Thursday, 29 August 2013

முக நக - 15.









21.
நான் விதைக்கவே இல்லை.
என் மீது முளைத்திருக்கின்றன
எல்லாமும்.
*
நினைவுகளின் டிஸம்பர் பனி.
சொப்பனங்களின் போர்வையால்
மூடமுடியவில்லை
நடுங்கும் காயங்களை.
*
என் கையில் எடுத்தேன் அதை.
எடுப்பதற்கு முன் அது
சௌரஸ்யாவின் புல்லாங்குழலாக இருந்தது.
இசை பூத்திருந்தது
இரண்டுக்குமான இடைவெளியில்.
*
கோரைப்பற்களுடன் பாய்ந்து வந்தது.
கோரைப்பற்களுடன் பாய்ந்துசென்றுவிட்டது.
நான் இங்கேயேதான் நின்றுகொண்டிருக்கிறேன்
எந்தக் கீறலும் இன்றி.
*
அந்த நிலையத்தில் ஏறி
இந்த நிலையத்தில் இறங்கினேன்.
எந்த நிலையத்தை விட்டும்
எங்கோ தூரத்தில்
இருந்தது வீடு.
*
மணலைத் துடைத்துவிட்ட பின்
கடல் ஒட்டிக்கொண்டிருந்தது
அலை நுரைக்கிற
முத்தத்தில்.
*
தோட்டத்தில் பிடித்த வண்ணத்துப் பூச்சி.
என் மேல் பறக்கவிட்டுப் பார்த்தேன்.
செடியின் சிரிப்புச் சத்தம்
வெளியே.
*
மூங்கில் கழி மேல் ஏறிப் போகிறேன்.
பீர்க்கம் பூவில் அவள் படுத்திருக்கிறாள்.
*
ஒற்றைப் புறாச் சிறகு.
குனிந்து எடுத்தேன்.
வானிலிருந்து பார்க்க
அழகாக இருந்தது எங்கள் வீடு.
*
பேரங்காடிக் கண்ணாடிக் கதவுக்கு வெளியே
நிறைய காலணிகள்.
அவளுடையதைப் போலவே இருந்தன
அவளைப் போல இல்லாத ஒருத்தியின்
இரண்டு.
*
இந்த வரிகளை எல்லாம், 24.12.10 ல் எழுதியிருக்கிறேன். இவற்றில் இரண்டோ மூன்றோ கவிஞர் அறிவுமதியின் தைஇதழில் வெளிவந்த நினைவு. நான் எதையும் குறித்துவைக்கிற. கோப்பில் சேர்க்கிற பழக்கம் இல்லாதவன்.
 

%%%%%%%
 

Tuesday, 27 August 2013

முக நக - 14.






20.
என் பெரிய, சின்ன முட்களை
எதிர்ச் சுற்றுக்குத் திருகினார்கள்.
முன்னைவிடவும் துல்லிய நேரம்
காட்டியது என் கடிகாரம்.
வடக்குப் பிரகாரம் வழியாகப் போய்
மேலக் கோபுரவாசலில் என்னை
வெளியேறச் சொன்னார்கள்.
வடமேற்கு மூலையில்
வலது நடுவிரலால் திரிசமைத்துத்
தீ மேவிக்கொண்டிருந்தாள்
ஒளித்துவைக்கப்பட்ட தேவதை.
திக்குத் தெரியாமல் தொலையட்டும் என்று
அடர்வனத்துக்குள் அனுப்பினார்கள்.
வனமோ எனக்கு
வாசல் வாசலாகத் திறந்து காட்டியது.
என் சித்தம் கலங்குமாறு
பின் மண்டையில் தாக்கினார்கள்.
எந்தச் சமரசமும் அற்று
உண்மைகளை மட்டும் இதோ
உளறத் துவங்கிவிட்டேன் நான்.
%
இதை என்று எழுதினேன் என்று தெரியவில்லை.
ஆனால் 06/08/12க்கு அப்புறம் என்பது நிச்சயம்.

 ^^^^^^^^^^


Monday, 26 August 2013

முக நக - 13.










18.
நான் இன்று ஒரு நாய்க்குடை.
குவிந்துகிடக்கும் கட்டுமான ஜல்லிக்குள்
மழைக்கு ஒதுங்கி நுழையும்
ஒரு கிழட்டுப் பாம்பு.
மார்புக் காம்பில்
மழைத்துளி விழ
மல்லாந்து படுத்திருக்கும் பெண்.
சிதையில் பிணம் எரிய
மழையில் நனைந்தசையும்
இடுகாட்டு இருக்கலம் பூ.
மழை நிரம்பிய சாக்கடை நீரில்
இழுத்துச் செல்லப்படும்
காலற்ற பிளாஸ்டிக் பொம்மையின்
மாறாத முகச் சிரிப்பு.
நான் இன்று நான் அல்ல,
மழையின் மாறு வேடம்.
%
இதை 25.11.11ல் எழுதியிருக்கிறேன்.
அன்று மழை பெய்திருந்ததா, தெரியவில்லை.
பெய்திருக்கலாம். ஆனால் மழையைப் பற்றி
எழுதுகிற அன்றைக்கு கட்டாயம் மழை பெய்திருக்க
வேண்டிய அவசியம் இல்லை .
 
19.
இன்றைக்கான இருவாட்சிப் பூவில்
எவையெல்லாம் நான் பறிக்க முடியாதவை?
இன்றைக்கான முதல் குயில் கூவல்
எந்தத் திசைக் கிளை மறைவிலிருந்து ஒலிக்கும்?
இன்றைக்கான சங்கரியம்மாவின் கோலத்திற்கு
எத்தனை புள்ளி எத்தனை வரிசை?
இன்றைக்கான கவிதைகளை
வாசிக்கத் தரப் போகும் அனார் யார்?
இன்றைக்கான நிழலைத் தரப் போகும்
வெயில் எப்போது வரும்?
இன்றைக்குப் பொறுக்கக் கிடைக்கும்
ஒற்றைச் சிறகு எந்தப் பறவையுடையது?
இன்றைக்கு வாங்கும் கீரைக்கட்டுக்குள்ளிருந்து
வெளிவரப் போகும் ஆனந்தப் புழுவின் நிறம் என்ன?
இன்றைக்கு விரையும் 108ல் உயிர் உருட்டிய
கடைசிப் பகடையாக அசையும் தலை யாருடையது?
இன்றைக்குப் பேருந்து நிழற்குடையில்
அழுது உட்கார்ந்திருப்பாளா அந்த பிழியப்பட்ட பெண்?
இன்றைக்கு மகளிர் கல்லூரி வாசலில்
மல்லிகைப் பூ விற்பவளும்
அன்னாசிக்கீற்றுகள் விற்பவரும்
என்ன உரையாடிக் கொள்வார்கள்?
இன்றைக்குப் போகிற திருச்செந்தூர் ரயிலை
எந்தப் பேத்திக்கு எந்தத் தாத்தா காட்டிக்கொண்டிருப்பார்?
இன்றைக்கான ஹரிபிரசாதின் புல்லாங்குழல் எது?
இன்றைக்கான இளையராஜாவின் இசைக்குறிப்புகள் எவை?
இன்றைக்கான இந்த கேள்விகளுகளுக்கான
விடைகளை
இன்றைக்கே யாராவது சொல்லிவிடுவார்கள் அல்லவா?
%
இதை 04/04/11ல் எழுதியிருக்கிறேன்.
இப்போது எங்கள் வீட்டில் இருவாட்சி பூக்கவில்லை.
இந்தக் கீரைப் புழு பற்றி வேறெங்கோ எழுதிவிட்டேன்.
அந்த ஒற்றைச்சிறகு பற்றிய கவிதை, என் சமீபத்திய தொகுப்பில் வந்துவிட்டது. 

Wednesday, 21 August 2013

முக நக - 12.











