24.02.2020 அன்று அல்லது அதற்கு முதல் நாளாக இருக்கலாம். முதல் நாளே தான். ரவிசுப்ரமணியனுக்கு ஒரு வாட்ஸாப் செய்தி அனுப்பினேன். செய்தி அல்ல. ஒரு பாடல் பதிவின் இணைப்பு.
இந்த சிவராத்திரி தினத்தில் ஈஷா மையத்தில் அனன்யா பட் என்கிற பாடகி பாடியது. ‘சோஜுகட சூஜு மல்லிகே ’ என்று துவங்கும் பாடல். ஒரு நாட்டுப்புற இசை போல, துல்லியமான குரலில் ‘மகாதேவ... மா தேவ... மாடப்பா...’என்று உருகுகிறார். இடையிடையில் நீண்ட புல்லாங்குழலோசை. ரவி கேட்க விரும்பினேன்.
அவர் பெற்றுக்கொண்ட நீல அடையாளம் வரவில்லை. கொஞ்சம் தாமதமாக ரவி, சிறப்பு அழைப்பாளராக சாகித்ய அகாதமி விருது அளிப்பு நிகழ்விற்கு டில்லி போய்க்கொடிருப்பதாகவும் விமானத்தில் இருப்பதாகவும் பதில் அனுப்பினார்.
எனக்கு சோ.தர்மனை மீண்டும் வாழ்த்தத் தோன்றியது. வாழ்த்தினேன். விருது அறிவிக்கப்பட்ட நாளை விட, விருது அளிக்கப்படுகிற இந்த தினம் எவ்வளவு முக்கியமானது என எனக்குத் தெரியும். 22.01.2017 ல் அதை நான் உணர்ந்திருக்கிறேன்.
விருதளிப்புக்கு மறு நாள் காலை AUTHORS MEET நடக்கும். விருது பெற்றவர்கள் எல்லோரும் அகர வரிசையில் சில நிமிடங்கள் பேசுகிற நிகழ்ச்சி. அதில் என் பேச்சு சரியாக அமையவில்லை. மிகவும் மிகவும் தோல்விகரமான ஒன்று அது.
அன்று மாலை டில்லி தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு. பென்னேஸ்வரன் பொறுப்பில் இருந்தார். சுரேஷ் பரதனும் வனிதா ரெஜியும் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். என் ஏற்புரையைப் பதிவு செய்திருந்தார்கள் போல. எனக்குத் தெரியாது.
இன்று காலை என்னுடைய பதிவில் இல்லாத ஒரு எண்ணில் இருந்து, ஒரு நீண்ட வாட்ஸாப் பகிர்வு வருகிறது. அது அன்றைக்கு நான் டில்லித் தமிழ்ச்
சங்கத்தில் நிகழ்த்திய ஏற்புரையின் வரிவடிவம். வாசிக்க வாசிக்க, இதை நானா பேசினேன் என்று தோன்றியது. இவ்வளவு நீண்ட நல்ல பேச்சை என்னால் எப்படி, காலையில் பேசித் தோற்றிருந்த மனநிலையில் வைக்க முடிந்தது என்று யோசித்தேன். ஒருவேளை அந்த மோசமான தோல்வியை இப்படி ஜெயிக்க முயன்றேன் போல.
ஒலிப்பதிவு செய்த பேச்சைக் கேட்டுக் கேட்டு, அதை வரிவடிவமாக எழுதி, மறுபடி கேட்டு, மறுபடி எழுதி எனக்கு இன்றைக்கு அனுப்பிய வனிதா ரெஜியை வணங்குகிறேன்.
நன்றி வனிதா ரெஜி.\
நன்றி சுரேஷ் பரதன்.
எல்லோருக்கும் என்னுடைய அன்பு வணக்கம்.
ஒரு வகையிலே பார்க்கப் போனால் இந்த அரங்கத்தைப் போலவே நான்
நிரம்பியிருக்கிறேன் அல்லது என்னைப் போலவே இந்த அரங்கம்
நிரம்பியிருக்கிறது.
பொதுவாக என்னைப் போன்ற நவீன படைப்பாளிகள் நெல்லையை சார்ந்து
அல்லது மதுரையை சார்ந்து அல்லது தஞ்சையை சார்ந்து கூட்டங்களில்
பங்கெடுப்போம் என்றால் பெரும்பாலும் நாங்கள் சரிக்குச் சரி காலியான
நாற்காலிகளை பார்த்துக்கொண்டே தான் நாங்கள் பேசுவோம்.
தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு படைப்பாளிக்கு ஒரு அரங்கம் நிறைந்த ஒரு
பகிர்வை அல்லது பங்களிப்பை ஏற்று என்னை கௌரவிக்கிறது என்பதற்காக
நான் தில்லி தமிழ் சங்கத்திற்கும் தில்லி வாழ் தமிழர்களுக்கும் என்னுடைய
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் காமராசு அவர்கள் மிக அருமையாக எனது சிறுகதைகள் சார்ந்து
அல்லது எனனுடைய படைப்புகள் சார்ந்து மிக நேர்த்தியான ஒரு உரையை
நிகழ்த்தி விட்டு அமர்ந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் நான் அவருடைய
உரையிலிருந்தும் திரு. பென்னேஸ்வரன் உரையிலிருந்துமே நான்
என்னுடைய பேச்சுக்கான தூண்டுதல்களை நான் எடுத்துக்கொள்ளலாம் என்று
நான் நினைக்கின்றேன்.
எனக்கும் ஆசை தான் இந்த நிகழ்ச்சி நிரலிலே இருக்கிற ஒவ்வொரு
பெயரையும் உச்சரித்து உச்சரித்து நான் அவர்களை நான் கௌரவப்படுத்த
வேண்டும் என்பது ஆசை தான் ஆனால் இதையெல்லாம் விட இந்த நிகழ்ச்சி
நிரல் அழைப்பிதழின் செவ்வகத்திற்கு வெளியே இருக்கிற திரு.
கிருஷ்ணமூர்த்தி அவர்களை நான் மனதார வணங்கி நான் மேற்செல்லலாம்
என்று நினைக்கிறேன் அல்லது பென்னேஸ்வரன் தன்னுடைய உரையிலே
குறிப்பிட்டது போல திரு. ராஜாமணி அவர்களின் நினைவைப் போற்றி நான்
மேடையில் என்னுடைய உரையைத் துவக்கலாம் என்று நினைக்கின்றேன்.
எனக்கென்னவோ சாகித்ய அகாதமி பிப். 22ஆம் தேதி புதன் கிழமை
மாலையில் விருது அளித்ததாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால் இங்குதான் மறுபடியும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது
என்றே நான் நினைக்கிறேன்.
நான் நேற்று என் மேல் போர்த்தப்பட்ட சால்வை இன்னும் சுருக்கம்
அடையவில்லை.எனக்கு அணிவிக்கப்பட்ட அந்த மாலை இன்னும்
வாடிவிடவில்லை வதங்கிவிடவில்லை. இன்னும் அந்த வாசனை அப்படியே
இருக்கிறது. அவர்கள் கொடுத்த அந்த சாகித்ய விருதின் இலச்சினை இன்னும்
என்னுடைய கைகைளிலேயே இருக்கிறது. மீண்டும் மீண்டும் எனக்கு இந்த
அரங்கு சால்வையை போர்த்தியிருக்கிறது மாலையிட்டிருக்கிறது. அந்த
அருமையான இலச்சினையை என்னுடைய கைகளிலே தந்திருக்கிறது என்று
தான் சொல்லுவேன்.
