Wednesday, 21 August 2013

முக நக - 12.











ராஜு முருகன் இந்த வார வட்டியும் முதலும்பகுதியில் அவர் வர விரும்பும் வீடுகளில் எங்கள் வீட்டையும் குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னையில் முகவரி மட்டும் சொன்னால் போதாது. கால் டாக்ஸிக்காரர் கூட, ‘லேண்ட் மார்க் சொல்லுங்க ஸார்என்பார். நிலம் தான் அடையாளம். அதைத் தவிர நிலத்துக்கு வேறு என்ன அடையாளம். வாழும் கலை என்பது போல இது. வாழ்வதே பெரிய கலையாகிவிட்ட்து. இதில் என்ன வாழும் கலை. அதற்கு ஒரு பயிற்சி. வாழ்க்கையை விடப் பயிற்சி உண்டா?
அவர் குறிப்பிட்டிருக்கிறவைகளில் நந்தியாவட்டை இன்னும் பூ உதிர்த்துக் கொண்டு இருக்கிறது. பெரிய கிளைகளை வெட்டும்படியாயிற்று, செட்டி குரிச்சி பஸ்ஸில் எம்.ஆர். ராதா குரலில் கரகரவெனப் பேசியபடி, வெட்டுப்பட்ட இடது கையைத் தேங்காய்ப் பூத் துண்டால் மூடியிருக்கிற ஒருவர் வருவார். அவர் மாதிரி இருக்கிறது அது. வாசலில் இரண்டு பக்கமும் வளர்ந்து கிடந்த செவ்வரளிக்கு ஏதோ தாவரச் சீக்கு. ஒன்றை மூட்டோடு எடுத்துவிட்டோம். இன்னொன்று மீண்டும் இப்போது தளிர்த்துப் பூக்க ஆரம்பித்திருக்கிறது.
கருவேப்பிலை மரமும் அதன் மேல் படர்ந்து பூக்கும் இருவாட்சியும் இப்போது இல்லை. இந்தப் பக்கத்துக் கோடை இரவுகளின் இருட்டில் பரவிய அதன் வெகு தூர வாசம் எங்கள் இடது பக்கச் சன்னலின் விளிம்பில் ஒரு பல்லிமுட்டை ஓடு போல வெள்ளையாக அசைகிறது. அடுக்கு நந்தியாவட்டையிலும் பூச்சிதான். இப்போதைய நான்கு பூக்கள் சேர்ந்தால் பழைய பூ ஒன்றின் அளவுக்கு மலர்கிறது. செம்பருத்தி இருந்த இடத்தில் கை கையான சிவப்பு ஞாபகங்கள் மட்டும்.
மேல் பக்கத்தில் சுவருக்கு வெளியே ஒரு மரமல்லி, சீன ஓவியம் ஒன்றின் உள்ளூர் நகல் போலப் பூத்தும் பூச் சிந்தியும். வேம்பு கப்பும் கவருமாய்த் துளிர்த்து நிற்கிற நேரம் இ.பி. காரர்களின் அரிவாள்களுக்கு சரியாகத் தெரியும். வந்து தரித்துவிட்டுப் போய்விடுவார்கள். தென் பக்கத்தில் ஒரு புங்கை, ஒரு குல்மோஹர், ஒரு மரமல்லி வைத்தோம். மரமல்லியுடன் தானாக ஒரு வேம்பும் அடர்த்தியாக. இரண்டு பருவங்கள் பெரும் அழகுடன் பூத்த குல்மோஹர் ஒரு கோடை மழையில் தூரோடு சாய்ந்துவிட்டது. கோவை வைகறை நஞ்சப்பன் வீட்டில் இருந்து எடுத்துவந்த நாற்று என்னை மாதிரி நெடுநெடுவென்று வளர்ந்துவிட்டது. பூத்தால், அதன் மஞ்சள் உதிர்வில் என்னுடைய உயர்நிலைப்பள்ளி நாட்களின் ஞாபகத்தை நான் சேகரித்துக் கொள்ள முடியும்.
இதைத் தவிர அரளி மூடு இருந்த இடத்தில் வளரும் எனக்குப் பிடித்த காளான் குடும்பம் இப்போதும் அவ்வப்போது உண்டு. போன மார்கழியில் எதிர்ப்பக்கத்துக் காலிமனையில் படர்ந்துகிடந்த பூசணிப் பூ வாசல் கோலத்துக்கு வரவில்லை. சாணி இருந்தால் அல்லவா சாணிப் பிள்ளையார்.
இவையெல்லாம் இருந்தாலும் போனாலும், ராஜு முருகன் சொல்கிற மரவட்டை, நாங்கள் சொல்கிற ரயில் பூச்சி எங்கள் வீட்டுப் படியோரம் இன்னும் ஊர்ந்துகொண்டே இருக்கிறது. பூக்களைப் போல, பூச்சிகளுக்கும் அதனதன் காலம். திருப்பாவை, திருவெம்பாவையுடன் ரயில்பூச்சியும். எண்பதாம் ஆண்டுகளில் நிலக்கோட்டை பெரியார் காலனி வாடகை வீட்டுப்படிகளில் நான்கைந்து வயதாக இருந்த எங்கள் பையனுக்காக் ஒருகவிதையில் ஊர்ந்த அது, இதோ இப்போது எங்கள் பேரன் ஆதிக்காக, இந்த வீட்டின் முன் வாசலில், புறவாசலில் எல்லாம் ஊர்கின்றன. எங்கெல்லாம் ஈரம் உண்டோ அங்கெல்லாம் அது உயிரின் அழகுடன் ஊர்ந்தபடி.
நீங்கள் ரயில் பூச்சி அல்ல. ஆனால் உங்களுக்கும் ஆயிரம் கால்கள் உண்டு. எங்கள் வீட்டுக்கு நாங்களும் எங்களின் ஈரமும் மட்டுமே அடையாளம் என அந்தக் கால்கள் அறிந்தே இருக்கின்றன.
உங்களுக்கு எல்லா மாதங்களும் மார்கழி.

 

1 comment:

  1. பூத்தால், அதன் மஞ்சள் உதிர்வில் என்னுடைய உயர்நிலைப்பள்ளி நாட்களின் ஞாபகத்தை நான் சேகரித்துக் கொள்ள முடியும்.

    ஞாபகங்களைச் சேகரிப்பது போல வேறெது சுவாரசியம்

    ReplyDelete