ராஜு முருகன் இந்த வார வட்டியும் முதலும்பகுதியில் அவர் வர விரும்பும் வீடுகளில் எங்கள் வீட்டையும் குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னையில் முகவரி மட்டும் சொன்னால் போதாது. கால் டாக்ஸிக்காரர் கூட, ‘லேண்ட் மார்க் சொல்லுங்க ஸார்என்பார். நிலம் தான் அடையாளம். அதைத் தவிர நிலத்துக்கு வேறு என்ன அடையாளம். வாழும் கலை என்பது போல இது. வாழ்வதே பெரிய கலையாகிவிட்ட்து. இதில் என்ன வாழும் கலை. அதற்கு ஒரு பயிற்சி. வாழ்க்கையை விடப் பயிற்சி உண்டா?
அவர் குறிப்பிட்டிருக்கிறவைகளில் நந்தியாவட்டை இன்னும் பூ உதிர்த்துக் கொண்டு இருக்கிறது. பெரிய கிளைகளை வெட்டும்படியாயிற்று, செட்டி குரிச்சி பஸ்ஸில் எம்.ஆர். ராதா குரலில் கரகரவெனப் பேசியபடி, வெட்டுப்பட்ட இடது கையைத் தேங்காய்ப் பூத் துண்டால் மூடியிருக்கிற ஒருவர் வருவார். அவர் மாதிரி இருக்கிறது அது. வாசலில் இரண்டு பக்கமும் வளர்ந்து கிடந்த செவ்வரளிக்கு ஏதோ தாவரச் சீக்கு. ஒன்றை மூட்டோடு எடுத்துவிட்டோம். இன்னொன்று மீண்டும் இப்போது தளிர்த்துப் பூக்க ஆரம்பித்திருக்கிறது.
கருவேப்பிலை மரமும் அதன் மேல் படர்ந்து பூக்கும் இருவாட்சியும் இப்போது இல்லை. இந்தப் பக்கத்துக் கோடை இரவுகளின் இருட்டில் பரவிய அதன் வெகு தூர வாசம் எங்கள் இடது பக்கச் சன்னலின் விளிம்பில் ஒரு பல்லிமுட்டை ஓடு போல வெள்ளையாக அசைகிறது. அடுக்கு நந்தியாவட்டையிலும் பூச்சிதான். இப்போதைய நான்கு பூக்கள் சேர்ந்தால் பழைய பூ ஒன்றின் அளவுக்கு மலர்கிறது. செம்பருத்தி இருந்த இடத்தில் கை கையான சிவப்பு ஞாபகங்கள் மட்டும்.
மேல் பக்கத்தில் சுவருக்கு வெளியே ஒரு மரமல்லி, சீன ஓவியம் ஒன்றின் உள்ளூர் நகல் போலப் பூத்தும் பூச் சிந்தியும். வேம்பு கப்பும் கவருமாய்த் துளிர்த்து நிற்கிற நேரம் இ.பி. காரர்களின் அரிவாள்களுக்கு சரியாகத் தெரியும். வந்து தரித்துவிட்டுப் போய்விடுவார்கள். தென் பக்கத்தில் ஒரு புங்கை, ஒரு குல்மோஹர், ஒரு மரமல்லி வைத்தோம். மரமல்லியுடன் தானாக ஒரு வேம்பும் அடர்த்தியாக. இரண்டு பருவங்கள் பெரும் அழகுடன் பூத்த குல்மோஹர் ஒரு கோடை மழையில் தூரோடு சாய்ந்துவிட்டது. கோவை வைகறை நஞ்சப்பன் வீட்டில் இருந்து எடுத்துவந்த நாற்று என்னை மாதிரி நெடுநெடுவென்று வளர்ந்துவிட்டது. பூத்தால், அதன் மஞ்சள் உதிர்வில் என்னுடைய உயர்நிலைப்பள்ளி நாட்களின் ஞாபகத்தை நான் சேகரித்துக் கொள்ள முடியும்.
இதைத் தவிர அரளி மூடு இருந்த இடத்தில் வளரும் எனக்குப் பிடித்த காளான் குடும்பம் இப்போதும் அவ்வப்போது உண்டு. போன மார்கழியில் எதிர்ப்பக்கத்துக் காலிமனையில் படர்ந்துகிடந்த பூசணிப் பூ வாசல் கோலத்துக்கு வரவில்லை. சாணி இருந்தால் அல்லவா சாணிப் பிள்ளையார்.
இவையெல்லாம் இருந்தாலும் போனாலும், ராஜு முருகன் சொல்கிற மரவட்டை, நாங்கள் சொல்கிற ரயில் பூச்சி எங்கள் வீட்டுப் படியோரம் இன்னும் ஊர்ந்துகொண்டே இருக்கிறது. பூக்களைப் போல, பூச்சிகளுக்கும் அதனதன் காலம். திருப்பாவை, திருவெம்பாவையுடன் ரயில்பூச்சியும். எண்பதாம் ஆண்டுகளில் நிலக்கோட்டை பெரியார் காலனி வாடகை வீட்டுப்படிகளில் நான்கைந்து வயதாக இருந்த எங்கள் பையனுக்காக் ஒருகவிதையில் ஊர்ந்த அது, இதோ இப்போது எங்கள் பேரன் ஆதிக்காக, இந்த வீட்டின் முன் வாசலில், புறவாசலில் எல்லாம் ஊர்கின்றன. எங்கெல்லாம் ஈரம் உண்டோ அங்கெல்லாம் அது உயிரின் அழகுடன் ஊர்ந்தபடி.
நீங்கள் ரயில் பூச்சி அல்ல. ஆனால் உங்களுக்கும் ஆயிரம் கால்கள் உண்டு. எங்கள் வீட்டுக்கு நாங்களும் எங்களின் ஈரமும் மட்டுமே அடையாளம் என அந்தக் கால்கள் அறிந்தே இருக்கின்றன.
உங்களுக்கு எல்லா மாதங்களும் மார்கழி.

 

Tuesday, 20 August 2013

முக நக - 11.








இன்று சிட்டுக் குருவிகள் தினமா?
காணாமல் போனவர்கள் அறிவிப்பு மாதிரி இருக்கிறது. இந்த தினத்தின் ஞாபகம் எல்லாம் இல்லாமல் இன்று நான் ஏழு சகோதரிக் குருவிகளைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அவை அடைக்கலாங் குருவிகள் எனும் இந்தச் சிட்டுக் குருவிகளின் பெரிய வடிவம். முன்பெல்லாம் இந்தப் பக்கத்தில் அதிகம் பார்க்க முடியும். தரையில் ஏழெட்டாகக் குதித்துக் குதித்து இரை தேடும். பூனைகளுக்குப் பயந்து அவை இடும் கூட்டுக் குரலில் ஒரு தினத்தின் பிற்பகல் அமைதி நடுங்கும். அதிகம் உயரமற்ற வீட்டுச் செடிகளில், மரங்களில் உட்கார்ந்து சத்தமிடும். பறக்கும். ஒரு வீட்டின் முற்றத்தில் பறவைகளுக்கான இடத்தை அவை தன் சிறகுகளால் கருணையுடன் நிரப்பும். நாம் மூச்சு விடுகிற காற்றைத் தவிர, இப்படிச் சிறுபறவைகளின் குறுக்கே பறக்கும் சிறகுகளால் வகிர்ந்து செல்லப்படும் காற்றின் நுட்பமான ஒருவிர்ர்ர்ர்நமக்குத் தேவை. அதை அந்த ஏழு சகோதரிக் குருவிகள் எங்களுக்குச் செய்தன.
அப்புறம் மைனாக்கள். ஒரு நாளை மைனாக்களின் குரலைக் கொண்டு துவக்க எங்களால் முடிந்தது. எளிய வாழ்வின் தாழ்வாரங்களில் எளிய பறவைகளின் நிபந்தனையற்ற குரல்கள் நிரம்பிவழிகின்றன. நந்தியாவட்டை போன்ற, வாசனையற்ற வெண்பூக்கள் தவிர வேறு எந்தத் தாவர வசீகரமும் அற்ற ஒரு குறு மரத்திற்கு அருளப்பட்டவை மைனாக்களும் கடுத்தான் எறும்புகளும்தான். இந்தக் கடுத்தான் எறும்புகள், பனிவரைகளில் சேகண்டி அடித்து வரிசையாகச் செல்லும் பிக்குகள் என, தன் வாழ்வு தீரும் வரை நந்தியாவட்டையில் ஊர்ந்தபடி இருக்கின்றன. உங்களுக்குத் தூக்கம் தப்பிய ஒரு பின்னிலவு நிசியில், உங்களின் தனிமையை வடித்துக் கொள்ள, உங்களைத் தொந்தரவு எதுவும் செய்யாத உயிர்ப்புள்ள நகர்வு எதுவும் அவசியப்பட்டால், நீங்கள் அவற்றை நம்பலாம். அவை அப்போதும் வரிசை குலையாது ஏகிச் செல்லும்.
இப்போது சமீபமாக மைனாக்களும் அருகி வருகின்றன. கண்ணில் படும் மைனாக்களிடமும் ஏதோ ஒரு ஊட்டச் சத்துக் குறைவு. அவற்றின் கண்களில் காணாமல் போன மண்புழுக்களைப் பற்றிய ஏக்கம் உண்டு. இன்னும் சிறிது காலத்தில், அதன் அலகு நுனி மஞ்சள் பொட்டும் உதிர்ந்து போகுமெனில் எவ்வளவு துயரமானது. மைனாக்களின் சாயல் அற்ற மைனாக்களைப் பற்றிய முதல் கவிதையை எழுதும் பேனா எனக்குக் கிடைத்துவிடக் கூடாது.
இப்போது ஒருவகைக் கருங்குருவிகள் தென்படுகின்றன. தேன் சிட்டுகளை விடச் சற்றுப் பருமனானது. வாழ்வின் முழு ஆனந்தமும் வசப்பட்ட அந்தவிட்டு விடுதலைஅவற்றிடம் இருக்கிறது. வால் நுனியை அவ்வப்போது உயரத் தூக்கித் தணிக்கின்றன. அதன் எடையின் சமன், பறத்தலின் விசை அந்த வாலசைவில் இருக்கலாம். இந்தக் கருப்பு உற்சாகம் நமக்கு இன்னும் எத்தனை தின்ங்களுக்கு எனத் தெரியவில்லை.
ஒரு வருட்த்தின் 365 தினங்களையும் நாம் 365 பறவைகளின் தினங்களாக அறிவிக்க நேர்ந்துவிடக் கூடாது என்பதே என் சிட்டுக் குருவிகள் தினப் பிரார்த்தனையாக இருக்கிறது. இது அப்படியொன்றும் எளிய பிரார்த்தனை அல்ல.

Monday, 19 August 2013

முக நக - 10.









15.
சமீபத்தில் யானைக் கனவுகள் எதுவும் வரவில்லை. செய்தி ஒளிபரப்புகளில் தான் அடிக்கடி யானைகள் அடிவாரங்களுக்கு இறங்குகின்றன. இரண்டு தினங்களுக்கு முன் இருபத்தாறு எண்ணிக்கையில் ஒரு யானைக் குடும்பம் விளைநிலங்களின் நடுவில் நிற்பதையே அந்தச் சிறுவன் பார்த்திருக்க வேண்டும். அவன் கனவில் அன்றிரவு எத்தனை யானைகள் வந்தன எனத் தெரியவில்லை. சாமி கும்பிட வந்த இடத்தில் கோவில் யானையைப் பார்த்ததும் அவன் தன்னுடைய கனவில் வந்த யானையை அம்மாவின் முன் பிளிற விடுகிறான்.
அம்மா, யானை வந்து நம்ம வீட்டுக் குளியல் அறையை எல்லாம் உடைச்சுப் போட்டுட்டுதும் மா
இந்த அம்மாக்களே இப்படித்தான்.
கிஷோர். பிள்ளையாரை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது
கிஷோர் இன்னும் யானைகளிடமே இருந்தான். பக்கத்தில் தெரியும் கோவில் யானைக்கும் அவனுடைய சொப்பனத்தில் வந்த யானைக்கும் இடையே அவனுடைய கேள்விகளின் வனம் இருந்த்து.
யானையை யாரும்மா முதலில் பார்த்தாங்க?’
யானைக்கு யாரு யானைன்னு பேரு வச்சாங்க?’
இந்த யானைக்கு என்ன பேரு?’
இதோட அம்மா காட்டுல தானே இருப்பாங்க?’
இதைத் தேடிக்கிட்டு இதோட அம்மா வந்தா நம்மை ஒண்ணும் பண்ணாதா?’
யானை செத்து போகுமா?’
யானைக்குப் பக்கத்தில ரெண்டு அக்கா பூக் கட்டிக்கிட்டு இருக்காங்களே அவங்களை ஒண்ணும் பண்ணாதா? அவங்க ஃப்ரண்டா?’
நீங்க யானை மேல போயிருக்கீங்களா?’
தீபாவளிக்கு யானை நம்ம வீட்டில துட்டு வாங்க வந்துதுல்லா. அதையெல்லாம் என்ன பண்ணும்?’
யானைக்கு ஸ்கூல் உண்டா?’
யானை காலை ஏன் தூக்கிக்கிட்டே இருக்கு. புண்ணு இருக்கா?’
ஏன் சங்கிலியில கட்டிப் போட்டிருக்காங்க?’
யானை எங்க குளிக்கும்? நெத்தியில துண்ணூறு எல்லாம் வச்சிருக்கு. அதுவும் சாமி கும்பிடுமா?’
இத்தனை கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதிலைக்கூட அவனுடைய அம்மா சொல்லவில்லை.
யானைகள் தண்ணீர் இல்லாமல் மட்டுமா கீழே இறங்குகின்றன? எனக்கு என்னவோ, கேள்விகளுக்கு பதில் இல்லாவிட்டாலும் இறங்கும் என்று தோன்றுகிறது. கிஷோர் என்று அழைக்கப்படும் அந்த நான்கைந்து வயதுப் பையனைப் பார்த்தால் அந்த 26 யானைக்குடும்பத்தில், அம்மாவின் நான்கு கால்களுக்கு ஊடாக, குட்டைத் துதிக்கையுடன், பால்குடி மாறாத களையுடன் வந்ததே, அந்தக் குட்டி மாதிரி இருக்கிறது.
குட்டி என்றால் என்ன? அதற்கு வேண்டிய குருத்து மூங்கிலை அது வளைத்துக் கொள்ளாமலா போகும்

Sunday, 18 August 2013

முக நக - 9.









14.

கோடை துவங்கிவிட்டது என நினைக்கிறேன். அந்தோணி தென்படுகிறாள்.
அவளை அந்தோணி என்கிறார்கள். கிறுக்கி என்கிறார்கள். இல்லை காரியக்காரி என்கிறார்கள். மூன்றாம் மனிதர், ஏன் இரண்டாம் மனிதர்கள் கூட யார் என்று நிதானிக்க என்னால் இயலாது. யாராலும்தான். நான் வேறுவிதமாக அவளை வரைந்திருக்கிறேன். அவள் வந்தால் கடும் கோடை அல்லது தண்ணீர்ப் பஞ்சம் வரப் போகிறது. அதை முன்னுணர்த்துகிறவள் ஆகவே அவள் வெயில் காலங்களில் நடமாடுவாள். பழுத்து உதிர்ந்த வேப்பிலைகளுக்கு ஊடாக அவளுடைய ஒற்றையடி பாதையை இட்டுக் கொள்கிறாள். தண்ணீர் மட்டம் குறைந்துவிட்ட, மஞ்சணத்தியும் மருதாணியும் பூத்திருக்க்கிற கல் வெட்டாங்குழியில் வாழும் நூற்றாண்டு ஆமை மேலேறி வந்து அவளுடன் பங்குனி இரவுகளில் வாடத் துவங்கியிருக்கும் தும்பைச் செடிகளுக்கு இடையில் பேசுவதாக நான் நம்புகிறேன்.
தண்ணீரில் குதித்தோ அல்லது தாகம் தீராது தவித்தோ இறந்துபோன ஒருத்தியின் கண்கள் அவளிடம் உண்டு. அவள் எப்போதும் கைகளில், இடுப்பில் இரண்டு மூன்று ஜவுளிக்கடைப் பைகளை வைத்திருக்கிறாள். அதில் சிறியதும் பெரியதுமாக காலி தண்ணீர் பாட்டில்கள்,. யார் வீட்டு வாசலிலும் வந்து அவள் கொடுப்பாள். நம்மைப் பார்த்துக் கும்பிடுவாள். பதிலுக்கு நாம் கும்பிட்டால், கூடாது என்பாள். நாம் கும்பிட்டதற்கு அவள் மன்னிப்புக் கேட்பாள். பசிக்கிறது என்றோ சாப்பாடு வேண்டும் என்றோ கேட்டதில்லை. குழாயில் தண்ணீர் பிடித்துக் கொள்கிறேன் என்பதே வேண்டுதல். நம் ஒப்புதலுக்கு நம்மை வணங்குவாள். ஆற்றுத் தண்ணீரா உப்புத் தண்ணீரா என நம்மிடம் உறுதிசெய்து கொள்வாள். தன்னிடம் இருக்கும் அத்தனை பாட்டில்களையும் கழுவி, நிரப்பிப் பைகளில் வைத்துக் கொள்வாள்.
வெயில் அதிகமாக அதிகமாக, இரண்டு மூன்று தடவைகள் கூடப் பிடித்துச் செல்வாள். வழியில் எங்காவது எதிர்ப்பட்டால், அவ்வளவு பைகளையும் கீழே வைத்துவிட்டுக் கும்பிடுவாள். கோடைகாலம் முடிந்தால் கண்ணிலேயே பட மாட்டாள். ஒரு இரவு நம்மிடமிருந்து வெயிலை உருவிக்கொள்வது போல அந்தோணியைக் காலம் உருவி அப்புறப்படுத்திவிடும்.

இன்று அந்த மாமரத்தடியில் அந்தோணியைப் பார்த்தேன். மேலே ஏறிட்டுப் பார்த்துக்கொண்டே நின்றாள்.ஒரு பத்து நிமிட தூரத்தில் நான் அவளைக் கடக்கிறவரை அப்படியே பார்த்துக்கொண்டு நின்றாள். கழுத்து கூட வலியெடுத்திருக்கும்.
என்ன அந்தோணி. மாங்கா பறிக்கப் போறியா?” என்றேன். உதட்டில் கையை வைத்து என் பேச்சை அடக்கிவிட்டு, என்னையும் மேலே பார்க்கச் சொல்லித் திசையைக் காட்டினாள்.
முக்கு வீட்டு மா மரத்தில், இரண்டு ஜாண் நீளக் காம்பில் ஒரு மாம்பழம். தலை கீழாகக் காம்பில் தொங்கிக் கொண்டு, ஒரு அணில் கடித்துக் கொண்டிருந்தது. கிட்டத் தட்ட பாதி சாப்பிட்டுவிட்ட நிலை. அசையாமல் அந்தோணி மேலே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

அணில் கடித்துக்கொண்டிருப்பது கூட திரண்டு வரும் கோடை காலத்தைத் தான் போல.

Saturday, 17 August 2013

முக நக - 8.











13.

அந்தத் தெருப்பக்கம் போய் அதிக காலம் ஆயிற்று.

