘நவ்வாப் பழங்கள்’ பற்றிய கணக்கெடுப்பு காற்றிடம் இல்லை. நடந்து கொண்டிருக்கும் போதே எனக்கு போகன் ஞாபகமும் ரம்பூத்தான் பழங்கள் ஞாபகமும். வேலையில் இருந்த, களப்பணி அதிகாரி நாட்களில், மாறாந்தை தாண்டி உள்ளடங்கிய கிராமம் ஒன்றில் பாழடைந்த கிணறு ஒன்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, அந்தக் கிணற்றின் கர்ப்பத்தில் இருந்து படைபடையாகப் புறப்பட்டு வெளியேறின குருவிகள் போல, நான் அந்த பிளாஸ்டிக் பையைத் திறக்கையில் ரம்பூத்தான் பழங்கள் பறக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

நான் மேஜையில் இருந்த பையை எடுக்கையில் பையின் அடிவாரத்தில் ஆப்பிள் பழங்களும், வேறொரு பையில் ரம்பூத்தான்களும். கடல் சார் நீர் உயிரிகள் போல, என் கைகள் உண்டாக்கிய அதிர்வில் பழங்கள் புரண்டு தன் இருப்பை சற்றே இடம் மாற்றிக்கொண்டன. அவை நகர்கிறதாக நான் நினைக்க, அவை என்னை அனுமதித்தன.

உள்ளே இருந்து சத்தம் வந்தது. சங்கரியம்மா,” நான் ரெண்டு சாப்பிட்டுப் பார்த்தேன். நல்லாத்தான் இருந்தது” என்றார். ‘கொட்டை பெருசா இருக்கு. கழச்சிக்காய் மாதிரி அழகா இருக்கு. தூரப் போட மனசே வரலை. தனியா எடுத்து வச்சிருக்கேன்” என்று கத்தியையும் அந்த விதைகள் இருக்கிற சிறு தட்டையும் என் முன்னால் வைத்தார். அந்தக் கணம் விதைகள் இருந்த அந்த சிறு தட்டுப் போல உலகில் எனக்கு அழகான வேறொன்றே இல்லை.

எனக்கு, எத்தனையோ விஷயங்கள் போல, அந்தப் பழத்தை எப்படி வகிர்வது என்றும் தெரியவில்லை. நான் ஒரு ரம்பூத்தான் பழத்தின் மீது இதுவரை யாரும் செலுத்தியிராத வன்முறையுடன், அதன் தோலைப் பிய்த்துக் கொண்டிருந்தேன். சங்கரியம்மா உதவினார். ஒரு சுளை போல, ஆலங்கட்டியென. ஒரு பறவை இட்டுச் சென்றிருக்கிற முட்டை போல சதைப்பற்று இருந்தது. பனங்கொட்டைக்குள் தவண் இப்படித்தான் இருக்கும். சாப்பிட்டுப் பார்த்தேன். பிடித்திருந்தது. மேலும் ஒன்றை நானே வகிர்ந்தேன். ஒரு மகப் பேற்றுத் தாதி, சிரசுதயமாகும் குழந்தையை ஏந்தி வாங்கும் கருணையுடன் நான் இரண்டாவது ரம்பூத்தானின் சதைப்பற்றை உள்ளங்கையில் வைத்துக்கொண்டேன். இந்த இரண்டாவது கனியை உண்கையில் வாய்க்குள் புரண்டுருளும் விதையை என்னால் உணர முடிந்தது. ஒரு வகையில் , பழத்தின் சதைப்பற்றை உண்ணுவதை விட, நான் என் எச்சிலால் அந்த விதையை உண்ண முயன்றுகொண்டிருந்தேன்.

இப்போது அந்தச் சிறு தட்டில் நான்கு விதைகள். ரம்பூத்தான் தோட்டங்களில் விளையுமா, தோப்பில் விளையுமா, சமவெளிப் பயிரா, மலையகப் பயிரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. தெரிய விரும்பவும் இல்லை. என்னை அந்த விதைகள் ஒரு வனத்தில் நிறுத்தியிருந்தன, ஒரு பழம் திண்ணி வௌவால் போல நான் அந்த ரம்பூத்தான் கனிந்து கிடக்கும் வனத்தில், அடர்ந்த இரவில் என் ஜவ்வுச் சிறகுகளுடன் பறந்துகொண்டு இருக்கிறேன்..

நான் அந்தக் கொட்டைகளைப் பார்த்தபடி ஒரு வனத்தில் நிற்கையில், சங்கரியம்மா, “ என்ன பிடிச்சிருக்கா?’ என்று கேட்டபடி அந்தத் தட்டை லேசாக மேலும் கீழும் சாய்த்தார். அந்தக் கொட்டைகள் நகர்வது அவருக்குப் பிடித்திருந்தது. நகரும் அதையே பார்த்தபடி,’ எங்க மீனாட்சிபுரம் ஸ்கூல் பக்கத்தில நாங்க இதே மாதிரிக் குட்டிக் குட்டியா, இலந்தப்பழம் சைஸில இருக்கும். பறிச்சுச் சாப்பிட்டிருக்கோம். தொலி எல்லாம் இப்படியே தான் இருக்கும்’ என்று சொல்லும் போதே அவருடைய முகம் மீனாட்சிபுரம் மகளிர் உயர்நிலைப் பள்ளிப் பக்கத்தில் பழம் பறித்துத் தின்று கொண்டிருந்தது.

நான் இதுவரை அறியாத ஒரு வனத்தில் ரம்பூத்தான் மரத்தின் மேல் நிசி வௌவாலாகப் பறந்துகொண்டு இருக்கிறேன். சங்கரியம்மா அவருடையஎத்தனையோ வருடங்களுக்கு முந்திய பள்ளிக்கூடத்தில் பழம் பறித்து நிற்கிறார்.

ஒரு ரம்பூத்தான் பழத்தின் நான்கு விதைகள் இதைச் செய்தால் போதாதா, போகன் சங்கர்?
7

1 comment: