Tuesday, 19 November 2013

கீத கோவிந்தம் - 1973.











அந்த எழுதுபொருளை/கடித ஏட்டை யார் எனக்கு வாங்கித் தந்தார்கள் என நினைவில்லை. 1973க்கு முந்திய பருவம் அது. நீல முகப்பு. கீத கோவிந்தம் என ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருக்கும். உள்ளே ஒவ்வொரு தாளிலும் ஓரத்தில் ஆங்கிலவடிவில் ஒரு கீத கோவிந்தம் பகுதி. அதற்குப் பொருந்தும் படி ஒரு கண்ணன் ராதை படம். தெற்கத்தி பாணி இல்லை. யாரோ வடக்கத்தி ஓவியர் வரைந்தது. ராதை கிருஷ்ணன் இருவருக்குமே வடபக்கத்துச் சாயல்தான். என்னை அந்தப் படங்கள் வரையத் தூண்டவில்லை. அந்த என் 27 வயது மனம் அதில் அச்சிடப்பட்டிருந்த கீத கோவிந்தம் பகுதிகளை தமிழில் ஆக்க விரும்பியது. என்னுடைய பெரிய அத்தான் மிக அழகான, உறுதியான தாள்க்கட்டுள்ள பரிசை எனக்கு அளித்திருந்தார். அதன் துவக்கப் பக்கங்களில் நான் கீதகோவிந்தம் பகுதிகளை, அந்தந்த சமயம் எனக்குத் தோன்றிய சந்தங்களில் எழுதி மொழியாக்கினேன்.
%
விடியல் அவிழ்கின்ற வெள்ளிச் சிறுபொழுதில்
மடியில் அமர்ந்திருந்து கண்ணன்
படியப் படியக் குழல் வடிவுதிருத்துவதைப்
பார்த்து ரசித்துவிட எண்ணி
பவள விரல்சுமந்த பளிங்குவளை யிடத்துப்
படியும் எதிரொளியைப் பார்க்க
குழையக் குழையவந்து கோதை சிகை சரிந்து
கோல வளைமுகத்தைப் போர்த்தும்.
*
உன்விரலின் பூநுனிகள் பட்ட, தொட்ட
ஓ!உந்தன் வேய்ங்குழலில் கீதம் சொட்டும்.
நானந்தக் குழல் ஆனால்  உந்தன்மூச்சாம்
நாதத்தேன் பாய்ச்சாதோ இதழ்கள் என்னுள்.
*
மாயமிருக்குதடி – இந்த
மன்னவன் செய்கலையில்.
தோயத் தோய மனம்
தொட்டு இழுக்குதடி.
என்னைக் கண்ணனின்று
ஏதும் பிரித்திடவோ
உன்னில் கலந்துவிட்டால்
ஓரங்க மாகிவிட்டால்?
*
‘கண்ணிலிருந்து கண்ணா – உறக்கம்
களவு கொண்டுவிட்டாய்
இன்னும் எதற்கு குழல் – அமுதம்
எடுத்து ஊதுகிறாய்?
மோகப் பெருந்தீயில் மேனி
முற்றும் எரிகையிலே
ராகம் இசைப்பதுவோ – நானுன்
ராதை மலர் அல்லவோ
*
‘காதல் ஒன்றுதான் நித்தியம் ராதே
கனவடி மற்றவையோ.
மேலுறக் காதலே கொண்டு நமைச் செலும்
மீளத் திரும்பல் இல்லை.
மானுடக் காதலில் மட்டும் பிரிவெனும்
மயக்கம் உண்டடியோ.
ஆயின் என்? பிரிவு மீதுறின் மீண்டுமே
ஆவி கலந்திடலாம்.
*
‘ஏனடி ராதே முகம் திருப்பி
என்னைத் தவிக்கவிட்டாய்?
பாலைத் தனிமலர் போலப் பனித்துளிப்
பவனிக் கேங்கவிட்டாய்?
தாகம் எடுத்து நான் தவித்துக் கிடப்பது
தட்டுப் படவில்லையோ?
மோகம் தணித்திட, மேனி அணைத்திட
முற்றும் மனமில்லையோ?
*
‘கண்ணா உன் கருவிழிக்கு எத்தனை ஆழம்
காட்டுதடா கணம் கணமும் ஆயிரம் கோலம்
*
‘மன்னிக்க வேண்டுமடி மானஸ ராதே
மறுபடியும் மறுபடியுன் கண்விழி போதைக்
கடலினையே பார்த்திருந்தால் உறக்கமுமில்லை
கங்குல் வரும், போகும் உனை மறப்பதுமில்லை
*
‘கொஞ்சமும் வெட்கமின்றி உன்
கோலக் கரங்களினால்
பஞ்சுக் குழம்பெடுத்து – எந்தன்
பாதம் அலங்கரித்தாய்.
என்ன இனிமை கண்ணா, காதல்
என்னும் விளையாட்டு.
முன்னில் முழுமை கண்டோம் – ராதை
மோகனக் கண்ணன் என.
*
‘எப்படி உலகில் விழிக்க – நான்
எங்கே போய்முகம் ஒளிக்க?
கண்ணனின் கீதத்தில் நனைந்தேன் – அவன்
காதலிலே மனம் கரைந்தேன்
துகிலும் நழுவ நடந்தேன் – அவன்
தோளைத் தழுவிக் கிடந்தேன்.
தலைவன் இடத்துப் பறந்தேன் – என்
தண்ணீர்க் குடத்தை மறந்தேன்.
எப்படி உலகில் விழிக்க – நான்
எங்கே போய்முகம் ஒளிக்க?
*
‘நாமாட, கைகோர்த்து நம்முடன் இயற்கையும்
நாட்டியம் ஆடுது கண்ணா.
பருவத்தின் அற்புத பாவங்கள் காட்டியே
பக்கம் வந்தாடுது கண்ணா.
செம்மலர்க் கன்னங்கள் பின்னும் சிவந்திடச்
சேர்ந்துவந்தாடுது கண்ணா
வளர்மயில் தோகையின் நீலத்தில் வான் நிறம்
வந்துவந்தாடுது கண்ணா.
நாமாட, கைகோர்த்து நம்முடன் இயற்கையும்
நாட்டியம் ஆடுது கண்ணா
*
‘அன்பனே என்னிதழகள் – உனை
ஆயிரமாய் அழைக்க
என்னென்ன தொல்லையடி – காதல்
என்னும் விளையாட்டில்
என்னைப் பழிப்பதுவோ – கண்ணா
என்னைப் பழிப்பதுவோ?
உன்னுடைக் காதலினால் – இதயம்
உன்மத்தம் ஆகிவிட்டால்?
*
கொஞ்சம் விழிக்கடையில் பார்த்தால்
கவிதை
கோடி வரி திரும்பும் ராதே!
பஞ்சு விழிமலர்த்தும் மௌனம்
காதல்
பாடல் மதுச் சரிக்கும் ராதே!
ஏகச் சுதந்திரத்துப் பிரேமை
நம்மை
இறுகப் பிணைக்குதடி ராதே!
ஏதும் பிரித்திடுதற் கில்லை
என்று
இறுகத் தழுவிடடி ராதே
*
73ல் எழுதிய இந்த கீதகோவிந்தம் பெயர்ப்பை, என் 95-99 சென்னைப் பருவத்தில் என் நண்பர் ஆ. ஆனந்தனுக்குப் பிரதியெடுத்து என் கையெழுத்தில் கொடுத்திருக்கிறேன். ஒரு சலிப்பில் இருந்த மனநிலையில் அத்துடன் ஒரு ஆங்கில நறுக்கு வேறு.
          ‘Dear Ananthan,
                          Those ‘geeth-govind’ lines, which I translated during the year 1973.
                   Just go through and throw it to the wind, as the intervening life during these
                   22 years has thrown the pep,fervor and romantic flair within me, to the dust,
                   Off late, to the dust of the city, now.
                  Kalyaani.s.
*
இதையும் ஆனந்தன் தன்னுடைய 07.11.13 கடிதத்துடன் தான் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். சில சமயங்களில் தபாலில் இப்படிப் பழுப்பு நிறத்தாளில்  பொதியப்பட்ட பொக்கிஷங்கள் வந்துசேர்கின்றன.















Monday, 11 November 2013

சந்தனம்.