எப்போதும் ஒரு அரசு வாகனம் காத்துக் கிடக்கும் அந்த வீட்டை எல்லோர்க்கும் தெரியும். சொந்த வீடு. மாடியும் கீழுமாகப் பெரியது. அவ்வளவு பெரிய வீட்டில் முன்னால் பின்னால் எந்த மரமும் கிடையாது. ஒரு செடிகொடி இல்லை. புல் பூண்டு முளைத்தால் கூடக் கருகிப் போய்விடும் ஒரு பாழ்மை. உட்காரக் கிளையின்றி, காகம் மேல்நிலைத் தொட்டியில் இருந்துதான் கத்த வேண்டும். வீடு தன் அத்தனை காயங்களையும் நக்கிக்கொண்டு வெயிலில் படுத்திருக்கும்.

அதன் பிரசித்தம் சற்று உவர்ப்பானது. வீட்டு அதிகாரி கொஞ்சம் அப்படி இப்படி. அந்த ஊரில், இந்த விடுதியில் என்று நிறையப் பேச்சு. இப்போது அவரிடம் அடி உதை படுவது அவருடைய இரண்டாம் தாரம் என்கிறார்கள். ஒரு வதைபடும் மிருகம் போல அந்தப் பெண் அலறும். உடுத்தின உடையோடு ரத்தக் காயத்தோடு தெருவில் ஓடும். முன் பல் தானாக உடைந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று பிள்ளைகளோடு காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறது. ஒரு தடவை மருந்தைக் குடித்திருக்கிறது. அவரை ஒன்றும் செய்யமுடியவில்லை.

வீட்டில் என்ன நடந்தாலும் யாருக்கும் தெரியாது. தெரிந்தாலும் அவருக்குக் கவலையில்லை. சஃபாரி அணிந்து அலுங்காமல் அலுவலக வாகனத்தில் போவார், வருவார். வேலையில் கெட்டிக்காரர். துறையில் பெயரும் செல்வாக்கும் அதிகம். மாலையும் சால்வையும் பூச்செண்டுமாக பெட்டியைத் தூக்கிக்கொண்டு வாகன ஓட்டுநர் பின்னால் போவதை அவ்வப்போது பார்க்க முடியும். அந்த மாலையைத் தூக்கி எறிந்திருந்தால் கூட நான்கைந்து வாடாமல்லி, இரண்டு கேந்தி என்று தானாக முளைத்திருக்கும்.

நீண்ட இடைவெளிக்குப் பின் இன்று போகும் போது அந்த ஆச்சரியம் நிகழ்ந்திருந்தது . வாசலில் பாத்தி போல நித்யகல்யாணிப் பூக்கள். சுற்றுச் சுவருக்கு வெளியே அசைந்து தெரியும் கட்டிகட்டியான கேந்திப் பூக்கள். மாடிக் கதவு திறந்திருந்த்து. வெளிப்பக்கம் உலரும் துணிகள். அசையும் நைலான் கொடி. நான்காவது படியில் ஒரு பூனைக்குட்டி. மீண்டும் பூஞ்செடிகளைப் பார்த்தேன். முதல் தலைமுறைத் தாவரம் என்று பூக்களில் எழுதப்பட்டிருந்தது .

சில சமயங்களில் எளிதில் விடை கிடைத்துவிடுகின்றன. கூரியர் கொடுப்பவர் அந்த வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தினார். எல்லாத் தகவல்களும் அவருடையவை. மாடியில் இருப்பது அந்த அதிகாரியின் தங்கை. டீச்சர் வேலை. சொற்ப வயதில் சமீபத்தில் கணவர் இறந்து போனார். சார் இன்ஃபுளுயன்ஸில் தங்கச்சிக்கு இங்கே ட்ரான்ஸ்ஃபர் வாங்கி தன் வீட்டு மாடியிலயே குடிவச்சுட்டார். பார்த்தாலேயே தெரியுமே. முன்னால பூஞ்செடி அது இதுண்ணு. எல்லாம் அந்த அம்மா வச்சதுதான். விடிஞ்சதும் இந்தப் பக்கம் நீங்க வந்தா பாக்கலாம். ஒண்ணு விடாம எல்லாத்துக்கும் தண்ணி ஊத்திக்கிட்டு இருப்பாங்க’.

நான் தண்ணீர் வார்க்கிற மாடி வீட்டுப் பெண்ணைக் கற்பனை செய்துகொண்டேன். கூடவே செடிகளோடு செடிகளாக அந்தக் கீழ் வீட்டுப் பெண்ணின் முகத்தையும், அதில் இனிமேல் வந்து சேரப் போகும் சிரிப்பையும்.

உடைந்த பல்லோடு சிரிக்கக் கூடாது என்று யார் சொன்னார்கள்?

Friday, 16 August 2013

முக நக - 7.










12.

எல்லோர்க்கும் தானே பெய்யும். பங்குனி மாத அதிகாலை என்றால் கூட. மழை வராது என்று நினைத்தேன். மழை வருவது போல இருக்கும் போது அப்படி நினைத்துக் கொள்வது புதியதில்லை. சென்ற வாரம் அப்படி நினைத்து, நடை போய், முற்றிலும் நனைந்திருந்தேன்.
வகுப்பறைகளில் இருந்து, ஓடும் ரயிலில் இருந்து, மருத்துவ மனை தாழ்வாரங்களில் இருந்து, திரைப்பட அரங்குகளில் இருந்து பார்த்த மழை போல, கட்டுமானம் ஆகிக்கொண்டு இருக்கும் நல் மேய்ப்பர் ஆலயத்தின் பூசப்படாத சுவர்களுக்குள் இருந்து பார்த்த மழை அது. இன்று மீண்டும் நனைய விரும்பவில்லை.
வீட்டுக்குத் திரும்புங்கள் என்பது போல, நரைத்த மீசை ஒதுங்க என்னைப் பார்த்த அவரிடம் முந்திய இரவுக் காவல் மிச்சம் இருந்தது. தோல்பட்டியைப் பிடித்துக்கொண்டு நின்றார். கனத்த உடலுடன் தரை முகர்ந்து ஒரு ஓநாய் போல தன்னுடைய இடத்தை அது தேர்ந்தெடுத்தது. அவருடைய காக்கிச் சட்டையில் மழைத்துளிகள் கனத்து ரவைகள் போலப் பாய்ந்தன. அவர் தெற்குப் பக்கம் கருத்த வானத்தைப் பார்த்தார். இப்போது அது பின்னங்கால்களில் தணிய அமர்ந்திருந்தது.
நான் அதிகம் நனையவில்லை. அடர்த்தி குறைந்துவிட்ட தலைமுடிக்குள் துளி உருண்டு நெற்றிக்கு இறங்கியது. நான் வீட்டில் அல்ல, மழையில் நுழைந்துகொண்டு இருந்தேன். மழை பார்த்தல் ஒரு அனுபவம். கனமழையின் ஆழ்ந்த ஆன்மீகம் தனியானது. மழை பார்க்க நீங்கள் துவங்கிய மறுகணம் மழை உங்களைத் தொலைத்துவிடும். காணாமல் போக்கிவிடும். நீங்கள் இல்லாமல் இருப்பீர்கள்.
முக்கால் மணி நேரம் மழை மட்டும் இருந்தது. ஓயவில்லை. முதலில் நனைந்த தெருவில், தன்னை விதைத்துக்கொண்டவள் கீரை விற்கிற கணவதி. அவளுடைய அறுபது சொச்சம் வயதும் கீரையுடன் நனைந்திருந்தது. அடுத்து சத்தம் கொடுத்து இரும்புக் கதவு வழி, பால் பைகளை நீட்டியவர் மணி. அவருடைய வலது காலில் இன்னும் கட்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட கால் பாதத்தை இழக்க வேண்டிய ஆபத்து இருந்தது. தப்பியிருந்தார். ஒரு பதினைந்து நிமிடங்களுக்குப் பின், நந்தியாவட்டையின் கீழே இருந்து, தன்னுடைய மூன்று சக்கர சைக்கிளை நிறுத்தி, தினசரிகளை என் பக்கமாக வீசிவிட்டு, ராஜா கைகளினால் பெடல் செய்தபடி, அடுத்த வாசலுக்கு நகர்கிறார்.
இதுவரை பார்த்துக் கொண்டிருந்த மழையை இனிமேலும் பார்க்க இயலாது.
எல்லோர்க்கும் எதற்குப் பெய்கிறது மழை?

Thursday, 15 August 2013

முக நக - 6.










11.
என்னுடைய கைபேசியில் சிறு பழுது. நீக்கக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன். ஒரு தகப்பன் தன் எட்டுவயதுப் பெண் குழந்தைக்குக் கைக் கடிகாரம் வாங்கிக் கொடுக்க வந்தான். 189/- ரூபாய் விலைக்கு அழகழகான சீனத் தயாரிப்புகள். தகப்பன் தன் மகளின் தேர்வுக்கே விடுகிறான். ஏழு எட்டை நிராகரித்து, இரண்டு கடிகாரங்களில் ஒன்றைத் தேர்ந்து எடுத்து அப்பாவிடம், ‘இது நல்லா இருக்கா ப்பா?’ என்று ஒப்புதல் கேட்கிறது. காரில் வந்திருப்பார்கள் போல. இவள் கடிகாரத்தைப் பார்த்ததும் தனக்கும் வேண்டும் என அவளுடைய தம்பியும் கேட்க. தகப்பன், அக்கா, தம்பி வருகிறார்கள். அக்காவுடையது போலவே வேண்டும் என்கிறான் தம்பி. அழவில்லை. பிடிவாதம் பிடிக்கவில்லை. ஆனால் உறுதியாக.

தகப்பன் விலகி நிற்க, அக்கா தன் தம்பியிடம், உரையாடத் துவங்குகிறாள். அக்கா கையை விட அவனுடைய கை குட்டியாம். அதனால் குட்டிக் கடிகாரம்தான் நன்றாக இருக்குமாம். கடைக்காரருக்கு ஏற்கனவே மலர்ச்சியான முகம். அவர் மேலும் சில சிறிய கடிகாரங்களை கண்ணாடித் தடுப்பில் வைக்கிறார். இது நன்றாக இருக்கும் உனக்குஎன்று அவன் மணிக்கட்டில் வைத்துப் பார்க்கிறாள். நல்லா இருக்கா?’ என்று தம்பியிடம் கேட்கிறாள். அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது தலையை ஒப்புதலாக அசைக்கையில்.
தகப்பன் விலை கேட்கவில்லை. அக்கா கேட்கிறாள். நைண்ட்டிஎன்கிறார் விற்பனையாளர். மணிக்கட்டில் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவன், ‘நைண்ட்டின்னா தொண்ணூறு தானே ப்பாஎன்கிறான். நான் அவனுடைய உச்சிச் சிகையைக் கலைத்து விடுகிறேன்.

இவ்வளவு பேசி, தீர்மானித்து, தேர்ந்தெடுத்து அந்தச் சிறுமி இதுவரை செய்தது எல்லாம் பெரிதில்லை. அப்பா கொடுத்த ருபாயை வாங்கிக் கடைக்காரரிடம் கொடுக்கிறது. வாங்குகிறவர் கைவிரல்களில் ஒரு விரல் நகத்தில் ரத்தம் கட்டி நீலமாக இருக்கிறது.
கையில் அடிபட்டுவிட்டதா அங்க்கிள்என்று கேட்கிறது. சரியாப் போச்சு அதெல்லாம்’ - விசாரிப்புக்கு பதில் சொல்லும் அவர் முகம் கனிந்து நெகிழ்கிறது..

எல்லாம் சரியாகத்தானே போகும், இப்படி அக்கறையாகக் கேட்க ஒரு எட்டு வயதுச் சிறுமி இன்னும் நம்மோடு இருக்கும் போது.

 

Wednesday, 14 August 2013

முக நக - 5.









10.
மனிதர்கள் சில சமயங்களில் நாயும் பூனையும் ஆகிவிடுகிறார்கள்.
அந்த பேரங்காடி நுழைவுப் பகுதியில் நிற்கிற காவலரும்
கருப்பு இன்னோவா வண்டியைக் குட்டி யானை மாதிரி
அதற்கு முன்னர் நிறுத்திய ஓட்டுநரும் அப்படிச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். காவலர் மிகவும் தயவாகவே, ‘கடைக்கு எதிராக நிறுத்தாமல் கொஞ்சம் தள்ளி நிறுத்தமட்டுமே சொன்னார். அவர் வயதும் அவருடைய வாழ்வின் தோல் சுருக்கமும் தயவாகப் பேசும்படியே வைத்திருந்தன. ஓட்டுநர் இளவட்டம். ரத்தத்தில் சூடு, வெதுதுப்பு அதிகம். எடுத்த எடுப்பில்,
உங்க அப்பன் வீட்டு இடமா?’ என்றுதான் பேச்சை ஆரம்பித்தார். நான் வேறு ஒரு காரியமாக அந்தப் பக்கம் போனவன். பேரங்காடிக்கு அடுத்த மாடியில் எனக்கு ஒரு வேலை இருந்தது. பேரங்காடி காவலர், என் பக்கம் திரும்பி, ‘பாருங்க. நான் என்ன சொல்லிவிட்டேன். இவ்வளவு கோபப்பட?’ என்று என்னிடம் சொல்கிறார்.
ஆமா. நானும் பார்த்துகிட்டுதான் இருக்கேன்என்று மாடி ஏறுகிறேன். நாம் எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கிறவர்கள் தானே.
நான் மாடி ஏறும் போது அந்த மணிச்சத்தம் கேட்கிறது. அந்த வடக்கத்திப் பையன் தோளுக்குப் பின்னால் உயர்த்தி இருக்கும் கையில் பலூன்கள் போல பஞ்சு மிட்டாய பாக்கெட்டுகள் கொத்துக் கொத்தாகத் தொங்க,
காவலரிடம்வேண்டுமாஎன்று கேட்கிறான். சின்னப் பிள்ளையா டே, நான்?’ என்று வேண்டாம் என்பதைச் சிரித்துச் சொல்கிறார். நான் மிக அழகாக மினுங்கும் ரோஸ் கலர் பைகளைப் பார்த்தபடி மேலே போகிறேன். ஒரு பத்து நிமிஷத்தில் என் வேலை முடிந்து படியில் இறங்குகிறேன்.
பஞ்சு மிட்டாய் விற்கிற பையன், அந்த இன்னோவா கார் ஒட்டுநர் பக்கம் நிற்கிறான். சண்டை போட்ட முகம் இவனுடையதா என்கிற அளவுக்கு ஓட்டுநர் இருக்கையில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டு, முதலில் ஒரு பஞ்சு மிட்டாய் பையைப் பிய்க்கிறார். மறுபடியும் இன்னொரு பையைப் பிய்கிறார். பிய்க்கும் போது மேலிருந்து கீழ் வரை பஞ்சு மிட்டாய் பைகள் கொடி மாதிரி அசைக்கிறது. ரூபாயைக் கொடுக்கிறான். ஒன்றைத் தான் வைத்துக் கொண்டு, இன்னொரு பஞ்சு மிட்டாய்ப் பையை, அந்த வடக்கத்திப் பையனிடம் , ‘அந்த தாத்தாகிட்டே கொடுத்திருஎன்று பேரங்காடி வாசலில் நிற்கிற காவலரை அடையாளம் காட்டிச் சொல்கிறார்ன். நான் கொடுத்தேன்னு சும்மா சொல்லுஎன்று பேரங்காடி திசையைப் பார்த்துக் கொண்டே சிரிக்கிறார்.
மனிதர்கள் சில சமயங்களில் தாத்தாவும் பேரனும் ஆகிவிடுகிறார்கள்..
 

Tuesday, 13 August 2013

முக நக - 4.









9.
மெதுவாக நடக்கிறேன்.
இன்று நான் மெது.
*
எனக்குத் தெரியவில்லை
ஆனால்
சூரியன் உதித்திருக்கிறது.
*
மைதானம் காலியாக.
மைதானம் நிரம்பி.
*
ஒரு பெரிய கல்
ஒரு சின்னக் கல்லுடன் கிடக்கிறது
பெயர்ந்து வந்த
பெருமலை நினைத்து.
*
இன்னொரு புல்லுடன்
உரசாத புல் இல்லை
காற்றில்.
*
தீயில் மட்டுமா
கங்கிலும் பாயலாம்.
*
நிலம் கீழ்
நதி நீ(ர்).
*
வெப்பம் உண்டு
உப்புக் கடல்
உள்.
*
தடாக நீர்
நலுங்குவதில்லை
தாமரை மலர்கையில்.
*
காயங்கள்
நண்பனின் துரோகத்தை.
தழும்புகள்
நண்பனை மட்டுமே.
*
ஆதார் அட்டையை நான்
வாங்கவும் இல்லை.
வாதாங் கொட்டையை நான்
பொறுக்கவுமில்லை.
*
ஒரு உப்புக்கல்
ஒரு உதிர்ந்த வேப்பிலை.
இடையில் நான்.

Monday, 12 August 2013

முக நக - 3










7.
எல்லோரிடமும் ஒரு பைத்தியக்காரன் இருக்கிறான். என்னிடமும் உண்டு. அவன் என்னை விடவும் உண்மையானவன். அதனால் உண்மையான பைத்தியங்களை எனக்கு எப்போதும் பிடித்துப் போகிறது. பவித்திரன் தீக்குன்னியின் அப்பா பைத்தியம். அம்மா வேசி. பவித்ரன் பெரும் மலையாளக் கவிஞன்.
எனக்கு திரவியச் சித்தப்பா. வேலாம்மா அத்தை இருவரும் அப்படி. இன்று பார்த்தவல் வேலம்மா அத்தையாகவே இருக்கட்டும். ஏற்கனவே அவளைப் பற்றி அங்கங்கே சொல்லியிருக்கிறேன். சூரியன் கிரணங்களுடன் அவள் மிகக் கூர்மையான வசைகளை நிறையக் காலைகளின் மேல் பரப்புவாள். நமக்கு எவை மிக மோசமான கெட்ட வார்த்தைகளோ அவை அவளுக்கு அன்றாடச் சொற்கள். சமீபத்தில் அவளுடைய சமன் மிகவும் குலைந்திருக்கிறது. இப்படி உச்சம் அடைந்து அப்புறம் அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். மலையின் அந்தப் பக்கம் இறங்கிவிடுவார்கள் போல.
இன்று காலை, அல்லது இன்று காலையும் அவளைப் பார்த்தேன். வழக்கமாக சிறுசிறு பாத்திரங்கள் பிதுங்கும் துணி மூட்டை இருக்கும். ஒரு தடவை புனித தோமையார் ஆலயம் பக்கம், அவள் ஒரு பழைய தண்ணீர் பாட்டிலைச் சரித்து வாய் கொப்பளித்துக் கொண்டு இருந்ததுண்டு. இன்று எங்கிருந்து அவளுக்குக் கிடைத்ததோ, மூடியில்லாத, உபயோகித்துத் தூக்கி எறியப்பட்ட பெரிய மிட்டாய் ஏனம் ஒன்று. இன்னொன்று அதை விடச் சற்றுச் சிறிய நீல நிற தண்ணீர் பாட்டில். இரண்டிலும் தண்ணீர் இருந்தது. அவள் ஒரு குடத்தை வைப்பது போல அந்த பெரிய பாத்திரத்தை வைத்திருக்கிறாள். கிராமத்துப் பொதுக் கிணற்றில் இருந்து அவளுடைய இருபதுக்களில் தண்ணீர் எடுத்து வரும்போது ஆலம் பழம் உண்டு பறந்த கிளிகள் சிறகடிப்பை மறந்திருக்கும். அப்படி ஒரு சாய்ந்த இடுப்பு. குடம் வைத்த கவனம். அவள் எதிரே வரும் என்னையும், யாரையும் கவனிக்கவில்லை. அந்த உள்ளடங்கிய பாதையின் இரு புறமும் வளர்ந்து தரையோடு கிடக்கும் காட்டுச் செடிகளுக்கு அங்கங்கே நின்று தண்ணீர் ஊற்றுகிறாள். எல்லாச் செடிகளுக்கும் ஊற்றவில்லை. அவளிடம் ஒரு தேர்வு இருந்தது. ஏதோ ஒரு செடியை மட்டும் இடுங்கிய கண்களால் அவள் தேர்ந்தெடுத்து நகர்கிறாள். அப்புறம் இடுப்புத் தண்ணீரை சிறு பாட்டிலில் மாற்றி, அதிலிருந்து, ஒரு வைத்தியர் இத்தனை வேளை சூரணம் என்று பத்தியம் சொல்வது போல ஊற்றுகிறாள். நகர்கிறாள். மறுபடி ஊற்றுகிறாள். நான் அவள் அப்படித் தேர்ந்தெடுத்த தாவரம் எது என அறிய விரும்பவில்லை. அத் தாவரமாக இருக்க விரும்புகிறேன். என்னால் இன்னொரு பைத்தியமாக இருக்க முடியாது. ஏன் எனில் ஏற்கனவே ஒருவனாக இருக்கிறேன்.
 
8.

உங்கள் ஊரில் ஆறு இருக்கிறதா? இருந்தால், ஆறு சற்றுப் பெரியது எனில் ஆற்றுப் பாலமும் இருக்கும். நீங்கள் கவனித்திருப்பீர்கள். அனேகமாக அந்த ஆற்றுப் பாலத்தின் மையத்தில், ஒரு வில்லின் வளைவில் நாணேற்றிய அம்பு நடு நின்று பாயுமே அந்த இடத்தில்,
யாராவது ஒருவர் நிற்பார்கள்.
குனிந்து பாலத்துக்குக் கீழ் ஓடும் ஆற்றைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். ஆற்றின் மேல் தாழப் பறக்கும் ஒரு மீன்கொத்தி கூட அவரின் கவனத்தைச் சிதறடித்து
விடமுடியாது. அது ஒரு வகை தியானமற்ற தியான நிலை.
அவர் ஆற்றிடம் எதையோ சொல்லிக்கொண்டு இருப்பார். ஆறு மிகுந்த கீழ்ப்படிதலோடு கேட்டுக் கொண்டிருக்கும். அதே போல, ஆறும் எதையாவது நீர்மையுடன் அவரிடம் சொல்லி இருக்கலாம். ஒரு சொல் சிந்தாமல் அவர் அதை அருந்திக்கொண்டு இருப்பார். யார் எவரிடம் என்ன சொன்னார்கள், என்ன கேட்டார்கள் என்று உங்களுக்கும் எனக்கும் தெரியவே தெரியாது.
சொன்னதையும் கேட்டதையும் சொல்லாமல், சுழித்துச் சென்றுவிடும் ஆறு. கேட்டதையும் சொன்னதையும் பகிராமல் தனித்து நிற்பார் அவர்.
நேற்று சுலோச்சனா முதலியார் பாலத்தில் ஒருவர் குனிந்து பார்த்துக்கொண்டிருந்தார். பாலத்தின் கீழ் அதே ஆறுதான். பாலத்தின் மேல் மட்டும் அதே அவர் என்று சொல்ல முடியாது. அவர்கள் எப்போதும் வேறு வேறு அவர்களாகவே இருக்கிறார்கள்.v

Sunday, 11 August 2013

அந்தப் பன்னீர் மரம் இப்போது இல்லை.











பால் ஒரு சொட்டுக்கூட இல்லை.எல்லாவற்றையும் பூனைக்கு ஊத்திவிட்டேன் கதிர்என்று பாலையா நாடார் நீட்டிய கண்ணாடி டம்ளரை கதிரேசன் பிள்ளை வாங்கிக் கொண்டார். கொதிக்கக் கொதிக்க தேன் நிறத்தில் ஆவி பறந்துகொண்டிருந்த டீயைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டே இருந்தவர்,
ஏன் பாலையா, இந்த கடும் டீயைக் குடிக்கிறதற்கா மழையில் இவ்வளவு தூரம் புறப்பட்டு வந்திருக்கிறேன்?உம்?” என்று ஒரு மடக்கு டீயைக் குடித்துவிட்டு, மறுபடியும் அந்தக் கண்ணாடி டம்ளரையே கதிரேசன் பார்த்தவராக இருந்தார்.
கொஞ்ச நேரம் கழித்துஅவரே, “பால் சேர்த்தாலும் சரி, சேர்க்காமலும் சரி ஒரு நல்ல டீயை எப்போதும் போட்டுவிட முடிகிறது உனக்கு.ஆனால் எனக்கு வென்னீர் வைக்கக் கூடத் தெரியாது நாடார்.” என்று சொன்னார். பாலையா நாடார் தன்னுடைய கையில் ஒரு மடக்கு அளவு வராத டீயை இன்னொரு கண்ணாடி டம்ளரில் வார்த்துக்கொண்டு வந்தபடியே,
வென்னீர் கொதிக்க வைக்கத் தேவையில்லாத அளவுக்கு, தான் போகிறவரை உன்னை உன் வீட்டுக்காரி பார்த்துக்கொண்டாள்.உனக்கு உன் சாப்பாட்டுத் தட்டு மட்டுமே தெரியும்.அவளுக்கு அடுப்பில் எந்த விறகு எப்படி எரியும் என்று தெரிந்திருக்கும்.அடுப்பைத் தெரிவது நெருப்பைத் தெரிவதுதான்.பெண்கள் நெருப்பையும் தண்ணீரையும் நம்மைவிட அதிகம் தெரிந்திருக்கிறார்கள். மனிதர்களைப் புரிவது அதனால்தான் சுலபம் ஆகிவிடுகிறது அவர்களுக்கு
உனக்கு வேறு எதையும் ஊற்றிக்கொண்டாயா?ஒரு மடக்குத் தேநீரைக் கையில் வைத்திருப்பதற்கே இவ்வளவு நீண்ட பேச்சா? பொதுவாக மாஜி பட்டாளத்துக்காரர்கள் சுருக்கமாகத்தான் பேசுவார்கள் என்று நினைத்தேன்
இதைக் கதிரேசன் சொன்னபடி இருக்கும்போது, நாடார் வெளியே போய் வாசல் நடைப்பக்கம் கதிரேசன் சாத்திவைத்திருந்த குடையை விரித்துக் காயவைத்துவிட்டு வாசல் பக்கத்து விளக்கையும் போட்டுவிட்டு வந்தார்.
ஏன் நாடார்?இருட்டுக்குள் இருந்தால் குடை காயாதா?எதற்கு வீணாக விளக்கைப் போடுகிறாய்?”
எது வீண் கதிர்?ஒரு பழைய துணியைப் போல மூலையில் நீ சாத்தி வைத்திருந்த உன்னுடைய குடை இப்போது ஒரு கருப்புப் பூ போல எப்படி விம்மிக் கிடக்கிறது பார். ஈரமான கருப்புத் துணியில் இந்த பல்பு வெளிச்சம் பரவி மினுங்குவதை ஒரு முத்தம் கூட இடலாம்
கதிரேசன் முதலில் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு சிரித்தவர், குடித்துக் காலியான டீ கிளாசுடன் ஒரு நாடகப் பாத்திரம் போல எழுந்து நின்று மேலும் உரக்கச் சிரித்தார்.
பாலையா. என் கிறுக்கு பாலையா.. நீ கல்யாணமே ஆகாத கிழட்டுப் பட்டாளத்தானாக இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை
நீ சொல்வதில் பாதி சரி கதிர்.கல்யாணமே ஆகாத அல்ல. கல்யாணமே செய்துகொள்ளாத பட்டாளத்தான் என்று இருக்கவேண்டும்”.
கிழட்டுப் பட்டாளத்தான் என்பதை விட்டுவிட்டாய்
உனக்கும் எனக்கும் பொதுவான விஷயங்களை நான் திரும்பக் கூறுவதைத் தவிர்த்துவிடுகிறேன்என்று பாலையா நாடார் சிரித்தபோது, தினமும் மழிக்கப்படும் வழக்கத்தில் உள்ள அவருடைய முகத்தின்தசைகள், முக்கியமாக மீசையற்ற மேலுதட்டுப் பகுதி இவற்றின் மேல் காலம் கோடிழுப்பது நன்றாக இருந்தது.
கதிரேசன் பிள்ளையிடம் பேசியவராக இருந்த நாடார், தன்னுடைய காலடியில் வந்து முனங்கி முனங்கிப் பேசிய பூனையைக் குனிந்து எடுத்துக் கையில் வைத்து, “நீ எந்தப் பாதையில் வந்தாய் கதிர்?’ என்று கேட்டார்.
ஏன்?சேரன்மாதேவி ரோடு வழியாகத்தான்.எனக்கு இது பக்கம் இல்லையா? அதிலும் மழை வேறு
மழை என்ன, மழை கதிர்?அதுதான் குடை வைத்திருக்கிறாயே. ரதவீதி வழியாக வந்திருக்கலாம்
கழுத்தைச் சுற்றி மூக்கைத் தொடச் சொல்கிறாய்
நம்முடைய கழுத்து.நம்முடைய மூக்கு. அப்படி ஒன்றிரண்டு தடவை  தொட்டால்தான் என்ன?” பாலையா நாடார் இதைச் சொல்லிவிட்டு வாசலைப் பார்த்தார். அவருடைய கையிலிருந்து இறக்கிவிடப்பட்ட பூனை விரித்துவைத்த குடையைத் தாண்டி, பூந்தொட்டிகள் வரிசைப்பக்கம் சென்றுகாணாமல் போனது.
மறுபடியும் அவரே ஆரம்பித்தார்.“எதற்குச் சொல்கிறேன் தெரியுமா கதிர்? இன்று அப்படி வந்திருந்தால் தேரைப் பார்த்திருக்கலாம்
தேரோட்டம்தான் முடிந்து, நேற்றே தேர் நிலைக்கு வந்துவிட்டதே
ஓடுகிற தேர் மாதிரி, நிலைக்கு வந்த தேரும் அழகு கதிர்.நான் தேர் இழுக்க எல்லாம் போகவில்லை.தேர் நிலைக்கு வந்துவிட்டது என்று எனக்கும் தெரியும். ராத்திரி பதினோரு மணிக்கு மேல் புறப்பட்டுப் போனேன்
ஏதாவது இரண்டு டோஸ் மருந்து சாப்பிட்டுருப்பாய்
உனக்கு எப்போதும் அதே ஞாபகம்தான் கதிர்.வந்ததிலிருந்து பார்க்கிறேன்.ஒரு கண்ணாடி கிளாஸை வெறும் டீ ரெங்குவுடன் பார்க்க உனக்குத் தயாரில்லை
இல்லை நாடார்.மழை பெய்தது.சரி. பாலையா ஏதாவது வைத்திருப்பானே என்று தோன்றிவிட்டது
நேற்றும் மழை பெய்தது கதிர். தேர் ஓடின ரதவீதி  மழை பெய்து எப்படிக் கிடக்கும் பார். ஓடுகிற தேரை விட ஓடி நிற்கிற தேரில் கூடுதலாக என்னவோ வந்து சேர்ந்துவிடுகிறது கதிர்.அது ஓடின நான்கு ரதவீதிகள்.அதை இழுத்த, பார்த்த நாலாயிரம் பேர் எல்லாம் சேர்ந்து அதன் மேலே புழுதி மாதிரி, சந்தனம் மாதிரி அப்பிக்கிடக்கும்.இந்த வடம், பூண் பூணாக அதிலிருக்கிற வளையம் எல்லாம் வெறும் தேங்காய் நாரா?வெறும் இரும்பா?அது எப்படி இப்படி வளைந்து, நெளிந்து, கனத்து, தரையோடு தரையாக இவ்வளவு அழகாகக் கிடக்கிறது?!நான் தேரைக் கூட அதிக நேரம் பார்க்கவில்லை.அந்த தொம்பை, குதிரை எல்லாவற்ரையும் விட, தரையோடு தரையாகக் கிடக்கிற வடத்தையே ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன்.அதைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கண்ணீர் முட்டிவிட்டது தெரியுமா?”
கிட்டத்தட்ட கண்ணீர் முட்டுகிற மனநிலையில்தான் நானும் உன்னைப் பார்க்க வந்தேன் நாடார். இந்த கண்ணாடி கிளாஸை நான் பார்ப்பது பற்றிய உன் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறேன்
ஏன் கதிர்?அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாதா?”
கதிரேசன் பிள்ளை எழுந்து, கிராமஃபோன் இருக்கிற மேஜையைத் தாண்டி அதன் வலப்புறம் இருக்கும் நான்கு இலை கருப்பு விசிறியை ஓடவிட்டு, அதன் காற்று சில அடிகள் தூரம் போய்ச் சேர்ந்து, எதிர்ச் சுவரில் உள்ள அங்குவிலாஸ் காலண்டரின் தினத் தேதிகள் படபடத்ததும், நிறுத்திவிட்டுப் பேச ஆரம்பித்தார். அவருடைய குரல் கம்மியும் தழுதழுத்தும் இருந்தது.