நண்பர்களே நான் தில்லிக்கு இரண்டாவது முறையாக வந்திருக்கிறேன்.
மூன்று வருடங்களுக்கு முன்னால் தனிப்பட்ட ஒரு சுற்றுலா சார்ந்த அல்லது
ஒரு குடும்பத்துடன் வந்த ஒரு வரவு. அதுவும் இதே போல ஒரு இலையுதிர்
காலம்தான். இதே போல ஒரு உதிர்காலம் தான் கிட்டத்தட்ட இதே நாட்களாக
கூட இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றுகிறது. இதே பிப்ரவரி இறுதி
அல்லது மார்ச் முதல் வாரமாக இருக்கட்டும். குளிரும் இல்லை வெயிலும்
இல்லை அல்லது குளிரும் இருந்தது வெயிலும் இருந்தது நம்முடைய
வாழ்க்கையைப் போல அல்லது என்னுடைய வாழ்க்கையைப் போல.
மறுபடியும் அதே பிப்ரவரியில் அதே இலையுதிர் காலத்தில் நான் உங்கள்
முன்னால் இருக்கிறேன்.
நான் தில்லிக்குள் நுழைகிற நேற்று முன்தினமெல்லாம் இலை உதிர்ந்து
உதிர்ந்து சருகுகள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. வீதிகள் எல்லாம்
சருகுகள். கட்டிடங்களின் ஓரங்களில் எல்லாம் சருகுகள். ஒன்று சருகுகள்
மனிதர்களைப் போல நகர்ந்து கொண்டிருக்கின்றன அல்லது மனிதர்கள்
சருகுகளைப்போல நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
நான் சிறுகதையாளனாகவும் ஒரு கவிஞனாகவும் இருப்பதால் ஒரு பூவை
நான் எப்படிப் பார்க்கிறேனோ ஒரு துளிரை எப்படி நான் பார்க்கிறேனோ
அதேப்போல அந்த சருகுகளையும் நான் அதிகம் அதிகமாக பார்த்துக்கொண்டே
இருக்கிறேன் நண்பர்களே.
நேற்றும் இன்றும் அந்தச் சருகுகளோடு நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
நண்பர்களே
நான் மரங்களோடு பேசுகிறவன்.
ஏற்கனவே பேராசிரியர் காமராசு போன்றவர்கள் அறிவார்கள் நான்
மரங்களோடு பேசுகிறவன். அதே போல நேற்று முன்தினத்திலிருந்து டெல்லி
இலையுதிர் காலத்தின் சருகுகளோடு நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
நான் முடிந்தால், முடிந்தால் குனிந்து நான் எப்போதுமே என்னுடைய
நடைவழிகளிலே பொறுக்குகிற காக்கைச்சிறகுகளைப் போல இந்தச் சருகு
இலைகளைக்கூட பொறுக்கலாமென்று தான் எனக்குத் தோன்றுகிறது. நான்
நல்லவைகளுக்காக குனியத்தயாராக இருக்கிறேன். நான் அழகியலுக்காக
குனியத்தயாராக இருக்கிறேன் ஏனென்றால் நீங்கள் நல்லதுக்காக குனியும்
போது மறுபடியும் நிமிரும்போது அதைவிட நல்லதாக இருக்கும் என்று நான்
நம்புகிறேன்.
நான் அந்த ஒவ்வொரு இலையாக பொறுக்கி பொறுக்கி கடேசி இலையை
பொறுக்கி முடிப்பதற்குள் நிச்சயம் வசந்தம் வந்து விடும் என்று நான்
நிச்சயமாக நம்புகிறேன். இலையுதிர்காலம் முடிந்த பின் வசந்த காலம் தானே.
நான் மார்ச் இறுதியில் வருவேன் எஎன்றால் தில்லி முழுவதும் பூத்துக்
குலுங்கிக் கொண்டிருக்கலாம்.
இன்று இலையுதிர் காலம். நாளை வசந்த காலம் நண்பர்களே.
நான் அந்த இலைகளை பொறுக்கி பொறுக்கி எப்படி பொறுக்கி முடிப்பதற்குள்
ஒரு வசந்த காலம் வந்துவிடும் என்று நான் நம்பிக் கொண்டிருக்கிறேனோ
அல்லது நம்பிக் கொண்டிருந்தேனோ அதே போலத்தான் இந்த சாகித்ய
அகாடமி விருது என்பது நான் என்னுடைய சருகுளை பொறுக்குகின்ற கடைசி
நேரத்தில் எனக்கு வந்து அமைந்திருக்கிறது என்று நான் நிச்சயமாக
சொல்லுவேன்.
இந்த தமிழ் சங்கத்திற்கு நானும் இந்த தமிழ் சங்கத்திற்கும் ஒரே வயது எனக்கு
எழுபது வயது அறிகிறேன் பென்னேஸ்வரன் மூலமாக அறிகிறேன். இந்த
தமிழ்சங்கம் துவங்கி எழுபது ஆண்டு இது என்று நான் அறிகின்றேன்.
ஒரு சமகால மனிதனுடன் அல்லது சம கால வாழ்வுடன் அல்லது ஒரு சமகால
படைப்பாளியுடன் அல்லது ஒரு சமகால இலக்கியாதியுடன் உடன் உறைவது
உடன் வாழ்வது உடன் விவாதிப்ப்து உடன் ஒப்புக்கொள்வது உடன்
சரணடைவது எவ்வளவு மகிழ்ச்சியடைகிறதோ அதேபோல என்னைப்
போலவே எழுபது வயது முதிர்ந்த ஜெயகாந்தன் சொல்லுவார் இது முதுமை
அல்ல முதிர்ச்சி என்பார் ஆக எழுபது வயது முதுமை அடைந்ததாக அல்ல
எழுபது வயது முதிர்ச்சியோடு இருக்கிற நான் எழுபது வயது முதிர்ச்சியோடு
இருக்கிற அல்லது மேன்மையோடு இருக்கிற இந்த பாரதி தமிழ் சங்கத்திலே
உங்களுடன் பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் நிரம்பி இருக்கிறேன் தோழர்களே,
நிரம்பி இருக்கிறேன். நிரம்பி இருக்கும்போது தழும்பும் போது எப்படிச் சிந்தும்
எப்படிச் சிந்தும் அப்படியே நான் நிரம்பி இருக்கிறேன். நேற்றைய நிகழ்வு
அதனுடைய மற்றொரு அடுக்கு போல் இன்றைய நிகழ்வு நிகழ்ந்து
கொண்டிருக்கிறேன்.
என்னுடைய வார்த்தைகளை நான் சேகரிக்க முடியாது என்பதனால் தான்
பேராசிரியர் காமராசு அவர்கள் தயாரிப்பு குறிப்பையும் பென்னேஸ்வரன்
அவர்கள் தயாரிப்புக் குறிப்பையும் நான் என்னுடைய கைகளில்
எடுத்துக்கொள்கிறேன்.
எனக்கு எங்கிருந்து துவங்குகிறது என்றே என்னுடைய பேச்சை எங்கிருந்து
பேச்சை துவங்குவது என்றே எனக்குத் தெரியவில்லை.
நான் எந்த தயாரிப்பும் இல்லாமலே என்னுடைய விரிந்த கைகளோடு அல்லது
ஒன்றுமற்ற உள்ளங் கைகளோடு நான் உங்கள் முன்னால் இருக்கிறேன். எனது
உள்ளங்கைகளில் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எப்படி
உள்ளத்தில் ஒரு எழுபது வயது மனிதனின் உள்ளத்துள் எப்படி
ஒன்றுமில்லாமல் இருக்க முடியும்.
அவனுக்குள் ஏதோ இருப்பதால் தானே அல்லது இல்லாததையெல்லாம்
அவன் அந்த உள்ளத்தின் உள்ளாக தேடிக்கொண்டிருப்பதால் தானே அவன்
இத்தனை சிறுகதைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் எழுதிய
எதோ ஒரு பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு சாகித்ய அகாடமி விருது
அளித்து அவன் உங்கள் முன்னால் பாராட்டுதலை ஏற்பதற்காக நின்று
கொண்டிருக்கிறான்.
இந்த டெல்லியை ஒரு வாசகனாக நான் யார் முலமாக எல்லாம்
அறிந்திருக்கிறேன். நான் இந்திரா பார்த்த சாரதி அவர்கள் மூலமாக
அறிந்திருக்கிறேன். அவர்களுடைய தந்திர பூமியாகவும் சுதந்திர பூமியாகவும்
இந்த டெல்லி எனக்கு அறிமுகமாகி இருக்கிறது. நான் ... நாங்கள் என்று
சொல்லலாம். ஏன் நான் என்று சொல்ல வேண்டும் ? நாங்கள் தீபத்திலே
எழுதிக்கொண்டிருந்த காலத்திலே தான் என்னுடைய சமகாலத்திய
படைப்பாளியாக இருந்த ஆதவன் அவர்கள் இந்த டெல்லியின் குறுக்கு வெட்டு
தோற்றங்களில் அல்லது யுவன்களை அல்லது யுவதிகளை ஆதவனுடைய
பார்வையிலே டில்லியிலே நடமாட விட்டுக் கொண்டிருந்தார் அல்லது அவர்
நடமாட விட்டுக்கொண்டிருந்த யுவன்களின் மூலமாகவும் யுவதிகளின்
மூலமாகவும் நான் டெல்லியை அறிந்து கொண்டேன் .
அவர் கதைகளில் பழுத்து பழுத்து உதிர்கிற நாகப்பழங்களைக்கூட நான்
இப்போது விழுந்தால் நான் பொறுக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.
டெல்லியில் நாகப்பழம் மரங்கள் அதிகம் என்று நான் ஆதவன் கதைகளின்
மூலமாக அறிந்திருக்கிறேன் நண்பர்களே . அப்புறம் வாசந்தி டெல்லியைப்
பற்றி எழுதியிருக்கிறார்.
சுஜாதா என்று அறியப்பட்ட ஸ்ரீரங்கம் எஸ் ஆர் தன்னுடைய கஸ்தூரிரங்கன்
அவர்களின் கடைசிப் பக்கங்கள் மூலமாக டில்லியை வரைந்து வரைந்து
காட்டியிருக்கிறார். கிருத்திகாவின் வாசேஸ்வத்சரம் தில்லியை தான்
காட்டுகிறது. கதைகளையெல்லாம் தவிர, படைப்புக்களின் வழியாக எல்லாம்
தவிர கநாசுவும் வெங்கட்சுவாமிநாதனும் எனக்கு காட்டிய ஒரு தில்லி
இருக்கிறது. அரசியலும் இலக்கியமும் உள்வட்டமும் வெளிவட்டமும் மாறி
மாறி மாறி எங்களுக்கு கற்றுக் கொடுத்த ஒரு டெல்லி கநாசுவின்
கட்டுரைகளில் இருந்தும் வெங்கட்சுவாமிநாதனின் கட்டுரைகளிலிருந்தும்
நான் பெற்றிருக்கிறேன். சமகாலத்திலே பார்க்கப்போனோம் என்றால் வடக்கு
வாசல் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்த பென்னேஸ்வரன் மூலமாக
அல்லது அவரது ராகவன் தம்பி பக்கங்களின் மூலமாக நான் இந்த டெல்லியை
அறிந்திருக்கிறேன்.
என்னை விட பென்னேஸ்வரனை என்னுடைய தந்தையார் திகசி தான்
அறிந்திருக்கிறார். என்னைவிட ராகவன் தம்பியை என்னுடைய தந்தையார்
தான் அறிவார்.என்னுடைய தந்தையாரை நினைத்துக் கொள்கிற நேரமாகவும்
இது அமைந்திருக்கிறது தோழர்களே. காமராசர் அவரது வாயாலே
சொல்லியிருக்கலாம் என்று நான் எதிர்பார்த்தேன். இந்த சாகித்ய அகாடமி
விருது 2000ம் ஆண்டில் என்னுடைய தந்தையாகவும் திகேசி என்று
அறியப்பட்ட தி க சிவசங்கரன் அவர்களால் 2000ம் ஆண்டில் பெறப்பட்டது. ஒரு
குடும்பத்தில் தந்தைக்கு ஒரு விருது அதே குடும்பத்தில் ஒரு பதினாறு
ஆண்டுகளுக்குப் பின்னால் மகனுக்கும் ஒரு விருது என்ற நிலையிலே சாகித்ய
அகாடமியினுடைய தமிழ் சரித்திரத்தில் அமைந்திருக்குமா என்றால் இல்லை
என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் சற்று நெகிழ்ச்சியோடு என்னுடைய தந்தையின் நினைவையும் உங்கள்
மத்தியில் நான் பகிர்ந்து கொள்கின்றேன். அவர் எனக்குக் காட்டிய புத்தகங்கள்
அவர் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்ததால் அவருடைய அலமாரியிலே
நிரம்பி வழிந்து கொண்டிருந்த சோவியத் இலக்கியங்கள் . இன்னும்
சொல்லப்போனால் சற்று தீவிரமான சீன இலக்கியங்கள் எல்லாம்
என்னுடைய பதின் வயதுகளிலே எனக்கும் என்னுடைய மூத்தவனாக இருந்து
மறைந்து போன கணபதி அண்ணனுக்கும் மிகப் பெரிய ஒரு பதின் வயது
எழுச்சியை எங்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. அவர் ஒரு பக்கம்
எங்களுக்கு மு.வ வை படிக்கச்சொல்லுவார். இன்னொரு பக்கத்திலே தினசரி
திருக்குறள் ஒரு அதிகாரத்தை ஒப்பிக்க சொல்லுவார். ஆனால் அவருடைய
அலமாரி முழுவதும் நிரம்பியிருந்ததெல்லாம் அல்லது நாங்கள்
வாசித்ததெல்லாம் சோவியத் இலக்கியங்கள். ரஷ்ய இலக்கியங்களைப் போல
சைனீஸ் லிட்டரேச்சர் என்று அவருக்கு சோவியத் லிட்டரேச்சர் என்று ஒரு
புத்தகம் வரும் அதே போல சைனீஸ் லிட்டரேச்சர் என்று ஒரு ஆங்கில புத்தகம்
வரும். நாங்கள் எல்லாம் எங்களுடைய பதின் வயதினிலே அந்த சோவியத்
இலக்கியங்களையும் சீன இலக்கியங்களையும் வாசித்து வாசித்து
வளர்ந்தவர்கள்.
அழகியல் இல்லை ஒரு தத்துவ வாதிக்கு என்று நீங்கள் சொல்லவே முடியாது.
நீங்கள் உங்களால் நூலகங்களில் அல்லது ஆவண காப்பகங்களில் பழைய
பழைய அறுபதுகளின் ஒரு சோவியத் லிட்டரேச்சர் இதழையோ அல்லது
சைனீஸ் லிட்டரேச்சர் இதழையோ நீங்கள் புரட்டிப் பார்ப்பீர்கள் என்றால்
சமகாலத்தில் அல்லது நாம் போற்றிக் கொண்டிருக்கிற எத்தனையோ
அருமையான ஓவியர்களை விட மிக அருமையான ஓவியர்கள் சீனத்தில்
உண்டு. ரஷ்யாவிலும் இருந்திருக்கிறது நண்பர்களே.
எங்கே மனிதர்கள் உயிரோடு இருக்கிறார்களோ அங்கெல்லாம் கலையும்
இலக்கியங்களும் செழித்துக் கொண்டு தானே இருக்கும் என்பதற்கு
அடையாளமாக என்னுடைய பதின்பருவத்திலே என்னுடைய கவனத்தை
மூ.வ.வை விட்டும் நேது சுந்தர வடிவேலுவை விட்டும் ஓரளவுக்கு ஓரளவுக்கு
திருக்குறளை விட்டும் கூட நகர்த்திச் செல்லும்படியாக என்னுடைய
தந்தையின் அலமாரியிலே இருந்த சோவியத் இலக்கியங்கள் இருந்தன.
தாஸ்தாவெஸ்கியெல்லாம் நான் மிகப்பிந்தி படித்தேன். நான் முதலில்
படித்ததெல்லாம் செகோவைப்படித்தேன் ஷோலகோவை படித்தேன்
எந்திரியாக்கோவை படித்தேன் அப்படித்தான் என்னுடைய நாட்கள் சிங்கிஸ்
ஐத்மாதாவை படித்தேன்
என்னுடைய பார்வை சிறுகதையை நோக்கி நகர்ந்து கொண்டே
இருப்பதற்கெல்லாம் அந்த புத்தகங்களே எனக்கு தூண்டுதலாக இருந்தது
என்றளவிலே நான் இந்த நிமிடத்திலே என்னுடைய தந்தையின் நினைவை
போற்றுவதற்கு அது சாகித்ய அகாடமி விருது சார்ந்தது என்ற அளவிலும் நான்
மீண்டும் அவரை நினைத்துக் கொள்வதற்கு ஒரு முக்கியமான தருணமாக
நான் கருதுகிறேன். காநசு வெங்கட் சுவாமிநாதனை தவிர வடக்குவாசல்
பென்னேஸ்வரனை தவிர நான் பாரதிமணியை உச்சரிக்காமல்
விட்டுவிடக்கூடாது. அவருடைய பல நேரங்களில் பல மனிதர்கள் அல்லது
வம்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிற சமீபத்திய பெரிய மிகப்பெரிய அளவில்
பெரிய கோடுகள் புள்ளிகள் கோலங்கள் என்று நான் நினைக்கிறேன் சரியாக
அந்த தலைப்பு அதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அது வழியாக
நான் பார்த்த டெல்லி கிட்டத்தட்ட இந்திரா பார்த்த சாரதி அவர்கள் காட்டிய ஒரு
டெல்லியும் அது முன்வாசல் என்றால் இது புறவாசலாக அல்லது புற வாசல்
என்றால் இது முன்வாசலாக ஒரு டெல்லியை எனக்கு காட்டியிருக்கிறது
நண்பர்களே .
ஆனால் அந்த அவர்கள் காட்டிய டெல்லியெல்லாம் இன்று நீங்கள் எனக்கு
காட்டிக்கொண்டிருக்கிற டெல்லி அல்ல. இது என்னை மிகுந்த மிகுந்த எந்த
தந்திர பூமியாகவும் இல்லாத சுதந்திர பூமியும் இல்லாத மிக நெருக்கமாக
என்னை உணர வைக்கிற ஒரு அற்புதமான ஒரு டெல்லி மாலையை நீங்கள்
எனக்கு தந்திருக்கிறீர்கள் நண்பர்களே.
அந்த வகையிலே நான் தமிழ் சங்கத்துக்கு மீண்டும் எனது நன்றியை நான்
தெரிவித்துக்கொள்கிறேன்.
அநேகமாக எழுத்தாளன் என்பவன் அவனுடைய பிறப்பாலும் வளர்ப்பாலும்
அவனவன் ஒரு பொறியியலாளனைப் போல ஒரு ஊரின் வரைபடத்தை
திருத்தி திருத்தி வரைந்து கொண்டே இருக்கிறான் என்றே நான் சொல்லுவேன்.
நீங்கள் அறிவீர்கள் கி. ஜானகிராமன் அவர்கள் தஞ்சாவூரை அல்லது
தஞ்சாவூரின் வரைபடத்தை எவ்வளவு அழகாக எழுதியிருப்பார். இன்றைக்கும்
கூட கி ஜாவின் வாசகனாக இருக்கிற ஒருவன் அந்த துர்காம்பாளைய
தெருவிலே போய் யமுனாவின் வீடு எங்கிருக்கிறது என்று தேடாமலா
இருப்பான் நண்பர்களே. அந்தளவுக்கு ஒரு படைப்பாளி தஞ்சாவூரை வரைந்து
காட்டுகிறான். கும்பகோணத்தை எம் வி வெங்கட்ராமன் வரைந்து
காட்டுகிறார். மதுரையை ஜி நாகராஜன் வரைந்து காட்டுகிறார்.
திருநெல்வேலியை புதுமைபித்தன் வரைந்து காட்டுகிறார். கி. ராஜநாராயணன்
இடைசேவலை வரைந்து காட்டுகிறார். கண்மணி குணசேகரன் அவருடைய
முந்திரித்தோப்புகளை வரைந்து காட்டுகிறார்.
இந்த படைப்பாளி செய்கிற வரைபடங்கள் எல்லாம் நீங்களும் நானும்
அடிநாட்களில் ஆரம்ப பள்ளிக்கூடங்களில் வாசித்த அந்த அட்லஸ் படங்களே
அல்ல நண்பர்களே. இது வேறு வரைபடம். இதைப்போல அந்த வரைபடங்க்ள
உயிர்ப்பானவை அல்ல . இங்கிருக்கிற மனிதர்களைப்போல அந்த
பூகோளப்படங்களில் யாருமே நடமாடியிருக்க மாட்டார்கள் . அவர்களுக்கு
வேர்த்திருக்காது. அவர்கள் சிரித்திருக்க மாட்டார்கள். அவர்கள் கண்ணீர்
சிந்தியிருக்க மாட்டார்கள். அவர்கள் நம்முடைய கைகளைப் பற்றியிருக்க
மாட்டார்கள் நண்பர்களே.
ஒவ்வொரு ஊரின் ஒவ்வொரு மண்ணின் ஒவ்வொரு மரபின் வரைபடங்களை
எல்லாம் எனக்கு முன்னே இருந்த படைப்பாளிகளும் என்னைப் போன்ற
படைப்பாளிகளும் எனக்குப் பின்னே வருகிற இளைய சகாக்களும் தொடர்ந்து
வரைந்து கொண்டிருக்கிறார்கள் நண்பர்களே.
நீங்கள் ஒரு படைப்பாளியின் மூலமாக ஒரு ஊரை அறிவது, ஓரு மண்ணை
அறிவது அல்லது ஒரு மனிதனை அறிவது என்பது மிக அற்புதமான ஒரு ஒரு
பின்னால் திரும்பி மீள் பார்க்கிற போது மிக அசலாக உங்கள் முன்னால் வந்து
நிற்கிற ஒரு அற்புத தருணமாக இருக்கும் நண்பர்களே. நான் என்னை விட
திருநெல்வேலியை அசலாக காட்டியவன் என்றால் நான் வண்ணநிலவனைத்
தான் சொல்லுவேன் அல்லது கவிஞர் விக்கிரமாதித்தனைத்தான்
சொல்லுவேன் அவர்களெல்லாம் இன்னும் எத்தனையோ ஊர்களில் என்னை
விட குறைவாகவே திருநெல்வேலியில் வாழ்க்கையில் இருந்தாலும் இன்னும்
அவர்கள் காட்டுகிற திருநெல்வேலி அறுபதுக்களின் திருநெல்வேலியாக
அல்லது ஐம்பதுக்களின் திருநெல்வேலியாக அப்போது ஓடிய தாமிரபரணி
கல்மண்டபங்களுக்கு கீழே இன்னும் வட்டப்பாறையை தொட்டுத்தொட்டு
தொட்டுத்தொட்டு போய்க்கொண்டிருக்கிறதாக தான் அவர்கள் வரைந்து
கொண்டிருக்கிறார்கள்.
என்னுடைய திருநெல்வேலி என்பது நான் பணியின் சார்பாக போய் போய்
வந்த ஒரு ஏழெட்டு இடங்களில் பாய்நது கொண்டிருந்த அல்லது துவண்டு
கொண்டிருந்த திருநெல்வேலி என்று நான் சொல்லுவேன். நான்
திருநெல்வேலிக்காரனாக இருக்கிறதனால் என்னுடைய தாமிரபரணியை நான்
நிலக்கோட்டையிலே ஓட விட்டிருக்கிறேன். நான் மதுரையிலே ஓட
விட்டிருக்கிறேன். நான் அம்பாசமுத்திரத்திலே ஓட விட்டிருக்கிறேன்.
எங்கெல்லாம் நானும் என் மனிதர்களும் என் குடும்பமும் புழங்குகிறோமோ
அங்கெல்லாம் எனக்கு ஒரு தாமிரபரணி இருந்திருக்கிறது. அங்கெல்லாம் ஏன்
ஒரு சுடலைமாடன் கோவில் தெருவைப்போல் கூட இருந்திருக்கிறது.
அதனால் தான் என்னுடைய ஆரம்ப கதைகளில் இருந்து இன்றைய கதைகள்
வரைக்கும் பேராசிரியர் காமராசு சொன்னதைப்போல பென்னேஸ்வரன்
குறிப்பட்டதைப்போல தாத்தாக்களும், அம்மா தாத்தாக்களும், அம்மாச்சிகளும்,
மதினிகளும், அக்காக்களும், அத்தைகளும், செங்குளத்து அத்தைகளும்,
பவானிகளும் வந்து கொண்டே இருக்கிறார்கள். நடமாடிக்கொண்டே
இருக்கிறார்கள். ஆக ஒரு படைப்பாளியின் வரைபடம் என்னைப்
போன்றவர்களால் மீண்டும் மீண்டும் உங்கள் முன்னே
வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
கொஞ்சம் நான் பென்னேஸ்வரனுடைய கவிதையின் உள்ளே போய்
மறுபடியும் வெளி வரும் போது எனக்கு என்ன மறு சிந்தனை வருகிறதோ
அதிலிருந்து நான் துவங்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.
நான் இதற்கு முந்திப் பேசிய காமராசர் அவர்களுடன் நான் மேடையைப்
பகிர்ந்து கொண்ட கணையாழி 52ஆவது நாள் விழாவிலே இந்தக் கவிதையை
நான் சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் அத்தனை
வரிகளும் எனக்கு நினைவில் இல்லாததால் அந்த கவிதையை நான்
சொல்லவில்லை. அந்த நிகழ்வு நடந்த இடமே நாதஸ்வர கலைஞர்
ராசரத்தினம் அரங்கத்திலே நடந்தது. நிகழ்வு நடக்கிற அரங்கம் இசை சார்ந்தது.
அந்த நிகழ்விலே பாராட்டப்படுகிற ஒருவனுடைய சிறுகதை தொகுப்பு ஒரு
சிறு இசை. நான் இசைந்திருந்தேன். அந்த அரங்கத்தின் பெயராலும்
என்னுடைய தொகுப்பின் பெயராலும் எனக்கு அளிக்கப்பட்ட நல்ல சொற்களின்
பெயராலும் நான் அந்த கணத்தோடு இசைந்திருந்தேன். அப்போது இந்த
கவிதையை நான் சொல்ல விரும்பினேன். அதைத்தான் திரு.
பென்னேஸ்வரன் அவர்கள் வாசித்த கவிதை. ஒரு கவிஞனுடைய குரலில் ஒரு
கவிதை அவனுடைய கவிதையை கேட்பது எனபது ஒரு சங்கீதம் கேட்பது
போலத்தானே இருக்கும். அல்லது ஒரு கவிதை வாசகனுக்கு முன்னால் ஒரு
கவிஞன் ஒரு கவிதையை வாசிப்பது என்பது அவன் எழுதிய கவிதையை
இன்னும் மேலும் உயிர்ப்படையதாகத்தான் ஆக்கும் என்று நான்
நினைக்கின்றேன். மலையாளத்திலும் வங்காளத்திலும் எல்லாம் இந்த
கவிதை வாசிப்பு இன்னும் இந்த சமகாலத்திலும் கூட இருந்து
கொண்டிருக்கிறது நண்பர்களே. ஒரு காலத்ததில் கவியரங்கங்கள் இருந்த
இடங்களில் வெற்று பட்டிமன்றங்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிற இந்த
நாட்களில் உங்கள் முன்னால் ஒரு கவியரங்கத்தின் சிறு அசைவை நான்
என்னுடைய கவிதை வாசிப்பின் மூலமாக உண்டாக்கலாம் என்று நான்
நினைக்கின்றேன். ஒரு தென்னந்ததோப்பை காட்ட வேண்டியது நண்பர்களே
அவசியமே இல்லை நண்பர்களே நான் தென்னங்கீற்றின் ஒரு ஊஞ்சலை
காட்டினாலே போதும் என்று நினைக்கிறேன். அந்தளவிலே இரண்டு
என்னுடைய சிறு கவிதைகளை அதுவும் பென்னேஸ்வரன் ஏற்கனவே
வாசித்த கவிதைகளை உங்களுடனே பகிர்ந்து கொள்ளலாம் என்று நான்
நினைக்கிறேன்.
இது ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இதுவும் ஒரு
கணையாழி கூட்டத்திலே வாசிக்கப்பட்ட முதன் முதலில் வாசிக்கப்பட்ட
கவிதைதான் பிற்பாடு விகடனிலே பிரசுரமாயிற்று..
தொகுப்பிலேறிற்று...எத்தனையோ எத்தனையோ..
-------
எனக்கு சங்கீதம் தெரியாது
பூசினாற்போல் நல்ல வெளிச்சம்
நிரம்பிய அந்த வீட்டின்
மேஜையில் வயலின் இருந்தது
படுக்கை வசத்தில்.
எத்தனை பேருக்கு வயலினையும் வில்லையும்
தொடுகிற தூரத்தில் பார்க்க வாய்த்தது!
வயலினுடைய நிறமோ அற்புதம்.
இசை புழங்கிய வழவழப்பு
எல்லா இடத்திலும்.
தப்பித் தவறி வந்து
ஊர்ந்து கொண்டிருக்கிறது.
வயலின் நரம்புகளில்
மேல் நோக்கி ஒரு சிற்றெறும்பு.
வாய்குவித்து ஊதத்தயக்கம்
விரலால் அப்புறப்படுத்தவும்.
என் செயல்கள் உண்டாக்கக்கூடிய
இசைக்கேடுகளை விட
எறும்பு ஊர்வது ஓர் ராகத்தின்
மேல்தானே!
