ஈரோடு C.K.K அறக்கட்டளையின் 34 வது ஆண்டு இலக்கிய விழா
29.07.2012, கடந்த ஞாயிறு நடந்தது. இந்த வருட இலக்கிய விருது
திரு. ஜெயமோகனுக்கு வழங்கப்பட்டது. சென்ற வருடம் விருது
வழங்கப்பட்டவன் என்ற முறையில், நானும் கலந்துகொள்ள அழைக்கப்
பட்டிருந்தேன்.
இந்த முறை என் தனிப்பட்ட விழாவை அதற்கு முந்திய நாளே நான் துவங்கிவிட்டேன். ரவி உதயன், மனோகர், ராஜு சுப்ரமணியன், ராஜரத்னம்,
லதா ரவி, அருள்மொழி என, சனிக்கிழமை முழுமையாக நிரம்பிவிட்டது.
எப்போதாவது ஊரை விட்டு வெளியே வருகிற எனக்கு, இலக்கியம் சார்ந்தோ, சாராமலோ கிடைக்கிற இந்த மனிதர்களே போதுமானவர்களாக இருக்கிறார்கள்.
29.07.12 ஞாயிற்றுக் கிழமையை மரபின் மைந்தன் முத்தையாவும் ஜெய மோகனும் ஆறுமுக தமிழனும் வெண்ணிலாவும் பிரபஞ்சனும் இறையன்புவும் அவரவர் கைகளில் எடுத்துக் கொண்டார்கள். காலையில்
முதல் அமர்வில் முத்தையா தலைமையில், ’வெளிப்படும் வேளை’ என்ற தலைப்பில் கவியரங்கம். கவிஞர்கள் தங்கம் மூர்த்தி, சக்தி ஜோதி, சதீஷ் குமார், இசைக்கவி ரமணன், ஆண்டாள் பிரியதர்சினி மற்றும் கவி அன்பன் கே.ஆர். பாபு கவிதைகள் வாசித்தனர்.
அறிவிக்கப்படாத, ஏழாவது கவிஞனாக, நான் ’உட்படும் வேளை’ என்ற கவிதையை , வழக்கமான என் பதற்றத்தோடும் நடுங்கும் விரல்களோடும் வாசித்தேன். இன்று, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, தன்னுடைய நாற்பத்து நான்காவது பிறந்த தினம் காணும் மரபின் மைந்தன் முத்தையாவுக்கு
அதைப் பதிவேற்றுவதன் மூலம் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்க நினைக்கிறேன்.
பிறந்த நாள் நல் வாழ்த்துகள் முத்தையா. ‘நல்லா இருங்க’
%

தேரோடும் அந்தத் திருநெல்லைப் பதிக்காரன்
ஈரோட்டில் உம்முன்னே எழுந்துவந்து நிற்கின்றேன்.
யாரோடு இருந்தாலும் அவராகும் ரசவாதம்
வேரோடு வந்ததனால் வெளிப்பட்டு வருகின்றேன்.
பேரோடும் புகழோடும், பெருந்திருவின் அருளோடும்
ஊர் கூடி இருக்கின்ற ஒரு அவையின் மத்தியிலே.
*
முன்னைப் பழமைக்கும் முதிர்ந்துவரும் புதுமைக்கும்
தன்னை மரபாக்கித் தழைக்கிறவர் தலைமையிலே
என்னைப் புதிதாக்கி இணைக்கின்றேன். நிகழ்ச்சி நிரல்
தன்னில் பாயாத தாமிர நல் பரணியென.
*
இதற்கு முன்பு இறைவனாய் இருந்தவன்
இப்போதிங்கே தலைவனாய் இருக்கிறான்.
இதற்கு முன்பும் இச் சபையில் இருந்த நான்
இப்போது அவரது அவையில் நிற்கிறேன்.
நிற்பதும் நடப்பதும் நின் செயல் என்றும்
நினைப்பதும் நிகழ்வதும் நின்னருள் என்றும்
கற்பனாவல்லியின் துணைக்கரம் பிடித்து
கவிதையின் அழகுடன் வெளிப்படுகின்றேன்.