என் தங்கச்சி  உனக்குத் தெரியும் இல்லையா நாடார்?”
கூடலாங் கோவில் பண்ணையாருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாரே அவரா?”
எனக்கு சகோதரி அவள் ஒருத்திதானே
இல்லை.பண்ணையார் என் வாடிக்கையாளர் அல்லவா? என்னுடைய வாடிக்கையாளர் நுனியில் இருந்துதானே என் ஞாபகத்தை நான் துவங்க முடியும்” –  கன்னம் ஒடுங்கிய பாலையா நாடாரின் கண்களில் ஒரு ஈரப் பளபளப்பேறி விரிந்தன. ரோமன் இலக்கக் கடிகாரத்தின் பெண்டுலம் அசையும் ஓசை மட்டும் கேட்கிற அமைதியில்அந்தப் புகைப்படத்தை அவர் நெருங்கி நின்றார்.
பன்னிரண்டுக்குப் பத்து அளவில சட்டமிடப்பட்ட அந்த மாரார் ஸ்டுடியோ புகைப்படத்தின் முட்டை வடிவத்துக்குள் ஒரு கருப்பு ஆஸ்டின் வண்டிக்கு முன்னால், கத்தி போன்ற காக்கிக் கால் சட்டையும் இடுப்பு வாரும் கால் ஜோடும் சட்டையுமாக நிற்கிற பாலையா நாடாரின் முகத்துக்கும் , இதோ இந்த நிமிடத்தின் பாலையா நாடார் முகத்துக்கும் அதிக வித்தியாசம் ஒன்றுமில்லை. ஒவ்வொருத்தரின் ஜீவனைத் துலக்க இப்படி ஏதாவது சிறியதாகவோ பெரியதாகவோ ஒன்று எப்போதும் இருந்துவிடுகிறது. “அவர் கார் வாங்குவதற்கு முன்பு என்னுடைய ஆஸ்டின் வண்டிதானே எல்லா பிரயாணத்திற்கும்
ஆமாம். எல்லா பிரயாணத்திற்கு என்றாலும், முக்கியமாக அவருடைய விருப்பப் பெண்ணின் வீடு நோக்கிய பிரயாணத்துக்கு
அவர் இறந்துவிட்டார் அல்லவா?”
பத்துப் பதினைந்து வருடங்கள் இருக்கும்
எதற்குக் கேட்டுக்கொள்கிறேன் தெரியுமா கதிர்? அவருடைய அதே விருப்பப் பெண் என்னுடைய விருப்பப் பெண்ணும் கூட. சில சமயங்களில் இப்படி ஆகிவிடுகிறது
இதை இன்றைக்கு நீ சொல்வதில் ஏதோ ஒரு பொருத்தம் இருக்கிறது நாடார்
கதிர். நீ உன் தங்கையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாய்
அவள் கணவருக்குச் சொந்தமான வீடு ஒன்று மேல ரதவீதியில் இருக்கிறது தெரியுமா?’
என் ஆஸ்டின் வண்டி இரவு தங்கிய வீடுகளை எனக்குத் தெரியாதா போகும்?”
அந்த வீட்டில்தான் இப்போது கொஞ்ச  காலமாக என் சகோதரி இருக்கிறாள். உடம்புக்கு முடியவில்லை.நடமாட்டம் கிடையாது.படுத்த படுக்கைதான்.அவள் வீம்பு அவளுக்கு. பிள்ளைகள் யாரையும் அண்ட விடவில்லை
பிள்ளைகளை விடு.உனக்கு என்ன?நீயும் தனியாகத் தானே இருக்கிறாய் கதிர்?
எல்லோரும் தனிதான். ஒரு கட்டத்தில் எல்லோரும் தனியாகத்தான் இருக்க விரும்புகிறோம் நாடார்
தனியாக இருப்பது பற்றி எனக்குப் புரியமுடிகிறது.ஆனால் உன் துணை உன் சகோதரிக்கு உதவும் அல்லவா?”
எழுபது வயதிற்கு மேல் யாருடைய உதவியையும் ஒரு யாசகம் என மனம் வெறுக்கத் துவங்கிவிடுகிறது.ஏன்?நானே அப்படித்தான் நினைக்கிறேன்.”
உன்னுடைய குரலையும் படபடப்பையும் பார்த்தால், நீ அழுதுவிடுவாய் என நினைத்தேன். ஆனால் நீ எதை எதையோ பேசிக்கொண்டு போகிறாய்
எதை எதையோ பேசின பின்புதான், இதைச் சொல்ல எனக்கு முடிகிறது நாடார்.திடீரென்று தோன்றிற்று.கோவிலுக்குப் போன கையோடு அவளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போனேன். சந்திப் பிள்ளையார் முக்குக்கும் அவள் வீட்டிற்கும் ரொம்ப தூரம் ஒன்றுமில்லையே
வாசலில் அந்தப் பன்னீர் மரம் நிற்கிறதா கதிர்?”
கேட்கிறவனுக்கு மட்டும் அல்ல. சொல்கிறவனுக்கும் பழைய ஞாபகங்கள் இடைஞ்சல் நாடார். அந்தப் பன்னீர் மரம் இப்போது இல்லை
மன்னித்துக்கொள் கதிர்.என் ஐம்பதாம் வயதுகளில் கூட, அந்த வீட்டுப் பன்னீர்ப் பூக்களை நான் பொறுக்கியிருக்கிறேன்.இப்போது பொகைன்விலா வளர்ந்து நிற்கும் இந்த வீட்டு வாசலில் ஒரு பன்னீர்மரம் நிற்க நான் விரும்பியிருக்கிறேன். பானெட்டின் மேல் பன்னீர்ப் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் என் கருப்பு ஆஸ்டின்புரளும் பன்னீர்ப் பூக்களின் மத்தியில் கண் சுருக்கிப் படுத்திருக்கும் என் செல்லப் பூனைநினைத்துப் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது
நினைப்பு மட்டுமே வாழ்வில் அழகாக மிஞ்சும் போல இருக்கிறது நாடார்.உன்னுடைய ஞாபகத்தையும் தொடர்புபடுத்தி, மேலே சொன்னால், பன்னீர் மரம் இப்போது இல்லாத அந்த வீட்டின் தலைவாசல் கதவை அழுத்தித் திறக்க நான் சிரமப்பட்டேன். இத்தனைக்கும் ஏற்கனவே ஒரு ஆள் நுழைய முடிவது போல் அது திறந்தே இருந்தது
எனக்கு அந்தக் கதவின் பித்தளைக் குமிழ்கள் கூட ஞாபகம் இருக்கிறது கதிர். ஆனால் அதன் பக்கம் செல்வதற்குள்  குரைக்கவே குரைக்காத  ஒரு அல்சேஷியன் நாயைத் தாண்டிப் போகவேண்டியது இருக்கும். அது உண்டாக்குகிற பயம் அதனுடைய நாக்கிலிருந்து தகடு போலத் தொங்கும்
ஒரு ஆள் உயர மின்விசிறி மூலையில் கடகடவென்று ஓடுகிறது.வலது புறம் திரும்பிப் பார்த்தால் கட்டிலில் தன் ஞாபகமே இல்லாமல் ரெங்கம்மா கிடக்கிறாள். மேலே பொட்டுத் துணியில்லை” – பாலையா நாடாரின் முகத்தைப் பார்க்காமல் இதுவரை  இருந்தவர், “என்,  தங்கச்சியை அந்தக் கோலத்தில் பார்க்க முடியவில்லை  நாடார்என்று எதிரே இருப்பவரின் கையைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார். மீண்டும் மீண்டும்ஒரு பொட்டுத் துணியில்லைஎன்று சொல்லி விசும்பினார்.
நீ போய்ப் பார்த்தது உன் சகோதரிக்குத் தெரியுமா?”
தன் ஞாபகமே இருக்கிற மாதிரித் தெரியவில்லை அவளுக்கு.கோட் ஸ்டாண்டில் இருந்து நழுவி விழுந்த பழைய சட்டை மாதிரிக் கசங்கிக் கிடக்கிறாள்.”
அப்படியே நினைத்துக் கொள் கதிர். நீ பார்த்தது தெரியாதது வரை, அப்படி சட்டைத் துணியாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே
அதெப்படி முடியும் நாடார்? என் தங்கச்சி அல்லவா அது” – உட்கார்ந்திருந்த நாற்காலியிலேயே சற்றுத் திரும்பி அதன் முதுகுப் பக்கத்தில் முகத்தை வைத்துக்கொண்டு கதிரேசன் பிள்ளை அழுதுகொண்டு இருந்தார். மற்ற அனைத்தும் அசைவின்றி இருக்க, பூந்தொட்டிப் பக்கம் இருந்த பூனை ஒரு குட்டியைக் கவ்விக்கொண்டு உட்பக்கமாகப் போயிற்று.சிறிய சிறிய இடைவெளிக்குப் பின் மூன்று குட்டிகளையும் ஒவ்வொன்றாகக் கவ்விக்கொண்டு சென்றது.கதிரேசனின் அழுகை நின்று நான்காவது முறை ஒரு பூனைக்குட்டியை அது கவ்விக்கொண்டு போகும் நகர்வை இருட்டுக்குள் எதிர்பார்த்தபடி குனிந்த தலையுடன் இருந்தார்.அவருடைய அழுகையில் வடிந்து வாய்க்குள் இறங்கிய உப்பு அவருக்கு மிகவும் தேவையாக இருந்தது.
என்ன பண்ணுகிறாய் பாலையா?”
இரு கதிர்.வருகிறேன்என்று மட்டும் பதில் வந்தது.தண்ணீர்க் குழாய் திறந்து மூடுகிற நீர்ச் சிதறலுடன் நாடார் விசிலில் அதிக சத்தமின்றிப் பாடுவது கேட்டது.அந்த விசில் சத்தத்தையும் தண்ணீர் சிதறும் சத்தத்தையும் கதிரேசன் பிள்ளைக்கு ரொம்பப் பிடித்திருந்தது.
அங்கே என்ன செய்கிறாய்?இங்கே வா நாடார்.இங்கே வந்து விசில் அடிஎன்று இவர் சொல்லும்போது, பாலையா நாடார் கையில் ஒரு செவ்வகப் பீங்கான் தட்டை ஏந்திக்கொண்டு வந்தார்.இரண்டு குவளைகளும் ஒரு போத்தலும் அதில் இருந்தன.
அந்த முக்காலியை இழுத்து முன்னால் போடுஎன்று சொல்லி அதன் மர நகர்வு இருட்டில் இழுபடும்வரை நின்று, குனிந்து வைத்துவிட்டு.“இதற்கு ஒரு சொட்டுப் பால் கூடத் தேவைப்படுவதில்லை கதிர்என்றார்.
எதுவுமே சொல்லாமல், அந்தக் குவளைகளை, போத்தலை, பாலையா நாடாரை எல்லாம் கவனித்தபடி இருந்தவர்,வாசலைத் தாண்டி வெளியே பார்வையைத் திருப்பினார்.
உண்மைதான் நாடார். ஈரக் குடையை உன்னால் அழகாக விரித்துவைக்க முடிகிறதுஎன்று அதையே பார்த்துக்கொண்டு இருந்தார், குடையின் மீது பதிந்திருந்த பார்வையை அகற்றாமலேயே, “உன்னை ஒன்று கேட்கலாமா நாடார்?” என்று தயங்கி, ஒரு சிறு ஓடையைத் தாண்டி அப்புறம் செல்வதற்குக் கால்களை நிதானிப்பது போல அமைதியாகி,
உன்னுடைய விருப்பப் பெண், அதுதான் என் தங்கை கணவருடைய விருப்பப் பெண் இப்போது இருக்கிறாளா?’ என்று கேட்டார்.
கையில் எடுத்து வாயருகே கொண்டுபோக இருந்த கண்ணாடிக் குவளையை அப்படியே நெஞ்சு மட்டத்தில் நிறுத்திவிட்டு, திரவம் படர்வது போல மினுமினுக்கும் கண்களுடன் பாலையா நாடார் அப்படியே இருந்தார்.
அவருடைய தலை இடதும் வலதுமாக அசைந்துகொண்டு இருந்தது.

%%%%                             
உயிர் எழுத்து
ஆகஸ்ட் - 2103