என்ன தூங்கலையா குட்டி?
சந்தனத்தைக் கவனித்த மாதிரியே தெரியவில்லை.
லோகாவின் தலைமுடியை விரல்களால் கலைத்துவிட்டு சைலு போய்க்கொண்டிருந்தார். அப்பா ரொம்பப் பிரியமான நேரங்களிலும் சந்தோஷமாக இருக்கிற பொழுதுகளிலும்தான் இப்படிச் செய்வார் என்று லோகாவுக்குத் தெரியும்.
இன்று அப்படி இருக்க நியாயங்கள் உண்டு. அவர் மிகவும் கனவு கொண்டிருந்த அந்த அருவிச் சாலை ரிஸார்ட் கட்டுமானத்தை முடித்து, காலையில் திறப்பு விழா நடத்தியிருந்தார். மலையின் நீல அழைப்புக் கேட்கிற தூரத்தில், அருவியின் வெள்ளி ரிப்பன் அசைவது தெரிகிற நெருக்கத்தில், அதுவும் ஒர் பெரும் நெருக்கடியிலிருந்து மீண்ட முதல்  நொடியில் துவங்கி வேகமாகக் கட்டி முடித்துவிட்டார்.
ஒரு கட்டத்தில், லோகாவின் பொறியியல் படிப்பு முதல் வருடத்தில் நின்று விடும் போல இருந்தது. மூன்று கார்களில், முதலில் குவாலிஸ், அப்புறம் ஃபியெஸ்டா இரண்டையும் விற்றிருந்தார். சமீபத்தில் உபயோகிக்கவே செய்யாத. அனேகமாக சாலைகளை மறந்துவிட்ட பிரிமியர் பத்மினியை அவரே ஓட்டினார். இப்போது மறுபடியும் இன்னோவா.  மறுபடி டென்னிஸ். மறுபடியும் டிஸ்ட்ரிக்ட் க்ளப் பின்னிரவுகள். லோகா படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டாள். அவளுக்குக் கல்யாணம் பேசி தேதி வைத்தாயிற்று.
லோகா அப்பா போவதையே பார்த்தாள்.  அப்பா அவருக்குப் பிடித்த இரவு உடையான கட்டம்போட்ட வெள்ளை லுங்கியில் இருந்தார். குளித்த புத்துணர்வு முகத்தில். வாசனைத் தெளிப்புடன் மிதமாக அருந்திய வேறு வாசனையும் அவருடன் நகர்ந்தது. சற்று நேரத்தில் படுக்கையறையில் இருந்து இசை வரும். அனேகமாக வீணை. போகும் போது அப்பா ஒரு இடத்தில் நின்றார். இந்தத் தாழ்வாரத்துக்கும் அவருடைய அறைக்கும் போகிற இடத்தில் வளர்ந்து கிடக்கும் புல்லுக்குள் இரண்டு கீரிப் பிள்ளைகள் வருவது போலவும் போவது போலவும் விளையாடிக்கொண்டு இருந்தன.
‘சந்தனத்தை எல்லா விளக்குகளையும் போடச் சொல், லோகா’  என்று அங்கே இருந்து சத்தம் கொடுத்தார். இதைச் சந்தனம் தாத்தாவிடமே நேரடியாகச் சொல்லியிருக்கலாம். லோகாவுக்கு நேர் எதிரே தான் அவர் காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறார். ஆனால் சொல்ல மாட்டார். தன் மடியில் இருந்த பூச் செண்டுகளைக் கீழே வைத்துவிட்டு சந்தனம் எழுந்திருக்கச் சிரமப்பட வேண்டும். வயதாகிவிட்டது. மூன்று தலைமுறைகளாக இந்த வீட்டோடும் வாசலோடும் சம்பந்தம்.
‘நீங்க இருங்க தாத்தா- லோகா எழுந்திருந்து அத்தனை விளக்குகளின் பொத்தானையும் அமுக்கினாள். எது எதற்கானது என்று தெரியாமல் எல்லாவற்றையும் அழுத்தியதால், அழைப்பு மணியும் சத்தமிட்டது. பின் வாசலை ஒட்டியும் ஒரு அழைப்பு மணி வைக்கவேண்டும் என யோசனை சொன்னது சந்தனம் தாத்தா தான். ‘என்னை மாதிரி புறவாசல் வழியாகப் புழங்குகிறவனுக்கு அப்படி ஒண்ணு வேணும்லா’  - என்று அவர்தான் சொன்னதாகவும், அது நல்லதாகப் போய்விட்டதாகவும் லோகாவின் அம்மா, பின் வாசல் வழியாக நாட்டுக்கோழி முட்டை கொண்டுவந்து கொடுக்கும் பழனித்தெரு அம்மாக்குட்டியிடம் சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டு இருந்ததை லோகா கேட்டிருக்கிறாள்.
அம்மாக்குட்டிக்கு அப்போதே ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். அவளுக்கு சந்தனம் தாத்தாவைப் பிடிக்கும் போல. எழுபது வயதில் முடி எப்படி நரைக்காமல் இருக்கும்? மேல், கால், நெஞ்சு எல்லாம் சுருட்டை சுருட்டையாக வளர்ந்து கிடக்கிற அவரைப் பார்த்து, ‘ ஆளைப் பாருங்களேன், கரடி மாதிரி இருந்துக்கிட்டு. கரடி. கரடிஎன்று குனிந்துகொண்டே சொல்வாள். தாத்தாவும் லேசுப்பட்டவர் இல்லை. அம்மாக்குட்டியின் முட்டைக் கூடைக்குள் கையை விட்டு ஒன்றை எடுத்து, பூப்போல குளியலறைச் சுவரில் தட்டி, அப்படியே இரண்டாகப் பிட்டு வாயில் விட்டுக்கொள்வார். அத்தோடு முடிந்து போகாது. ‘இது சைலு அய்யா கணக்குக் கிடையாது. உன் ஆமக்கன் கணக்கில எழுதிக்கோஎன்று வாயைத் துடைத்துக் கொள்வார். ‘ஆமக்கன்என்றால் லோகாவுக்கு அர்த்தம் தெரியவில்லை. அம்மாவிடம் கேட்டால், ‘யாரு சொன்னாங்களோ அவங்க கிட்டேயே போய்க் கேளுஎன்று நகர்ந்துவிட்டாள்.
எல்லா விளக்குகளும் பளீரென்று எரிய, இந்தப் பதினோரு மணிக்குப் பிந்திய இரவில் வீடு வேறொரு மாதிரி அழகாகிவிட்டது. விசேடம் நடக்கிற வீடுகளில், ஒவ்வொரு இரவும் ஒரு மாதிரி அழகாக இருக்கிறது. விசேடம் நடக்கப் போகிறபோது ஒன்றாகவும், நடந்து முடிந்த பிறகு முற்றிலும் இன்னொன்றாகவும் அது ஆகிவிடுகிறது. அலுப்பில் சற்றுச் சீக்கிரமாகவே படுத்துவிட்ட லோகாவின் அம்மா, எல்லா விளக்குகளும் எரிந்தவுடன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். வெளியே வரும்போது அவளுடன் தலைவலித் தைல வாசனையும் வந்தது.  ‘என்ன? தாத்தாவும் பேத்தியும் தூங்குகிறதாக இல்லையா?என்று கேட்டாள். படுத்து எழுந்திருந்த முகத்துச் சிரிப்பு. லோகாவின் அம்மா வருவதைப் பார்த்ததும் நீட்டியிருந்த கால்களை மடக்கிக்கொண்ட சந்தனம், ‘அய்யா கீரிப் பிள்ளைகள் கூடப் பேசிக்கிட்டு இருக்காஎன்றார். லோகாவுடைய அம்மாவிடம் அவர் சிரித்தால் போலப் பேச முடிந்தது.
லோகாவின் அம்மாவைத் தன் பக்கம் வரச் சொல்லி சைலு கையை அசைத்துக் கூப்பிட்டார். லோகாவின் அம்மா பெயர் மணிமேகலை. சைலு, ‘பாப்பாஎன்றுதான் சொல்வார்.  கையை அசைக்காமல், ஒரு தடவை ‘பாப்பாஎன்று அவர் கூப்பிடவேண்டும் போல லோகாவின் அம்மாவுக்கு விருப்பம் உண்டாயிற்று. தானாக வந்த சிரிப்புடன் வழியில் நிற்கிற வெள்ளைச் செம்பருத்திச் செடியைத் தடவியபடி நடந்து போனாள். லோகாவுக்கு அப்பாவை நோக்கிப் போகும் அம்மாவைப் பிடித்திருந்தது. தாத்தாவின் தோள்களைத் தட்டி அவர்கள் பக்கமாகக் காட்டினாள்.
‘கண்ணு தெரியலையேஎன்று இடது பக்கம் துளாவி, தரையிலிருந்த கண்ணாடியை அணிந்து பார்த்தபடி சிரித்தார். ‘நிறைஞ்சாப்பில இருக்கு தாயிஎன்றார். லோகாவுக்கு அம்மாவும் அப்பாவும் அப்படி ஒன்றாக நிற்பது இந்த இரவின் மிக நல்ல காட்சியாக இருந்தது. இப்போது கீரிகள் கூட, போய்விட்டிருந்தன. வெறும் புல்லை மட்டுமே பார்த்து நின்றார்கள். எதையுமே பார்க்காவிட்டால் கூட, அவர்கள் அழகாகத்தான் இருப்பார்கள் என்று லோகாவுக்குத் தோன்றியது.
சைலு ஏதோ சொல்ல, லோகாவின் அம்மா சற்று உரக்கச் சிரித்து அவர் தோளில் அடிப்பதும் லோகாவை அங்கே வரச்சொல்வதுமாக இருந்தாள். லோகா போகவில்லை. இங்கிருந்துகொண்டு, ‘நீங்கள் இருவரும் அங்கே இருப்பது நன்றாக இருக்கிறதுஎன்று பெருவிரலையும் சுட்டு விரலையும் வட்டமிட்டுச் சொன்னாள். அவர்களை ஒரு புகைப்படம் எடுத்தாள். எப்படி வந்திருக்கிறது எனப் பார்த்துக்கொண்டாள். மேலும் இரண்டு மூன்று எடுத்தாள். எடுத்ததை விரல் தடவி நகர்த்தி, பெரிதாக்கி, இடது வலது புறம் சரிசெய்து சந்தனத்திடம் காட்டினாள். அப்புறம் அவரை அவள் எடுத்திருந்த படங்களையும்.
‘என்னைப் போயி எதுக்கு இம்புட்டுப் படம் பிடிச்சிருக்கிய தாயி?என்று சந்தனம் சிரித்தார். கருப்புச் சட்டத்துக்குள் கனத்த லென்ஸில் மினுமினுத்து பூதம் காட்டிய அவருடைய முதிர்ந்த கண்களின் இமைகள் சந்தோஷத்தில் ஒரு வண்ணத்துப் பூச்சி இறகுகளாக அசைந்து மூடின.
‘ ஏ யப்பா. எம்புட்டுப் படம். சாகமாட்டாதவனுக்கு வந்திருக்கிற பவுசைப் பார்க்கணுமேஎன்று அவர் அவளிடம் சொல்கையில் பார்த்த படத்தில் அவர் அவருடைய இயல்பான நிலையில் எப்போதும் போல இருந்தார். பழைய காலத்து பச்சை பெல்ட்டும் மணிபர்சும். இடுப்பில் ஒரு சாயல்புரம் சாரம். மேல் சட்டை கிடையாது. இன்னொரு விஷேச அடையாளம் கழுத்தில் போட்டிருக்கிற துண்டின் இரண்டு நுனிகளையும் அவர் வலது இடது கைகளின் கீழ் கக்கத்துக்குள் செருகி வைத்திருப்பது. ஆறு அடி உயரத்தில் வீமனைப் போல அவர் நிற்பதைப் பார்க்கையில் சிலந்திமனிதன் போல லோகாவுக்குத் தெரிந்தது. எல்லாப் படங்களிலும் மெத்தை போல அவருக்கு நெஞ்சில் இருக்கிற முடியைப் பார்த்ததும் அவரே, வாஸ்தவம்தான். கரடிண்ணு சரியாத்தான் பேரு வச்சிருக்காங்க கிழட்டுப் பயலுக்குஎன்று சிரித்தார். வெற்றிலையும் புகையிலையும் சுருட்டும் பல்லில் கறையேற்றி இருக்கிறதே தவிர, ஒன்று கூட விழவில்லை. வரிசை தப்பவில்லை.
லோகா ‘இதைப் பாருங்கஎன்று இன்னொரு படத்தைக் காட்டினாள். ‘இது மோகினிப் பிசாசு மாதிரி இல்லா கூடவே கூட்டிக்கிட்டுப் போகுது. விடிய விடியண்ணாலும் மாத்தி மாத்தி எம் மூஞ்சியைப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். ஜோலி கெட்டுப்போகும் வள்ளிசா. ஏற்கனவே பதினொண்ணு தாண்டியாச்சு ‘. சந்தனம் சொல்லிக்கொண்டே தன்னைச் சுற்றிப் பார்த்தார். திறப்பு விழாவுக்கு அளிக்கப்பட்ட பூச்செண்டுகளில் ஏழெட்டை அவரும் லோகாவும் தனியாகத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்கள். வெள்ளை, மஞ்சள், சிவப்பு ரோஜாக்கள், டேலியா, ட்யூலிப், கருநீல ஆர்க்கிட் மலர்கள்.
முதலில் பொன்னிற, நீல நிற, பச்சை நிற ரிப்பன்களைப் பிரித்து, கண்ணாடி சுற்றுத்தாட்களை அப்புறப்படுத்தி ஆயிற்று. இரண்டு பேர் கைகளிலும் இரண்டு கத்தரிக் கோல்கள் இருந்தன. நீண்ட காம்புகளைத் தேவைக்கு ஏற்ப வெட்டி, வெண்கலப் பாத்திரங்களில் நீர்விட்டு வைக்கலாம் என லோகா சொன்னது அவருக்குப் பிடித்துப் போயிருந்தது. நாளைக் காலையில் எல்லோரும் எழுந்திருப்பதற்குள் மூன்று நான்கு இடங்களில் அவற்றை வைக்க வேண்டும். முக்கியமாக பெரிய அய்யா படத்தின் முன்பு, சைலுவின் அறையில், லோகாவின் அம்மாவின் வணக்கத்திற்கு உரிய ‘அன்னைபடத்தின் முன்னாலும்.
‘இந்த ஒன்றை மட்டும் பாருங்க தாத்தா லோகா அவர் பக்கத்தில் வந்து காட்டும் போது, சந்தனம் மேல் துண்டை இழுத்து கக்கத்துக்குள் செருகிக் கொண்டார். கைவிரல்களுக்குள் கத்தரி விரிந்து இருந்தது. ஒரு தொழில்முறை பூ அலங்காரக்காரர் போல, சீரான அளவுகளில் காம்புகளைச் சந்தனம் நறுக்கியிருப்பதில் ஒரு நுணுக்கம் இருந்தது. வெகுகாலம் தண்ணீர்க் கரையில் நின்ற ஒரு நாணலின் துண்டுகள் என , குளிர்ந்த பச்சையாக வெட்டப்பட்ட அடிக்கட்டைகளை லோகா கையில் அள்ளி உருட்டினாள். அவள் காட்டிய படத்தில் சந்தனம் வானுயர நின்ற ஒரு வேப்ப மரத்தை ஆவி சேர்த்துத் தழுவிக்கொண்டு இருந்தார்.
அந்தப் புகைப்படத்தை எடுக்கும் போது லோகாவிடம் அவர் சொன்னார், ‘இந்த மரம் நான் உங்க தாத்தா கிட்டே வேலைக்குச் சேருகிறதுக்கு மின்னாடியே இருக்கு. நூறு வயசு நூத்தம்பது வயசு இருக்கும். இந்த நூறு நூத்தம்பது எல்லாம் நம்ம சௌகரியத்துக்கு நாமளா வச்சுக்கிடுதது தான். மனுஷாளுக்குத்தான் வயசு எல்லாம். மரத்துக்கு  ஆதி அந்தம் கிடையாது. உங்க தாத்தாவுக்கு மின்னாடி அது இருந்தது. உனக்குப் பின்னாடியும் இருக்கும். அந்தா அந்த மலையை ஒரு விரல்கடை நகட்ட முடியுமா? அருவியை நகட்ட முடியுமா? அது மாதிரிதான் இதையும் வச்சுக்கோ தாயி’ . இத்தனை சொல்கையிலும் அவருடைய முழு உயரமும் உடம்பும் படுகிற வகையில், அதன் மேல் அப்பிக்கிடந்து ஊர்ந்துசெல்லப் போகும் ஒரு உயிர்ப்பிராணி போல சந்தனம் அந்த வேப்பமரத்தின் தூரைக் கட்டிப்பிடித்திருந்தார்.
மேற்கே தூரத்தில் மலையும், வடகிழக்காகத் திரும்பியதும் பாதை பள்ளமாகிற இடத்தில் இதே போல பெரும் வழுவழுத்த சுவராக நிற்கிற பாறையிலிருந்து விழும் அருவியும் இருக்க, ஒரு பெருமரமாகத் தனித்து வளர்ந்திருக்கும் அதை, பாளம் பாளமாக வெடித்துக்கிடக்கும் மரப்பட்டையை, அடி மரத்தை எல்லாம் தடவிக்கொடுத்தபடியே லோகாவிடம் அவர் சொன்னார்.
‘உங்க தாத்தாவுக்குப் பொங்கி ஆக்கிப் போடுத ஒரு தவசிப் பிள்ளையாத் தான் இங்க வந்து சேர்ந்தேன். பத்துப் பதினாறு வயசு இருக்கும். கரிசல் குளத்தில் மாடு,கண்ணு மேச்சுக்கிட்டுக் கிடந்த பயலை, கோயில்பட்டி வக்கீல் ஒருத்தர் மாரியமா, பெரியய்யா கூட்டிக்கிட்டு வந்தாக.’  இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்தி, கழுத்தைத் திருப்பி இடது கையை விசாலமாக வீசி, இங்கேர்ந்து அங்க குளத்துக் கலுங்கு வரைக்கும் அய்யா நிலம் தான்.’  என்று காட்டினார். தண்ணீர் தளும்பிக் கிடக்கிற குளத்தின் கரையில் நாரைகள் வெள்ளையாக இறங்கிக்கொண்டிருப்பதை லோகா பார்த்தாள். பறவைகள் என்பதையும் மீறிய அந்த வெள்ளை அசைவு அவளை அந்த நீர்த்தகடுக்கு இழுத்த சமயம் சந்தனத்தின் வார்த்தைகள் மட்டும் கேட்டன. நீல மலைகளில் இருந்து இறங்கி இந்த அத்துவான வெளியை, வயலை, கட்டப்பட்டிருக்கும் இந்த ரிஸார்ட் கட்டிடத்தை எல்லாம் தாண்டி அந்த மரத்தை நோக்கி சந்தனத்தின் குரல் ஒரு கருவண்டு போலப் பறந்துசெல்வதை அவளால் உணர முடிந்தது.

‘வத்தாத குளத்துப் பாசனம். பெருங்கொண்ட விவசாயம் பண்ணினாரு மகராசன். மனுஷன் கூட அப்படிச் சொன்னபடி கேக்க மாட்டான். மண்ணு அவருக்கு அப்படிச் சொன்னபடி கேட்டது. அவரும் காட்டிலேயேதான் கிடப்பாரு. நானும் இந்தக் காட்டிலேயேதான் கிடப்பேன். பெரியய்யா பல ஜோலிக்காரரு. விவசாயம். விவசாயத்தை விட்டால் வியாபாரம். வியாபாரத்தை விட்டால் கூப்புக் காண்ட்ராக்டு. அது ஒரு பொங்கு திசை. அவுக தொட்டது எல்லாம் துலங்கின நேரம்
‘நான் இங்கனயே ஒத்தையில கிடப்பேன். பேச்சுத் துணைக்குக் கூட ஆள் கிடையாது. இசக்கியம்மன் மாதிரி இதுதான் கூடவே இருக்கும். அங்கே கடுவா வந்துது. இங்கே ஆனை கூட்டம் கூட்டமா இறங்குச்சுண்ணு சொல்லுவாக. இங்கே மூச்சு. பேசப்படாது. ஒரு இடைஞ்சல் கிடையாது. எங்க அம்மை செத்துப் போனது. என் கூடப் பிறந்த அக்காக்காரி ஒருத்தி பேறுகாலத்தில தாயும் பிள்ளையுமா போய்ச் சேர்ந்தது, நம்ம வீட்டு வண்டி மாடு, ஒட்டாங் காளை ஜோடியை ஒண்ணு போல பாம்பு கொத்தினது, நடு வீட்டுல பெரியய்யா வீட்டு நாச்சியாரைக் கட்டிவச்சு நகைய அத்துக்கிட்டுப் போனது,  எல்லாத்தையும் இந்த மரத்துக்கிட்டேதான் சொல்லி அழுதிருக்கேன். நல்லதுண்ணாலும் கெட்டதுண்ணாலும் அதுகிட்டேதான் சொல்லுவேன். ‘இதுக்குப் போயி மனுஷன் அழுவானான்னு ஒரு தடவை சத்தம் கேக்கும். இன்னின்ன மாதிரி இப்படிப் பண்ணுன்னு ஒரு தடவை ரோசனை சொல்லும். ரெண்டு மூணு வாட்டி விடிய விடிய அம்பிலியோட அம்பிலியா, ராத்திரிப் பூரா அது கூடவே நிண்ணுருக்கேன்’.  சந்தனம் இதைச்சொல்லும் போது லோகாவுக்குத் தானும் அப்படியொரு நிலாக் காலத்தில் மேடும் சரிவுமாக உள்ள ஏதோ ஒரு புல்வெளியில் தனியாக நிற்பது போலவும், நிற்கவேண்டும் போலவும் இருந்தது.
‘என்னை எல்லாரும் கிறுக்குப் பய. மரத்தோடு பேசிக்கிட்டு இருக்கான்னு சொல்லுவாங்க. சைலு அய்யா கூட அப்படிக் கிண்டல் பண்ணுவாரு. ஆனா பெரியய்யா ஒரு நாள் கூட அப்படிச் சொன்னது கிடையாது. சொல்லப் போனா, என்னை விட்டுக் கொடுக்காமல்தான் மத்தவங்க கிட்டே பேசுவாரு. உன்னாலயும் என்னாலயும் மரத்துக் கிட்டே பேசமுடியுமா? அவன் பேசுதான். அது திலுப்பி அவன்கிட்டே பேசுதுங்கான். அப்படிண்ணா உன்னையும் என்னையும் விட, அவன் கூடுதல்லா. என்ன நான் சொல்லுதது?என்று மனசாரச் சொல்லுவார். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா தாயி. சைலு அய்யா என்னைக் கிண்டல் பண்ணினாரே தவிர, ரொம்ப இக்கட்டான ஒரு கட்டத்தில், நாலு வருஷத்துக்கு முந்தி, காரில என்னையும் ஏத்திக்கிட்டு இங்க வந்துட்டாரு. நேரா இந்த மரத்துக்கிட்டே போயி கெட்டிப்பிடிச்சு அழுது புலம்பினாரு. நான் இந்தக் கண்ட்ராவி நமக்கு எதுக்குண்ணு தள்ளிப் போயி நிண்ணுக்கிட்டேன். செத்த நேரம் ஆயிருக்கும். ஏதோ உத்தரவு கிடைச்ச மாதிரிக் கண்ணைத் துடைச்சுக்கிட்டே வந்து, போலாம்னு கிளம்பிட்டாக. அதிலே இருந்து எண்ணி ரெண்டே மாசத்துல, அளக்கிறது என்ன, நூல் பிடிக்கிறது என்னண்ணு கட்டுமான வேலையை ஆரம்பிச்சாச்சுஎன்றார்.
‘உங்க தாத்தா காலத்துல வயல்காட்டைக் காத்துக்கிடந்தேன். இந்த ரெண்டு மூணு வருஷமா கட்டிடத்தைக் காத்துக்கிட்டுக் கிடக்கேன். இடையில கொஞ்சம் தடங்கல், கொஞ்சம் உபத்திரியம் தான். ஆனாலும் எல்லாம் நல்லபடியா இன்னிக்கு முடிஞ்சுட்டுது. எல்லாத்தையும் பூட்டி உங்க அப்பா கையில, அல்லது அவரு யாருகிட்டே கையைக் காமிக்காரோ அவுககிட்டே திறவுகோலைக் கொடுத்துட்டு அக்காடாண்ணு எங்கியாவது ஒரு ஓரமா உக்காரணும். சீட்டு வார வரைக்கும், எப்பம்டா வரும்ணு காத்துக் கிடக்கணுமே. அது பெரிய இம்சையில்லா’  - இவ்வளவையும் பேசும்போதும் கையில் இருக்கிற கத்தரிக்கோலால் ஒவ்வொரு பூவாக நறுக்கி எடுத்து அடுக்கிக்கொண்டு இருந்த சந்தனத்தைப் பார்க்க, லோகாவுக்குச் சந்தோஷமாக இருந்தது.
லோகாவின் அம்மாவுக்கு, சந்தனம் மேல் ரொம்ப மரியாதை. மாமனார் இருக்கிறவரை அவருக்குக் கொடுத்த மரியாதைக்குக் கொஞ்சமும் குறைந்தது அல்ல அது. அந்த அளவுக்கு சந்தனமும் இருந்திருக்கிறார். லோகாவின் அப்பாவுக்கு வியாபாரம் நொடித்துப் போவதற்கு முன்பே, வேறொரு பள்ளம் விழுந்துவிட்டது லோகாவின் அம்மாவுக்கு. தாண்டமுடியாத பள்ளமாகப் போய்விடுமோ என்றுதான் மணிமேகலை கூட நினைத்தாள்.
ஜெகதா என்கிற அந்தப் பெண்ணுக்கு அஞ்சு கிராமமோ, கன்யாகுமரிப் பக்கமோ. வணிக வரி அலுவலகம், வருமான வரி அலுவலகம் ஏதோ ஒன்றில் வேலை. சைலுவுக்கு எப்படியோ பழக்கமாகிவிட்டது. இந்த ஒரு விஷயத்தில் எப்படி என்றுதான் திட்டமாக யாராலும் சொல்ல முடியாதே. கொலுவுக்கு அழைத்திருக்கிறார்கள். வா பாப்பா. ஒரு மரியாதைக்குப் போய்விட்டு வந்துவிடலாம்என்று சைலு கூப்பிட்டார். விவரம் தெரியாமல் லோகாவின் அம்மாவும் காரில் போய்விட்டு வந்தாள். ஏதோ தெலுங்குப் பாட்டு. அந்தப் பெண் நன்றாகத்தான் பாடினாள். இவளைக் கூட, ‘நீங்களும் பாடுங்கோஎன்று சொன்னாள். சைலு சொல்லியிருப்பார் போல, ‘பாப்பா நல்லா பாடுவாஎன்று. மணிமேகலை பாடுவாள்தான். ஜென்சி பாட்டு எல்லாம் நிறையத் தெரியும். ஆனால் அன்றைக்குப் பாடவில்லை. ஏதோ இவளிடம் ஒப்புதல் வாங்கிவிட்டது போல அதற்குப் பிறகு சைலு போவதும் வருவதும் அதிகமாகிவிட்டது. இது எல்லாம் வீட்டில் எத்தனை நாளைக்குத் தாங்கும்?
அடிக்கடி சண்டை. இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் சட்டென்று எல்லா விளக்குகளையும் எரியவிட்டுக்கொண்டு பெரும் குரலில் சைலு போடுகிற சத்தம் தெருவரைக்கும் கேட்கும். ‘மானம் போகுதுஎன்று மணிமேகலை சொன்னால், முன்னையும் விடச் சத்தம் அதிகமாகும். லோகாவையும் தன்னையும் தீயைப் பொருத்திக்கொள்ளப் போனதைத் தடுத்தது, சமாதானம் பண்ணியது எல்லாம் சந்தனம்தான். வேறு ஒன்றும் சொல்லத் தெரியாது. ‘பொறுமையா இரு தாயிஎன்பதை மட்டும் திருப்பித் திருப்பிச் சொல்வார். அழுதுகொண்டு வெறும் தரையில் படுத்திருந்தால், ஒரு தலையணையை  எடுத்து நீட்டி, ‘சாப்பிட்டியா தாயி?என்று கேட்பார். லோகாவைக் காட்டி, ‘இந்தப் பிள்ளைக்கு யாரு பதில் சொல்லுவாங்க?என்று அவரும் அழுவார். இரண்டு மூன்று தடவை யாருக்கும் தெரியாமல் சங்கிலியை அடகு வைத்துக் கொண்டுவந்து கொடுத்ததும் உண்டு.
சைலு பக்கம் நின்று கீரியைப் பார்க்கப் போய், புல்லாந்தரிசைப் பார்த்தபடி நின்ற லோகாவின் அம்மா திரும்பி வராமல் அப்படியே சைலுவின் படுக்கையறைக்குப் போய்விட்டது அவருக்கு சந்தோஷமாக இருந்தது. இந்த இடம் இப்படிச் சரியாகப் போகும் என்று எல்லாம் அவர்களுக்குள் நடந்த சண்டையைப் பார்த்தவர்களால் நம்பக்கூட முடியாது. ஆனால் எப்படியோ சரியாகப் போய்விட்டது. அவ்வளவுதான் சொல்லமுடிகிறது. இதை லோகாவும் தெரிந்துகொள்ளட்டும் என்பது போல, ‘ அம்மையை எங்க காணோம்? கீரிப் பிள்ளை கவ்விக்கிட்டுப் போயிட்டுதா?என்று லோகாவிடம் கேட்டார். லோகாவுக்குத் தெரியும். ஆனால், ‘தெரியலையே தாத்தா’  என்றாள்.  கூடுமானவரை இது போன்ற சந்தர்ப்பங்களில் அப்பிராணியாக முகத்தை எப்படி வைத்துக்கொள்வது என பெண்பிள்ளைகளுக்குத் தானாகவே பிடிபட்டு விடுகிறது.
லோகா கையில் இருந்த செல்ஃபோன் மினுக்கத்தைப் பார்த்துவிட்டு, ‘அவரு கூப்பிடுதாரு தாத்தா. வந்திருதேன்என்று எழுந்திருந்து போனாள். ரொம்ப நேரமாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்திருப்பாள் போல. அவசரத்தில் அவள் மடியில் நீண்ட காம்புடன் இருந்த இரண்டு மூன்று மஞ்சள் மலர்கள் கீழே விழுந்தன. கல்யாணத்திற்கு முந்தி அர்த்த ராத்திரியில் அப்படி என்ன பேசுவார்கள் என்று சந்தனத்திற்குச் சிரிப்பு வந்தது.
லோகா அந்தப் பக்கத்துப் பேச்சின் கிறக்கத்தில் மிதந்து போவதைப் பார்க்க அவருக்கு நிறைவு அதிகம். களங்கமே இல்லாத ஒரு பிரியத்தின் தடாகத்தில் அவள் ஒரு தாமரைப் பூ போல மலர்ந்து தண்ணீர்ப் பரப்பு முழுவதையும் நிரப்பிக்கொண்டு இருந்தாள்.  கரை தெரியாமல் கிடக்கிற ஒரு பெரிய நீர்வெளியில் லோகா இங்கும் அங்குமாக நீந்திப் போவது போல நினைத்தார். ஒரு கணம் அவருக்கு இந்த இடத்தில் இப்படிப் பூவை எல்லாம் கத்தரித்துக்கொண்டு பெரியய்யா உட்கார்ந்திருப்பது போல ஒரு காட்சி பிடிபட்டு, உடம்பு சிலிர்த்தது. கும்பிட்டுக்கொண்டு, யய்யாஎன்றார். ஒரு சாயலுக்கு, லோகா அப்படி எழுந்திருந்து செல்லும்போது உண்டான அசைவுகள், தான் இத்தனை காலமும் எல்லாக் கதையையும் சொல்லிவந்த அந்த வேப்பமரத்தின் கிளை தணிந்து அசைவது போல இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக யாரிடமும் சொல்லாமல் ஒளித்து வைத்திருக்கும் ஒன்றிரண்டையும் இவளிடம் சொல்லிவிட்டால் நிம்மதியாக இருக்கும். இந்த நினைப்பில் சந்தனம் தன் நெஞ்சு முடிக்குள் விரல்களை விட்டுக் கோதி அடிவயிறு வரைக்கும் நீவி விட்டார்.
இந்த முடியை ரொம்பப் பிடிக்கிற ஒருத்தி அவருக்கு இருந்தாள். இப்போது உட்கார்ந்திருக்கும் பெரிய வீட்டை எடுத்துக் கட்டுவதற்கு முன், வட பக்கத்தில் ஒரு மாட்டுத் தொழுவம் உண்டு. பத்து இருபது மாடுகளை நெடுக்கு வாட்டில் கட்டிப் போடலாம். அதற்கு மேல் பக்கம் ஒரு துலாக் கிணறு. கிணற்றுக்கும் மேல் பக்கம் ஒரு பள்ளத்தில் எருக்குழி. அதற்குப் பிறகு கீரைப் பாத்தி. கொஞ்சம் தள்ளி, சுண்ணாம்புக் காளவாசல்.
கீரையைப் பறித்து வியாபாரம் செய்கிற பேச்சியம்மை கண்களில்தான் சந்தனம் அந்த இசகுபிசகான காரியத்தில் இருந்த சமயத்தில் பட்டுவிட்டார். சந்தனத்தின் உயரத்துக்கும் வாட்ட சாட்டத்துக்கும் ஊரில் எத்தனையோ பேர் கிடைத்திருப்பார்கள். ஆனால் அவருக்கு அந்த செவலைப் பசுவின் மேல் நாட்டம் வந்துவிட்டது. அது அவர் பார்க்க வளர்ந்தது. தலை ஈத்துக் கறவை முடிந்து பால் வற்ற ஆரம்பித்து இருந்தது. கன்றுக்குட்டிக் களையும் மாறாமல் பசு மாட்டுக் களையும் திகையாமல் இருந்ததுதான் காரணமோ என்னவோ? சந்தனம் அதன் பின் பக்கமாகப் போய் நின்றதை பேச்சியம்மை பார்த்து விட்டாள். அவளால் நம்பவும் முடியவில்லை. ஆனால் கண்ணுக்கு எதிரே சந்தனம் நிற்கிற நிலையும் தெரிகிறது.
பேச்சியம்மை கீரை ஆய்ந்துகொண்டிருந்த நார்ப் பெட்டியை அங்கேயே போட்டாள். எருக்குழியில் இறங்கி சாணிக் காலோடு ஏறித் தொழுப் பக்கம் வந்தாள். சத்தம் போடாமல் சந்தனத்தின் கையைப் பிடித்தாள். வேட்டியைக் கரண்டை வரை இறக்கிவிட்டாள். இறுக்கி முத்தம் கொடுத்தாள். அவரை இழுத்துக்கொண்டு போய் , விடிந்ததும் விடியாததுமாய், சைலுவின் அப்பா முன்னால் நிறுத்தி, ‘எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கட்டி வையுங்க அய்யாஎன்றாள். வேறு எதையுமே சொல்லவில்லை.
பெரிய அய்யா என்ன ஏது என்று எதுவுமே கேட்காமல் சந்தனத்தைப் பார்த்தார். மடியில் இருந்து பதினோரு ரூபாயை எடுத்துக் கொடுத்தார். ‘உள்ளே போயி சாமியைக் கும்பிட்டுட்டுப் போங்கஎன்று கையை உள்ப் பக்கமாகக் காட்டினார். பேச்சியம்மையிடம், ‘அவனை நல்லா பார்த்துக்கோஎன்று சொன்னார். என்ன நினைத்தாரோ, அடுத்த பௌர்ணமிக்கு முன்னால், ஒரு பத்து மரக்கால் விதைப்பாட்டை அவன் பேருக்குக் கிரயம் பண்ணிப் பத்திரத்தைப் பேச்சியம்மை கையில் கொடுத்துவிட்டார். இந்த வேப்ப மரம் நிற்கிறதே அதற்குக் கீழ்ப் பக்க நிலம் அது.
முதலில் லோகாவிடம் இதைச் சொல்ல வேண்டும். இதைச் சொன்னால் நான்கைந்து வருஷம் பிள்ளைகுட்டி இல்லாமல் இருந்து, பேச்சியம்மை கூட வாழ்ந்த வாழ்வைச் சொல்லாமல் முடியாது. அவ்வளவு சந்தோஷமாக ஓடி ஓடி விவசாயம் பார்த்துக் கட்டும் செட்டுமாக இருந்தவள், திடீரென்று ஒருநாள் , இன்றைக்கு வரை இருக்கிறாளா இல்லையா என்று தெரியாத அளவுக்கு, கண் காணாமல் போய்விட்டாள்.  பெரிய அய்யா இறந்து போன தாக்கல் இல்லாமலா போயிருக்கும்? அதற்குக் கூட எட்டிப்பார்க்காமல் இருக்க எப்படி அவளுக்கு முடிந்தது என்பதில் சந்தனத்துக்கு நிறைய வருத்தம். ‘இனிமேல் அந்த மூதி வந்தாலும் சரிதான். வராட்டாலும் சரிதான்என்று தனக்கு ஆகிவிட்டதைச் சொல்ல வேண்டும்.
சைலு அய்யா நொடித்துப் போன வருத்தத்தில் தான் சந்தனம், ‘எனக்கு என்ன பிள்ளையா, குட்டியா? என்கிட்டே இருந்தால் மடியிலயா நிலத்தைக் கட்டிக்கிட்டுப் போகப் போறேன்? உங்களுக்கு ஒரு இக்கட்டில் உதவும்னா மகராசனா நீங்களே எடுத்துக்கிடுங்க.என்று பத்திரத்தை சைலு பேருக்குத் திருப்பி எழுதிக் கொடுத்துவிட்டார்.
லோகாவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அந்த அஞ்சுகிராமத்துக்காரி விஷயமாகச் சண்டை வரும்போது கூட, ‘ஊரு உலகத்துல நீரு யாரை ஏமாத்தலை? தலைமுறை தலைமுறையா ஊழியம் பண்ணிக்கிட்டு இருக்கிறவன் சொத்தை மூணாம் பேருக்குத் தெரியாமல், கவுல் கிடையா எழுதி வாங்கிக்கிட்ட மனுஷன் தானே நீரு’  என்று சந்தனம் காதிலும் விழுகிற மாதிரித் திட்டியிருக்கிறாள்.
‘அப்படியெல்லாம் கிடையாது தாயிஎன்று சந்தனம் சொல்வதைக் .கூட,  இப்படிக் கேட்டா இப்படிச் சொல்லணும்னு சொல்லிக் கொடுத்துட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நிக்கிறாரா உங்க அய்யா?; என்று கோபப் பட்டு, ‘நீரு ஒரு கூறுகெட்ட மனுஷன்என்று சந்தனத்தைப் பார்த்துச் சொல்லி அழுதிருக்கிறாள். எதற்கு இப்படிக் கோபப்பட வேண்டும், இப்படி அழவேண்டும் என்று அவருக்கு விளங்கவில்லை.
மடியில், பக்கத்தில் இருக்கிற பூவையெல்லாம் பார்க்கப் பார்க்க, எதற்கு இந்த வேலையை, அந்தச் சின்னப் பென் ஆசைப் பட்டதற்காகச் செய்ய உட்கார்ந்தோம் என்று அவருக்கு இருந்தது. பூ என்றால் என்ன பூ என்று தெரியவேண்டாமா? அதுவே தெரியவில்லை. வாசமாவது அடிக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இது ரோஜா என்று தெரிகிறதே தவிர, அரக்குச் சிவப்பில், வெள்ளையில், மஞ்சளில் பூக்கிற ரோஜாச் செடியை இதுவரை அவர் பார்த்ததே கிடையாது. செங்கமாலில் கல் அறுத்தது மாதிரி ஒன்று போல வித்தியாசமே தெரியாமல் குமிழ் குமிழாக இருக்கிற அந்த மஞ்சள் பூவுக்கு லோகா சொன்ன பெயர் வாயில் கூட நுழையவில்லை. எந்த மலங்காட்டில் எந்தக் குளிரில் இப்படியெல்லாம் பூக்கிறதோ? இக்கிணி இக்கிணியாக கருநீலமாக இருக்கிற இதற்கு துளியளவும் வாசம் இல்லை. ஆனால் லட்சணமாக இருக்கிறது. அதைக் கையில் வைத்து, சுழற்றினாற்போலப் பார்க்கையில் ஒரு கொத்து நழுவி சந்தனத்தின் வயிற்றின் மேல் விழுந்தது. ஏதோ இப்போதுதான் அது தன்னுடைய தொப்புளில் முளைத்துப் பூத்தது போல இருந்தது அவருக்கு.
முடிபடர்ந்து மூடிய தன்னுடைய தொப்புள் குழியில் அந்தப் பூங்கொத்தை அப்படியே செருகி, குனிந்து அதைப் பார்த்தபடியே இருந்தார். தானே அந்தப் பூஞ்செடி ஆகிவிட்டது மாதிரியும், அது கொத்துக் கொத்தாக, ஒரு கரு நீலப் படுகையாக பூத்துக் கிடக்கும் தோட்டக் காடாகத் தான் இப்போது இருப்பது போலவும் தன்னுடைய உடலில் அடர்ந்திருந்த முடியை வருடிக் கொடுத்தார். அவருக்கு ஒரு சிறு கணம் பேச்சியம்மை ஞாபகம் வந்தது.
ஃபோனைத் தூக்கிக் காதில் வைத்துக்கொண்டு போன லோகாவை ஆளையே காணோம். மணிக்கணக்காகப் பேசிப் பேசி, பேசின வாக்கில், புதைந்து போகிற தினுசில் கிடக்கும் அந்தக் கருப்பு சோபாவில், ஒரு பூனைகுட்டியாக லோகா  படுத்துத் தூங்கிப் போயிருக்கலாம் இதற்குள்.
இவ்வளவு விளக்குகளையும் யார் அமர்த்துவார்கள்? களைப்பாக இருந்தது. எழுந்திருக்க முடியும் என்று தோன்றவில்லை. உடலில் இருக்கிற நீர்ச் சத்து பூராவையும் தொப்புளில் வைத்த அந்த சின்னஞ்சிறு கரு நீலப் பூங்கொத்து உறிஞ்சிக் குடித்துவிட்டது. சந்தனத்துக்குத் தாகத்தில் தொண்டை வறண்டது.
கீரிப் பிள்ளைகள் மறுபடி விளையாட வந்துவிட்டதா என்று பார்க்க விரும்பினார். முகத்தைத் திருப்ப முடியவில்லை. கழுத்து நரம்பு விறைத்துக் கொண்டு வலித்தது. கண்ணாடியை எங்கே வைத்தோம் என்பது இடது கையின் துளாவலுக்குக் கிடைக்கவில்லை. எப்போதும் உள்ள அவருடைய வழக்கம் போல, கழுத்தில் கிடந்த துண்டின் இருபக்க முனைகளை இரண்டு கக்கத்துக்குள்ளும் செருகிக்கொண்டார். சுவரில் சாய்ந்திருந்த முதுகைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறக்கினார்.
தரையில் கால் நீட்டிப் படுத்திருக்கிற நிலையில், திராவகம் ஊற்றாகப் பொங்குவது போல ஒரு வலி பீறிட்டு எவ்வி, உள்வாங்கி அடங்குவதாக உடனே குளிர்ந்து உடம்புக்குத் திரும்பியது.
அந்தக் குறைந்த நேரத்துக்குள்ளே அத்தனை பூக்களையும் அள்ளித் தன் மேல் போட்டுக்கொள்ள சந்தனத்திற்கு எப்படி முடிந்தது என்று தெரியவில்லை.
அசையாத நெஞ்சு முடிக்கு மேல் அப்படியே எல்லாம் புரண்டுகொண்டு இருக்க, நீண்ட காம்பு உள்ள ஒன்று மட்டும் யாருக்கோ நீட்டப்பட்டது போல அவருடைய வலது கையில் இருந்தது.

%

உயிர் எழுத்து - நவம்பர்.2013

ஏப்ரல் இதழில் இருந்து, அக்டோபெர் இதழ் தவிர, இந்த இதழ் வரை தொடர்ந்து என்னை எழுதத் தூண்டியும், என் கதைகளைப் பிரசுரம் செய்து ஊக்கியும் நின்ற சுதீர் செந்திலுக்கு என் நன்றி உரித்தாகுகிறது.








Friday, 8 November 2013

சஷ்டியை நோக்க ...

கவிதையும் கதையும்
--------------------
கல்யாண்ஜி.

%



பூப்பது கவிதை.
தொடுத்தது கதை.
இரண்டும் பூ தான்.
*
கவிதை அருவி.
கதை நதி.
இரண்டும் நீர் தான்.
*
கவிதை திசை காட்டி.
கதை காற்சுவடுகள்.
வாழ்வுச் சாலை பொது.
*
கவிதை கனவு.
கதை நனவு.
மனம்தான் மையம்.
*
கவிதை நெருப்பு.
கதை வெயில்.
ஒன்று தொட்டால் சுடும்.
மற்றதில் தொடாவிட்டாலும் நிழல் விழும்.
*
கவிதை என்பது கலவி.
கதை என்பது பிரசவம்.
ஒன்று கருவுக்கு முந்தியது.
இன்னொன்று கருவறைக்குப் பிந்தியது.
*
கவிதை வானம் சார்ந்தது.
கதை நிலம் சார்ந்தது.
ஒன்று நனைக்கும்.
ஒன்றில் முளைக்கும்.
*
கவிதை குடத்தில் இருந்து விரிகிற காவிரி.
கதை காவிரியில் அள்ளுகிற குடம்.
*
மல்பெரிச்செடிகளைப் பார்க்கையில்
பட்டுப் பூச்சிகளை நினைப்பது கவிதை.
பட்டுச்சேலைகளைப் பார்க்கையில்
கூட்டுப் புழுக்களை நினைப்பது கதை.
*
ரயில்பெட்டியில் நகர்ந்துகொண்டே
பார்க்கிற மின்மினிப் பூச்சிகள் கவிதை.
காடா விளக்கடியில் பீடி சுற்றிக்கொண்டிருக்கிற
கைகளுக்கு வளையடுக்குவது கதை.
*
கவிதை கல்லூரி மாணவர்கள்
வாங்குகிற பியர் பாட்டில்.
கதை குடும்பஸ்தன் கூச்சப்பட்டுக்கொண்டு
வீசியெறிகிற ஆணுறை.
*
கவிதை
பார்க்காத மார்புகளை வர்ணிப்பது.
கதை
உதறின கைவிரல்களைப் பற்றி உருகுவது.
*
கவிதை சிலசமயம் தீர்க்க தரிசனம்.
கதை சிலசமயம் வரலாற்றுப் பதிவேடு.
*
கவிதை பாதங்கள் இல்லாததால் பறப்பது.
கதை சிறகுகள் இல்லாததால் நடப்பது.
*
கவிதை காதலியுடன் சிரிப்பது போல.
கதை சினேகிதனுடன் அழுவது போல.
*
மீட்டினால் கவிதை.
பாடினால் கதை.
ஒன்று வாத்திய இசை.
ஒன்று வாய்ப்பாட்டு.
*
கவிதை
வரைவதற்கு முந்திய திரைச்சீலை.
கதை
வரைந்துமுடித்த ஓவியம்.
*
கவிதை கிளி.
கதை இலை.
உட்கார்ந்த கிளையிலிருந்து பறக்கும்.
உதிர்வதற்கென்றே துளிர்க்கும்.
*
கவிதை நிகழ்ச்சி நிரல்.
கதை நிகழ்ந்ததன் குரல்.
*
கவிதை
பாரிஜாதப் பூக்களுக்கு மேல்
பன்னீர் தெளிப்பது.
கதை
கட்டைவிரல் ரேகைகளுக்குச்
சிக்கல் எடுப்பது.
*
கவிதை என்பது
இன்னொரு நான்.
கதை என்பது
நானேதான்.