(கைத்தட்டல்கள்)
-----
இந்த நான் இப்போது கொடுத்த நிறுத்தல் இந்த கைதட்டலுக்காக அல்ல
நண்பர்களே நீங்கள் அந்த வயலின் மேல் ஊர்கிற ஒரு எறும்பாக இப்போது
இருப்பீர்கள் அதை நான் அப்புறப்படுத்தக்கூடாது என்பதற்காகத் தான் நான்
சற்று மௌனத்தை அல்லது இடைவெளியை உங்கள் முன்னால் அளித்தேன்.
இப்படியாகத்தான் ஒரு சாதாரணமான நீங்கள் உங்கள் வீடுகளில்
நடுக்கூடங்களிலே சாத்தி வைங்ஙப்பட்டிருக்கிற சமீபத்தில் வாசிக்காத சற்று
தூசு படிந்த ஒரு வீணையைப் போல அல்லது இன்னும் வாசிக்கவே படாத ஒரு
மேஜையில் இருக்கும் வயலினை நீங்கள் நம்முடைய வீடுகளிலே நீங்கள்
பார்த்திருக்கலாம். அந்த வயலின் நரம்புகளின் மேல் நீங்கள் பார்த்திருப்பீர்கள்
ஆனால் நான் பார்த்து அதை நான் தான் கவிதையாக எழுதுவேன்.
எறும்பு ஊர்கிறது ஒரு ராகத்தின் மேல்தானே என்று எழுதுகிறவன் தான் அந்த
வயலின் வாசிக்கிறவனையும் விட சரியான இசைஞன் என்று நான்
நினைக்கிறேன்
இந்த கடிதங்களைப்பற்றி பென்னேஸ்வரன் அவர்கள் ஒரு கவிதையைச்
சொன்னார். நான் என்னுடைய கதாசிரியர் பக்கத்தை போல ஒரு கவிஞன்
பக்கத்தை போல ஒரு கடித எழுத்தாளன் பக்கத்தை உங்கள் முன்னால்
சொல்ல வேண்டிய நேரத்தில் இருக்கிறேன். நண்பர்களே நீங்கள் என்னுடைய
கதைகளை வாசித்தது போல அல்லது கவிதைகளை வாசித்தது போல
ஒருவேளை நீங்கள் என்னுடைய கடிதத் தொகுப்புகளை வாசித்திருப்பீர்களோ
இல்லையோ என்று நினைக்கிறேன்.
நான் ஏன் என்னுடைய கடிதங்களைப்பற்றி பேசுகிறேன் என்றால் எப்படி நான்
என்னுடய தகப்பனின் அலமாரியிலே இருக்கிற சோவியத் புத்தகங்களைப்
பற்றி பேசினேனோ அதே போல நான் என்னுடைய தகப்பனாரின் பெட்டியிலே
இருந்த வல்லிக்கண்ணன் அவர்களின் கடிதங்களைப் பற்றி நான் பேச
வேண்டும். ஒரு புத்தகம் உங்களுக்குத் தருகிற வாசிப்பு அனுபவத்தை அல்லது
ஒரு புத்தகம் உங்களுக்கு காட்டுகிற வாழ்க்கையின் கோணத்தை அல்லது
பார்வையை அல்லது அழகியலை அல்லது முரணை என் அப்பாவின்
பெட்டியிலே மறைந்த திரு வல்லிக்கண்ணன் எழுதியிருந்த கடிதங்களின்
வாயிலாக வாசிப்பின் மூலமாக நான் அடைந்தேன் . சொல்லப்போனால் ஒரு
குறிப்பிட்ட பருவத்தில் நான் மற்றெல்லா புத்தகங்களையும் விட என்
அப்பாவின் பெட்டியில் இருக்கிற வல்லிக்கண்ணனுடைய கடிதங்களைத் தான்
கட்டுக்கட்டான கடிதங்கள் ஆயிரக்கணக்கான கடிதங்கள் அவருடைய
கடிதங்களைப் பார்த்தால் ஜெயகாந்தனைப் பற்றி வரும், மறைந்த
தமிழொலியைப் பற்றி வரும் இசையைப் பற்றி வரும் ட்ராம் வண்டி ஓடுகிற
காலத்தைப் பற்றி எல்லாம் வரும்.
வல்லிக்கண்ணனுடைய கிருஷணாம்பேட்டை காலத்து கடிதங்களிலே நான்
அறிந்திருக்கிறேன்.
ஒரு அறுபது அறுபத்தியோராம் ஆண்டு அந்த கடிதத்தை வாசிக்கிற ஒரு
பதின்பருவத்து பையன் நாற்பத்தி ஆறு அல்லது நாற்பத்தி எட்டிலே
சென்னையிலே ஓடிக்கொண்டிருக்கிற ஒரு ட்ராம் வண்டியின் சத்தத்தை
இன்னும் என்னால் ஒரு ட்ராம் வண்டியின் சத்தத்தை என்னால் கேட்க முடியும்
அல்லது உண்டாக்க முடியும் என்று சொல்லுகிற அளவிலே வல்லிக்கண்ணன்
அவர்களுடைய கடிதங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தன. நான் அவருடைய
கடிதங்களைத்தான் என்னுடைய கரும்பலகையாக கரும்பலகை என்று
சொன்னால் சற்று அன்னியமாக தெரிகிறது என்னுடைய உடைந்த சிலேட்டாக
நான் உபயோகப்படுத்தியிருக்ககறேன்
அதிலே எழுதி எழுதி எழுதி பார்த்த அந்த கடிதங்களின் மூலமாக திருத்தி
திருத்தி நான் செய்த வரிகள் தான் ஒரு கட்டத்தில் ஒரு கட்டத்தில் நான் செய்த
சிறுகதைகளாக மாற்று ரூபம் எடுத்தன. நான் சிறுகதை எழுதுவதற்கு
முந்தைய பருவத்தில் நான் கடிதங்களைத்தான் எழுதிக்கொண்டிருந்தேன்.
ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியிருக்கிறௌன். தினசரி பத்து கடிதங்கள்
எழுதுவேன். பதினைந்து கடிதங்கள் வரும்.
கடிதங்கள் வருகிற காலம் போய்விட்டன நண்பர்களே.
நீங்கள் யாருக்கும் கடிதங்கள் எழுதுவதில்லை
நான் யாரிடமிருந்தும் கடிதம் பெறுவதுமில்லை. இந்த சமூக ஊடகங்கள் வந்த
பிறகு அல்லது இந்த கைபேசிகள் வந்த பிறகு நாம் கடிதங்களை இழந்து
விட்டோம் என்று தான் நான் நினைக்கின்றேன. மின்னஞ்சல்களில் கூட
தனிப்பட்ட பறிமாற்றங்களே இல்லை நண்பர்களே. உங்கள் ஊரில் மழை
பெய்கிறதா முன்பெல்லாம் பேருந்துகளிலே நீங்கள் ஏறி உட்கார்ந்தால்
பக்கத்தில்.இருக்கிற ஒரு தலைப்பாகைக்காரர் அல்லது ஒரு நரைத்த
மீசைக்காரர் உங்க ஊர்ல மழை உண்டா என்றுதான் கேட்பார். நாம் இப்போது
மழையைப் பற்றி கேட்பதுவுமில்லை வெயிலைப்பற்றி கேட்பதுவுமில்லை
நண்பர்களே. நீங்கள் இப்போது எதைப் பற்றித்தான் கேட்கிறீர்கள்.
அரசியலைப்பற்றி கேட்கிறீர்களா அதுவும் இல்லை. சினிமாவைப்பற்றி
கேட்ப்பீர்கள். சினிமாவைப்பற்றி கேட்ப்பீர்கள் அல்லது நீயா நானாவைப் பற்றி
கேட்கிறீர்கள். பெண்களாக இருந்தால் நெடுந்தொடரைப் பற்றி கேட்கிறீர்கள்
அல்லது பேசிக்கொள்கிறீர்கள். நாம் கடிதங்களை இழந்து விட்டோம்.
கடிதங்களை இழந்ததின் மூலமாக ஒரு சமகாலத்து வாழ்வின் பதிவுகளை
இழக்கிறீர்கள்.
நீங்கள் சொல்ல முடியாமல் மன உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட எதையுமே
பகிர்ந்து கொள்ளாத ஒரு நெருக்கடிக்குள் இருக்கிறீர்களே. அதையெல்லாம்
அந்த கடிதங்கள் பழைய காலங்களில் விடுவித்துக்கொண்டே இருந்தன.
நீங்கள் வேறு யாருக்கோ சொல்லுவீர்கள் அவர்கள் உங்களுக்கு
சொல்லுவார்கள் அல்லது இன்னொருவருக்கு சொல்லுவார்கள். அந்த
கடிதங்கள் செய்த மாயம் பெரிய மாயம் அதனால் தான் அவை மாயமாகி
விட்டன என்று நான் நினைக்கின்றேன்.
அப்படி ஒரு கடிதம் வருமா வருமா என்று நான் எதிர்பார்த்த சூழ்நிலையில்
தான். நீங்கள் கறபனை செய்து பாருங்கள் உங்கள் வீட்டில் அநேகமாக எல்லா
நடுத்தர குடும்ப வீட்டில் ஒரு மர அல்லது இரும்பு கதவிருக்கும் அதில் ஒரு
சிவப்பு வர்ணமடிக்கப்பட்ட அல்லது பச்சை வர்ணடித்து துருப்பிடித்த ஆணி
வாய் பிளந்த ஒரு சற்று சிறகொடிந்த பறவையைப்போல ஒரு அஞ்சல் பெட்டி
தொங்கிக்கொண்டிருக்கும் நான் என்னுடைய அஞ்சல் பெட்டியை திறந்து
திறந்து பார்க்கிற காலம் இன்றைக்கு வரைக்கும் உண்டு. சாகித்ய அகாடமி
இந்த மாலையைப்போல எனக்கு மற்றொரு விருதை
அளித்திருக்கிறதென்றால் என்னுடைய அஞ்சல் பெட்டியில் டிசம்பர் 22ம்
தேதியில் இருந்து இன்று வரை கற்றை கற்றையாக கடிதங்கள். கற்றை
கற்றையாக கடிதங்கள்.
கடிதங்களைப்போன்ற விருது எனக்குக் கிடையாது. எனக்குக் கிடையாது.
நான் பெரும் விருதுகளை இந்த சாகித்ய அகாடமி என்ற ஒரு விருதின்
மூலமாக நான் அடைந்திருக்கிறேன்.
நான் கடிதங்களே வராத ஒரு பருவத்தில் எழுதிய இந்த கவிதையை உங்கள்
முன்னால் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்
.....
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால் பெட்டியைத் திறந்து
பார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது
இரண்டு நாட்களாகவே எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்
எந்தப் பறவை எழுதியிருக்கும் இந்தக் கடிதத்தை
.....
என்னுடைய தபால் பெட்டியிலே எதோ ஒரு பறவை என் சுண் டு விரல் முதல்
இரண்டு கண்ணிகள் அளவு கூட இராத ஒரு சிறு இறகை நான் பார்க்கும் போது
அது எந்த பறவை எனக்கு எழுதிய கடிதம் என்று தான் எனக்கு தோன்றுகிறது
நண்பர்களே.
நாம் முதலில் ஒரு கடிதம் எழுதுகிறவராக இருப்போம் அல்லது அப்படி கடிதம்
எழுதுவதன் மூலமாக ஒரு பறவையாக இருப்போமே. ஏன் இருக்கக் கூடாது
நண்பர்களே. கடிதம் எழுதுங்கள். உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள். தபால் பெட்டியை நிரப்புங்கள். என்னுடைய தகப்பனின்
தபால்பெட்டி எப்போதுமே நிரம்பி இருந்தது.
என்னுடைய தபால் பெட்டி எப்போதுமே நிரம்பி இருக்கிறது. அந்த
வகையிலேதான் உணர்வுகளை திரும்ப திரும்ப திரட்டிக்கொள்கிற ஒரு
அற்புதமான ஒரு சிறிய தடமாக என்னுடைய தபால்பெட்டிகள் இருந்து
கொண்டிருந்தது என்று நான் சொல்லுவேன்.
சற்று பிரண்டு பிரண்டு அல்லது புரண்டு புரண்டு நான் என்னுடைய பகிர்வை
நான் மேற் செல்லலாம் என்று நினைக்கிறேன்.
காமராசு அவர்கள் நிறைய சொல்லிவிட்டார். பென்னேஸ்வரன்
சொன்னதைப்போல பென்னேஸ்வரன் பேச வேண்டியதை எல்லாம் எப்படி
காமராசு அவர்கள் சொல்லிவிட்டாரோ அதைப்போல நான் உங்களிடம்
ஏற்புரைக்க வேண்டியதை எல்லாம் காமராசர் சொல்லிவிட்டார் என்றே நான்
நினைக்கிறேன்.
அவர் என்னுடைய கதைகளில் ஆண் பெண்களின் புதிர்கள் நிரம்பி இருப்பதாகச்
சொன்னார். நீங்கள் ஒரு ஆணாக இருந்தால் ஒரு பெண்ணைப் புரிந்து
கொள்ளுங்கள் அல்லது ஒரு பெண்ணாக இருந்தால் ஆணைப் புரிந்து
கொள்ளுங்கள்.
அப்படி ஒரு புரிதல் நிகழுமெனில் அது நிகழ்ந்து கொண்டிருக்கிறது நிகழாமல்
இல்லை சற்று குறைவாக நிகழ்கிறது அந்த குறைவான புரிதல் பேரளவிலே
அல்லது ஒப்பீட்டளவிலே அதிகம் நிகழுமெனில் இந்த ஆண்களுக்கும்
பெண்களுக்கும் இடையே புதிர்கள் இருக்காது நண்பர்களே. இந்த பாலியல்
சார்ந்த நான் செய்தித்தாள்களில்மிகமிக சமீப பத்து நாட்களில் கண்டு
அதிர்ச்சியுறுகிற நிகழ்வுகள் எல்லாம் இருக்காது நண்பர்களே
சற்று ஆண் பெண்ணை புரிதல் வேண்டும் அல்லது பெண் ஆணைப் புரிந்தால்
போதுமானது என்றே நான் நினைக்கின்றேன்.
என்னுடைய கதைப்பாத்திரங்கள் எல்லாம் மிகவும் சாதுவானவை மிகவும்
மென்மையானவை என்று காமராசர் அவதானித்தார். உண்மை தான்
நண்பர்களே ஒரு படைப்பாளி போராளியாக இருக்கும் போது அவனுடைய
படைப்பில் வருகிற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் போராளியாகத்தான்
இருப்பார்கள்.