*
வில்லில் இருந்து கணையும்
வேரில் இருந்து விழுதும்
கல்லில் இருந்து சிலையும்
கருவில் இருந்து சிசுவும்
வெளிப்படும் வேளை
மனதில் இருந்து கவியும்
மலரில் இருந்து மணமும்
கனவில் இருந்து நனவும்
கடலில் இருந்து கரையும்
வெளிப்படும் வேளை
மண்ணில் இருந்து பயிரும்
மறைவில் இருந்து எதிரும்
கண்ணில் இருந்து துளியும்
கதிரில் இருந்து ஒளியும்
வெளிப்படும் வேளை
புல்லில் இருந்து பனியும்
போ’வில் இருந்து வா’ வும்
அல்லில் இருந்து பகலும்
அகலில் இருந்து சுடரும்
வெளிப்படும் வேளை
குனிவில் இருந்து நிமிர்வும்
குரலில் இருந்து இசையும்
துணிவில் இருந்து உயர்வும்
தொலைவில் இருந்து அருகும்
வெளிப்படும் வேளை
உயிரில் இருந்து உடலும்
உடலில் இருந்து உயிரும்
கயிறில் இருந்து அரவும்
அரவில் இருந்து கயிறும்
வெளிப்படும் வேளை
உள்ளில் இருந்து வெளியும்
உறவில் இருந்து துறவும்
முள்ளில் இருந்து மலரும்
முடிவில் இருந்து முதலும்
வெளிப்படும் வேளை
வெளிப்படும் வேளையை, வியத்தகு பொழுதை
அளிப்பது அந்த ஆதியும் பகவனும்.
குளிப்பது ஒன்றே நம் கடன், ஆறாய்க்
குளிர்ந்து நடப்பது அவனின் நெடும் புனல்.
வெளி என்ற ஒன்று அன்றே இருந்தது.
வெளிப்படல் மட்டுமே மனிதன் அறிந்தது.
ஒளி என்ற ஒன்று உள்ளே இருப்பது
உள்ளே இருப்பதை வெளியில் தருகிற
வழியை மட்டுமே மனிதன் வகுத்தது.
வரவும் செலவும் அவனவன் தொகுத்தது.
வட்டங்களிட்டுக் குளம் அகலாத
மணிப்பெரும் தெப்பம் மிதப்பது போல
தொட்டுத் தொட்டு ஒன்றில் ஒன்று
தொடர்ந்து வெளிப்படும் சுழற்சியின் மத்தியில்
வெளிப்படும் வேளை இதுவென எப்படி
வெடிப்புறச் சொல்லி முடித்திட இயலும்?
உட்படும் வேளை இதுவென யாரும்
உங்களில் ஒருவர் சொல்லக் கூடுமா?
கவிதை எப்போது மனதுள் விழுந்தது?
கண்ணுள் எப்போது கரிப்பு நீர் புகுந்தது?
உடலுள் எப்போது உயிர் கலந்தது?
ஒளியுள் எப்போது இருள் நுழைந்தது?
கடலுள் எப்போது அலையடித்தது?
கல்லுள் எப்போது சிலை துடித்தது?
விதையுள் எப்போது வேர் முளைத்தது?
வெயிலுள் எப்போது மழை கருத்தது?
இது’வுள் எப்போது அது மறைந்தது?
எழுத்துள் எப்போது சொல் நிறைந்தது?
உட்படும் தருணம் உணர்ந்தால் மட்டுமே
வெளிப்படும் வேளை வெளிச்சம் அடையும்.
உள்ளிருந்துதான் எல்லாம் வெளிப்படும்.
உள்ளத்தனையதே உயர்வுகள் அனைத்தும்.
உட்பட உட்பட உள்ளிருந் தனைத்தும்
வெளிப்படும் எல்லா வித்தையும் விந்தையும்.
எய்கிற வில்லில் அல்ல, குவித்து
எய்பவன் உள்ளே இருப்பவை கணைகள்.
ஈன்று புறந்தரும் வேதனை அல்ல.
ஈரக் கருவறை வாசனை குழந்தை.
சொல்கிற சொல்லில் அல்ல, மனதில்
சுடர்விடும் பொழுதில் உள்ளது கவிதை.
கண்ணில் இருந்து வழிவது அல்ல
கனலும் நெஞ்சுள் கசிவது கண்ணீர்.
குரலில் இருந்து அல்ல, நல்லிசை
கூடுவதுள் உள ஏழு சுரங்களில்.
உடலில் இருந்தது அல்ல, அந்த
ஒன்பது வாசலுள் திரிந்தது உயிர்மை.
கட்புலம் மீறிய கருணையின் பெருக்கில்
கடந்து கடந்தவோர் காலக் கணக்கில்
உட்புறம் வெளிப்புறம் தாண்டிய நிலையில்
உருவாய் அருவாய் இருப்பதே அனைத்தும்.
வெளிப்படும் வேளை எதுவெனக் கேட்டால்
உட்படும் வேளையே அதுவெனச் சொல்வேன்.
நேர் விகிதம் போல் தலை கீழ் விகிதமும்
நிறைந்தவை தானே எல்லாக் கணிதமும்.
உட்படும் வேளைகள் கேள்விகள் என்றால்
வெளிப்படும் வேளைகள் விடையாய்க் கிடைக்கும்.
வெளியே உள்ள வெளிச்சம் அனைத்தும்
உள்ளே உள்ளதே என்பதைச் சொல்லி
மெல்ல மெல்ல விடை பெறுகின்றேன்
மீண்டும் அவைக்குத் தலை பணிகின்றேன்.
%