*
வருடம் இல்லை. 95ல் இருந்து 99 இருக்கலாம். 8/8 என்று தேதி இட்டிருக்கிறேன். நண்பர் ஆ.ஆனந்தன் தன்னுடைய 07.11.13 கடிதத்தில் இணைத்து அனுப்பியிருக்கிறார். இன்று இந்த கந்த சஷ்டி தினத்தில் கிடைத்த இதைப் படிக்கப் படிக்கச் சந்தோஷமாக இருக்கிறது.

சி.க.

Friday, 1 November 2013

ஒரு பறவையின் வாழ்வு.









பால்காரர் கிட்டுதான் இப்படி அழைப்பு மணியை அழுத்துவார். பூனை நடக்கிற மாதிரிச் சத்தமே இல்லாமல்.
‘வருகிறேன், வருகிறேன். கூட ஒரு அரை லிட்டர் வேணும்என்று கதவைத் திறந்தால், ஜானகி நின்றுகொண்டு இருந்தாள். முதுகில் ஒரு பை. கைகளில் ஒரு பை. இரண்டையும் கீழே வைத்துவிட்டு இரண்டு கைகளையும் அகல விரித்தபடி நின்றாள். சோப்பு நுரையும் தூக்கிச் செருகின சேலையுமாக நான் இருப்பதைப் பார்த்ததும், கால்களைத் தரையில் உதைத்து, ஏமாந்தது போலச் சிரித்தாள். நான் அவள் கைகளுக்குள் இருப்பது போல, கண்களை மூடிப் பாவனையாக இரண்டு கைகளையும் பெருக்கல் குறியாக இறுக்கிக் கொண்டாள்.
வழக்கமான மற்ற தினங்கள் என்றால், இந்தச் சோப்பு நுரையை அவள் மேல் உதறியிருப்பேன். மினுங்கி மினுங்கி ஜானகி முன் சிகையில் நுரை உடைந்து உடைந்து அடங்குவது நன்றாகத்தான் இருக்கும். இந்த முறை முடியவில்லை. அதற்குக் காரணங்கள் உண்டு.
‘ஆட்டோ சத்தமே கேட்கவில்லை; என்று குனிந்து பையை எடுத்தேன்.
ஆட்டோவில் வந்தால்தானே ஆட்டோ சத்தம் கேட்கும் தோளில் தொங்கிக்கொண்டிருந்த சிறுபையில் இருந்து, ஒரு ஒற்றை இறகை எடுத்து நீட்டினாள். ‘அனு ஸ்கூல் போயிருக்கும். எனவே நீலா எனும் அனு அம்மாவுக்குஎன்று சொன்னாள்.  சிரிக்கிற மாதிரியும் இருந்தது. கண் கலங்கவும் செய்தது.  ‘சிறகிலிருந்து பிரிந்த ஒரு இறகுஎன்றாள். இப்படித் துவங்கும் அந்தக் கவிதையின் வரிகளை முற்றிலும் எழுதித்தான் ஆறு ஏழு
2
மாதத்திற்கு முன்பு அந்தக் கடிதத்தைத் துவங்கி இருந்தாள். எனக்குக் கூட அல்ல, ‘அன்புமிக்க சுந்தரத்துக்குஎன்று அனுவுடைய அப்பாவுக்குத்தான் எழுதியிருந்தாள்.
அந்தக் கடிதம் வந்த தினம் கூட நன்றாக ஞாபகம் இருக்கிறது. தொடர்ந்து அன்றைக்கு மழை பெய்துகொண்டே இருந்தது. ‘போறாளே பொன்னுத் தாயி. பொலபொலவென்று கண்ணீர் விட்டுஎன்ற பாடலை அந்தப் பெண் தொலைக்காட்சியில் அவ்வளவு உருக்கமாகப் பாடிக்கொண்டிருந்தது. மழையா, இந்தப் பாட்டா, சோபாவில் படுத்துத் தூங்கும் அனுவின் தோற்றமா எதுவோ இந்த அறையை, இந்த வீட்டை வேறு விதமாக மாற்றியிருந்தது. அமைதி இந்த அறையைத் தண்ணீரால் நிரப்புவது போல நிரப்பிக்கொண்டு இருக்க, ஒரு குளிர்ந்த கூழாங்கல் போல நான் அடியில் கிடப்பதாக நினைத்துக்கொண்டேன். நாற்காலியில் இருந்து எழுந்து தரையில் படுத்துக் கொண்டேன்.
வாயில் அரிசிக் குருணையை ஏந்திச் சுவரோரம் செல்லும் பிள்ளையார் எறும்பு வரிசை ஒன்றை இப்போது பார்த்தே ஆகவேண்டும் போலத் தவித்தது. சுடலைமாடன் தெரு வீட்டில் எப்போதோ பார்த்தது. அதற்குப் பின் பார்க்கவே இல்லை. எறும்புகள் கூட இப்படிக் காணாமல் போய்விடுமா? குருவி எல்லாம் காணாமல் போய்விடுமா? ஒன்று காணாமல் போனால் அந்த இடத்திற்கு இன்னொன்று வந்திருக்கும் அல்லவா? அப்படி என்ன வந்திருக்கிறது? இந்த வண்ணத்துப் பூச்சியும் என்றைக்காவது காணாமல் போய்விடுமா?
இப்படியெல்லாம் எதைஎதையோ நினைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்கையில்தான், ‘கதவைத் திறஎன்று ஜன்னல் வழி சத்தம் கேட்டது. ‘என்ன உட்கார்ந்துக்கிட்டே தூங்கிட்டியா?என்று கேட்ட குரலில் சிரிப்பு இருந்தது. தூங்கித்தான் இருக்கவேண்டும். ஆனால், ‘இல்லை, சும்மா படுத்துக் கிடந்தேன்என்று சொல்லும்போதே
‘ஜானகி லெட்டர் மாதிரி இருக்குஎன்று டி.வி பக்கம் இருந்த கடிதத்தை எடுத்தான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் முதலில் பார்க்கிற இடம் அதுதான்.
3
கடிதங்கள், பத்திரிக்கை, அழைப்பிதழ், டெலிஃபோன் பில் என்று ஏதாவது ஒன்று வந்திருக்க வேண்டும்.
‘முதலில் தலையைத் துவட்டப் படாதா?’  துண்டை நீட்டும் போது, அனுவைக் குனிந்து முத்தினான். ‘அப்பவே தூங்கிட்டுதா?என்றான்.  உடையை இழுத்துவிட்டான். கொலுசுத் தொங்கலைச் சரி செய்தபடி, என்ன எழுதியிருக்கா ஜானு?என்று கடித உறையைப் பார்த்தான்.
‘சுந்தரத்துக்கு எழுதியிருக்கா. சுந்தரம் தானே படிச்சுப்பார்த்துச் சொல்லணும்என நான் சொன்னதைக் கவனிக்கவில்லை. உறையின் ஓரத்தை மடக்கி, நகத்தால் இழுத்துவிட்டு, பிசிறில்லாமல் கத்திரித்து எடுப்பது போலக் கிழித்துக்கொண்டிருந்தான். ஒரு காகிதத் திரி போல, கிழிந்த துண்டு காற்றில் நெளிந்தது.
‘என்ன? கவிதையெல்லாம் எழுதியிருக்கா ஆரம்பத்திலேயே? அதுவும் நம்ம ஆள் கவிதைஎன்று சொல்லி, ‘ காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதுகிறது’  என உரக்கச் சொன்னான்.
எனக்கு அந்தக் கவிதையை அப்படி வாசித்தது பிடித்திருந்தது. கையில் ஈரத் துண்டை வைத்துக்கொண்டே இன்னும் நெருக்கமாகத் தோளை இடித்தபடி நிற்க வேண்டும் என்று தோன்றியது. துவட்டப்பட்ட கலைந்த சிகையோடு முகம் அழகாக இருந்தது. நாற்பது தொடப் போகிற முகம் இதுவரை இத்தனை அழகாக இருந்தது இல்லை. ‘போறாளே பொன்னுத்தாயிஎன்று பாடவேண்டும் . ரொம்ப நேரமாக நான் அதை மனதிற்குள் பாடியபடி இருந்தது போலவும் , இப்போதுதான் எனக்கே அது கேட்பது போலவும் நினைத்துக்கொண்டேன். சற்று வெட்கமாக இருந்தது.
‘என்ன, நீலா என்னவெல்லாமோ எழுதியிருக்கா?என்று என்னைப் பார்த்து நிமிர்கிற முகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ‘என்ன?என்று புருவத்தைச் சுருக்கினேன். எதுவும் சொல்லவில்லை. கடிதம் என் கைக்கு மாறியது. ‘என்ன, இப்படி எழுதியிருக்கா?என்று மறுபடியும் சொன்னான். பித்தான்கள் பிரித்துவிடப்பட்டு இரு புறமாக விலகிக் கிடக்கிற சட்டையின்