என்னுடைய கதைகளிலே சாதுவானவர்கள் வருகிறார்கள் என்றால் அல்லது
என்னுடைய கதைகளிலே வருகிற பாத்திரங்கள் பெண் பாத்திரங்களும் ஆண்
பாத்திரங்களும் மென்மையானவர்கள் என்றால் ஒருவகையில் அதை
எழுதுகிற நான் ரொம்ப சாதுவானவன் என்பதும் ரொம்ப மென்மையானவன்
என்பதுமே அடிப்படையானது நண்பர்களே..
நான் என் மற்றொரு கவிதையிலே எழுதியிருப்பேன் இவனைப் போலத்தானே
இருக்கும் இவனது கவிதையும் என்று.. என்னைப்போலத்தானே இருக்கும்
என்னுடைய கதைகளும் அல்லது கதைகளில் வரும் பாத்திரங்களும்.
நான் மனிதர்களை வாசிக்கிறவன் என்று சொன்னால் மனிதர்களை
வாசிக்கிறவன் புத்தகங்களை வாசிக்கிறவனையும் விட மேலானவன்
அல்லவா. அதிலும் உங்களை புத்தகங்களை வாசிக்கத் தருகிற ஒரு
படைப்பாளி நிச்சயம் மனிதர்களை வாசிக்கிறவனாகவும் தொடர்ந்து அந்த
வாசிப்பில் இருக்கிறவனாகவும் தான் இருக்க முடியும்.
நான் இன்னும் என் எதிரில் வருகிறவர்களையும் என் உடன்
வாழ்கிறவர்களையும் வாசித்துக் கொண்டே இருக்கிறேன்.தீராத
வாசிப்புக்குறிய ஒரு புத்தகம் உண்டென்றால் அது மனிதர்களாகத் தான்
இருக்கமுடியும் அல்லது இந்த வாழ்க்கையாகத்தான் இருக்கும் என்று
நம்புகிறேன்
எல்லோருக்கும் அன்புடன் என்பது தான் என்னுடைய அந்த கடிதத்தினுடைய
கடிதத் தொகுப்பினுடைய தலைப்பு. நான் என்னுடைய கதைகளின் வழியாக
சொல்வதும் கூட எல்லோருடனும் அன்புடனும் இருத்தல்
என்பதைப்பற்றித்தான்.
அதெப்படி எவ்வளவோ நிகழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலத்தில் நீ எப்படி
எல்லோருக்கும் அன்புடன் இருப்பாய் என்று நீங்கள் கேட்கலாம். ஏன்
இருக்கக்கூடாது?
எல்லோருக்கும் அன்புடன் இருக்க வேண்டிய காலமே யாருமே உங்களிடம்
அன்பை செலுத்தாத காலத்தில் தானே நீங்கள் அப்படி இருக்க வேண்டும்.
நீங்கள் இந்த வாழ்வு அல்லது இந்த சக மனிதர்கள் அன்பற்றது என்று நீங்கள்
உணர்வீர்கள் என்றால் தயவு செய்து நீங்கள் அவர்களிடம் அல்லது அந்த
வாழ்க்கையிடம் அன்பாக இருந்து பாருங்கள் நண்பர்களே.
அன்புற்று வாழ்தல் இனிது என்று பாரதி சொல்லியிருப்பான். செய்க தவம்
செய்க தவம் என்று பாரதி சொல்வது அன்பை முன் வைத்து தான் என்று
நினைக்கிறேன்.
இந்த விருது மறுபடியும் நான் இந்த விருதுக்கு வந்தால் நான் இந்த உரையை
நிறைவு செய்து விடலாம் என்று நான் நினைக்கின்றேன்
நான் இந்த மனிதர்களைப்பற்றியும் வாழ்க்கையை பற்றியும் உங்களிடம்
இவ்வளவு சொல்லும்போது இந்த விருது எனக்கு என்ன செய்து
கொண்டிருக்கிறது? வெறும் ஒரு அருமையான ஒரு சந்தன நிற சால்வை
அல்லது என்னுடைய ஆளுயர மாலை அல்லது ஒரு பெரிய இலச்சினை
நிரம்பிய பரிசு இதை மட்டுமா அளித்திருக்கிறது நண்பர்களே .
இந்த விருது நேற்று தான் எனக்கு அளிக்கத்துவங்கியிருக்கிறது என்று நான்
நினைக்கின்றேன் . எப்படி என்றால் நான் எனது முந்தைய கூட்டத்திலே
சொல்வதைப்போல ஒரு விருது ஒரு படைப்பாளியை நிறைய மனிதர்களிடம்
கொண்டு சேர்க்கிறது அதை நீங்கள் சற்று எளிமைப்படுத்தி சொல்வதென்றால்
நான் அப்படிச் சொல்ல வேண்டாமென்று நினைக்கின்றேன் இந்த விருது
என்பது நிறைய வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது. ஒரு வாசகன் என்பவன்
மனிதனாகவே தான்.
...
சமீபகாலங்களில் மிக அதிகமாக நான் வாசகர் என்ற சொல்லை விட்டு அகன்று
நான் மனிதன் என்ற சொல்லை நான் அதிகம் உச்சரிக்க விரும்புகிறேன்.
இந்த ஒரு சிறு இசை என்பது அதற்கான இந்த
சாகித்ய விருதை பெற்ற பிறகு என்னை
ஆயிரக்கணக்கான மனிதர்களின்
மனங்களிலே கொண்டு சேர்த்திருக்கிறது
நான் நேற்று நூற்று பேரை அடைந்திருந்தேன் என்றால் இன்று இந்த அரங்கில்
இருக்கிற உங்களை எல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட ஒரு நூற்று அறுபது
பேரை அடைந்திருக்க மாட்டேனா. இந்த நூற்றுஅறுபது பேரையும் நான்
அடைவதற்கு எனக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது அல்லது என்னிடம் என்ன
பாத்திரம் இருக்கிறது இவர்களை எல்லாம் பெற்றுக்கொள்வதற்கு என்று
பார்த்தால் நான் என்னுடைய முன்னோடிகளைப்போல அல்லது எனக்கு பின்
வருகிற சகாக்களைப்போல நான் நூற்று அல்லது இருநூறு பக்கங்கள் அளவில்
இருக்கிற சிறுகதைகளை எழுதிக்கொண்டும் அல்லது ஒரு நானூறு ஐநூறு
கவிதைகளை எழுதிக்கொண்டும் இருப்பதால் தானே நண்பர்களே நான்
உங்களை எல்லாம் அடைந்திருக்கிறேன். நான் மேலும் சிலரை அடைய
விரும்புகிறேன் . நான் ஏற்கனவே சொன்னதைப்போல நின்று
கொண்டிருப்பதைவிட சென்று கொண்டிருப்பதைத்தான் விரும்புவேன்.
நான் மேலும் சிலரை அடைய விரும்புகிறேன்.
அவர் குறிப்பிட்டதைப் போல நான் இந்த விருதோடு நின்று விட மாட்டேன்
நான் சென்று கொண்டே இருப்பேன் நீங்கள் அடுத்த புத்தக கண்காட்சிக்கு
என்னுடைய அடுத்த புதிய சிறுகதை தொகுப்பை கூட நீங்கள் வாசிக்க
போகிறீர்கள் . விருது என்னை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.
உங்களைப்போல உயிர்ப்புள்ள மனிதர்கள் முன்னால் என்னை
நிறுத்தியிருக்கிறது. அந்த வகையிலே சாகித்ய அகாடமி விருது
அளித்தவர்களுக்கும் காமராசரைப்போன்ற என்னைப் புரிந்த நண்பர்களுக்கும்
இந்த தமிழ் சங்கம் சார்ந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றியை சொல்லி
விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்