ஆதிமலை
ஆதிப் பயலை
மலை வரையச் 
சொன்னேன்.
மலையை மட்டும் 
வரையவில்லை.
மலையை
இரண்டு தென்னை 
மரங்களை
இரு பறவைகளை
ஒரு சூரியனை 
வரைந்திருந்தான்.
மலையை மட்டும் 
வரையாதவர்கள்
இருக்கும் வரை
மலை இருக்கும்
ஆதி அழகுடன்.
அணிலிடமிருந்தும்
அழகிய செம்பூவுடன்
எங்கள் வீட்டுச் 
செடியின் 
முதல் மாதுளம் பழம் 
குறித்த
கனவும் 
விரிந்திருந்தது.
உங்களுடைய 
உள்ளாடைகளை
யாரோ களவாடியிருக்க,
எங்களின் இளம்கனவைப்
 பறித்தல்
எப்படி பதிலியாகும்?
அறிந்து 
கொள்ளுங்கள்,
ஒரு மாதுளம் பிஞ்சை
அதன் 
செடியிலிருந்து,
எங்களிடமிருந்து 
மட்டுமல்ல
ஒரு 
அணிலிடமிருந்தும்
அப்புறப்படுத்தி 
இருக்கிறீர்கள்
என்பதை.
நமக்குரியவற்றுள்
என்னுடைய அறைதான்.
எங்களுடைய வீடுதான்.
மறதியாக என்னை
உள்வைத்துப் 
பூட்டிவிட்டு
நீங்கள் 
போய்விட்டால் எப்படி?
என் சொல்தான். 
என் கவிதைதான்.
வேண்டும் என்றே 
என்னை
அதற்குள் 
அடைத்துவிட்டு
நீங்கள் 
வெளியேறிவிட்டால் எப்படி?
மிகவும் பதற்றம் 
உண்டாக்குவது
நமக்குரியவற்றுக்குள்
நாம் சிறைவைக்கப் 
படுவதுதான்
இல்லையா?
போல
சில சமயம் கடலைப் 
போல,
சில சமயம் ஆற்றைப் 
போல,
ஓடையைப் போல,
கிணற்றைப் போல,
கண்ணாடித் 
தொட்டியைப் போல
சுருக்கமாக
நீரைப் போல இருக்கிற
 மீன்
மீனைப் போலவும் 
இருக்கிறது
தூண்டில் 
தருணங்களில்.
%
உயிரெழுத்து - 2012. 
/மிகவும் பதற்றம் உண்டாக்குவது
ReplyDeleteநமக்குரியவற்றுக்குள்
நாம் சிறை வைக்கப்படுவதுதான்
இல்லையா?/
:).