4
பிளவுகளுடன், ஒரு நனைந்த பறவை போல அவன் இருந்தான். ‘உட்கார்ந்து வாசிஎன்றான். நான் உட்காரவில்லை.
ஒரு அடித்தல் திருத்தல் இல்லாத, வழக்கமான ஜானகியின் கோடு போட்டது போன்ற, சரியாத வரிகள். ஆனால் எழுதியிருந்த விஷயம் அப்படியில்லை.
இந்த எட்டு ஒன்பது வருடங்களுக்குப் பிறகு குணசீலனுக்கு அவளைப் பிடிக்காது போயிற்றாம். குழந்தை இல்லாததாலா என்று கேட்டுவிட்டாளாம். அதெல்லாம் இல்லை, பிடிக்கவில்லை என்கிறானாம். நாம் ஒருவரை ஒருவர் விரும்பித் தானே திருமணம் செய்துகொண்டோம் என்று கேட்டால், ஒருவரை ஒருவர் விரும்பாது போனால், அதே போலப் பிரிந்துவிட வேண்டியது தானே என்று சுருக்கமாகத் திருப்பிச் சொல்கிறானாம்.
அடிக்கடி வெளியூர்ப் பயணங்களுக்கு உட்படுகிற என் வேலை நிலை காரணமா சீலன் என்று கேட்டால், அதெல்லாம் இல்லையாம். ஒருவேளை வேறு பெண்ணை யாரையாவது விரும்புகிறாயா என்றும் கேட்டுவிட்டாளாம்.  இதே கேள்வியை நான் உன்னிடம் கேட்க இடம் உண்டா ஜானகி?என்பது அவன் பதிலாம்.
இவ்வளவு சந்தோஷமான ஒன்பது வருடங்களை ஒரு சாக்லெட் உறை மாதிரி, ஒரு மாத்திரைத் தகடு மாதிரி எப்படி என்னால் எறிந்துவிட முடியும் சுந்தரம்? அவன் ஒரு அற்புதமான ஆணாக இருந்து, என்னை ஒரு அற்புதமான பெண்ணாக நேற்றுவரை உணரச் செய்துகொண்டிருந்தான். அந்த அற்புதத்திற்கு இன்று என்ன நேர்ந்தது சுந்தரம்? அற்புதங்களில் தீரா அற்புதம் என ஒன்றும் கிடையாதா? விடைகளை முதலில் தந்துவிட்டு, கேள்வியின் புதிர்களை நம்மை எழுதச் சொல்கிற தேர்வு முறைகளுக்கு நான் பழகியிருக்கவில்லையே.
இந்த ஒன்பது வருடங்களில் நாங்கள் செய்த பிரயாண காலங்களில் பெய்த பெரு மழையை எந்தக் கடலில் கொண்டு சேர்ப்பது? நாங்கள் அமர்ந்த பாறைகளின் மேல் விட்டுவிட்டு வந்திருக்கும் எங்கள் உடல் சூட்டை இனி
5
என்ன செய்வது? நாங்கள் சேகரித்த வண்ணத்துப் பூச்சிகள் காளான்கள் எல்லாம் என்னாகும்?
மூணாறில், கபினியில் ஆகும்பேயில், ஹளேபேடுவில், மிகப் பழைய பாடல்களின் தொகுப்பில் இருந்து குணசீலன் தேர்ந்தெடுத்துப் பாடிய ஏ.எம்.ராஜா பாடல்கள் எத்தனை? சீலனுக்கு அத்தனை நல்ல குரலும் இல்லை. அத்தனை மோசமான குரலும் இல்லை. குரலை மீறிய நல்ல பாடகன் அவன். இதை எழுதுகிற இப்போது கேட்கிறது அவனுடைய, ‘அன்பே வா, அழைக்கின்றதென்றன் மூச்சே, கண்ணீரில் துன்பம் போச்சேபாடல். ‘வான்மதி ராவிலே நாம் உலாவலாம். இதம் தரும் காதலில் எந்த நாளுமேஎன்று அவன் பாடும் போது காயலில் ஒரு படகில் இருந்தோம். ஆகாயத் தாமரை நீலமலர்களுடன் எங்கள் படகை ஏந்திக்கொண்டு இருந்தது, எங்களின் கால்கள் பாபநாசம் ஆற்றில் அமிழ்ந்திருக்க, காலையும் நீயே, மாலையும் நீயே’  பாடிய போது ஒரு பலா இலை சுழன்றுகொண்டிருந்தது நீர்ச் சுழிப்பில். இனி சீலனுக்குப் பாட என்ன பாடல்கள் உண்டு? தெரியவில்லை.
இனிமேல் என் ஓவியக் கித்தான்களை நிரப்புவதற்கு என்னிடம் எந்த வண்ணங்களும் இல்லை சுந்தரம். தொடர்ந்து ஓவியம் வரைந்தவர்களுக்கு சுற்றிக்கிடக்கும் இந்த வெற்றுக் கித்தான்கள் உண்டாக்குகிற பிசைவு தாங்க முடியாத ஒன்று. சொல்லிக் கொள்ளலாம். எதையும் தாங்கலாம் என்று. எதையும் தாங்க முடியாது என்பதுதான் நிஜம். நிஜம்தான் தாங்க முடியாத பாரம். அந்த பாரத்தை இறக்கிவைக்க அல்ல, எவ்வளவு எடை என்று பார்த்துக் கொள்ளத்தான் இதை உங்களுக்கு எழுதுகிறேன். இதை நீலாவுக்கும் எழுதியிருக்கலாம் சுந்தரம். வெயிலில் உலர்த்துவது என்று ஆகிவிட்டது. எல்லா இடத்திலும் தானே வெயில் விழும். ஆனால் இங்கே மட்டும்தான் விழும் என்பது போல ஒவ்வொருத்தரும் கொடியில் ஒரு இடத்தில் தொங்கப் போடுவது நமக்குப் பிடித்திருக்கிறது இல்லையா?
சட்டென்று இந்த இடத்தில் முடித்துக் கையெழுத்துப் போட்டிருந்தாள். எனக்குக் காக்கை உட்கார்ந்து எச்சமிட்டுப் பறக்கிற வெற்றுக் கம்பிக் கொடியில் கிலுகிலு என்று உலோகக் கிளிப்புகள் அசைவது போல ஒரு
6
கணம் இருந்தது. மறுகணம் நன்றாக உலர்ந்த துணியின் மேல் சடசடத்து மழை விழ, அதை அவசரம் அவசரமாக உருவித் தோளில் போட்டுக்கொண்டு வீட்டுக்குள் ஓடிவருவது போல இருந்தது. என் தோளில் உலர்ந்தும் உலராமலும் ஜானகி கிடப்பது மாதிரிக் கூட.
நான் படித்து முடித்துவிட்டேன் என்று தெரிந்ததும், ‘என்ன நீலா, இப்படி ஆயிட்டுது?என்று கையைப் பிடித்துக்கொண்டு அப்படியே அனு அப்பா என் பக்கத்தில் நின்றவிதம் புதியதாக இருந்தது. ஒரு சிலை போல மற்றதெல்லாம் உறைந்துவிட்டது போலவும் கைகள் மட்டும் நீண்டு என்னைப் பற்றியிருந்ததுமான அந்தப் பொழுதை மேலும் சில நாட்களுக்கு என்னிடம் வைத்திருந்தேன். ‘அப்படியே கல் மாதிரி நிற்குறீங்க. கை மட்டும் காய்ச்சல் வந்தது மாதிரித் தீயாகக் காந்துகிறது. எனக்கு ஒன்றும் ஓடவில்லைஎன்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருந்தேன். அதே போலத்தான் ஜானகி எழுதியிருந்த அந்தக் கவிதை வரிகளில் ஒரு வார்த்தை கூட மறக்காமல் எல்லாம் ஞாபகம் இருந்தது. ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்றுஎன்று அடிக்கடி நானாகச் சொல்லிக்கொண்ட நேரங்கள் நிறைய.
அதையேதான் ஜானகி இப்போது சொல்கிறாள். கையில் ஒரு இறகை வைத்துக்கொண்டு. இது காக்கைச் சிறகு அல்ல. வேறு ஏதோ ஒரு புதுவகைப் பறவைச் சிறகு. சற்று நீளமாக இருக்கிறது. ஒரு அடுக்கு வெள்ளை, ஒரு அடுக்கு பழுப்பு என நுனிவரை படியப் படிய மினுமினுத்தது.
‘இப்படி ஒண்ணை இதுவரை பார்த்ததே இல்லையே’  அதைக் கையில் வாங்காமல் ஜானகியைப் பார்த்தேன்.
‘நாம எல்லாப் பறவையும் பார்க்காவிட்டால் என்ன? நாம பார்க்காத பறவையும் நம்மைத் தாண்டிப் பறந்து போகும். இப்படி ஒண்ணோ ரெண்டோ போகிற வருகிற வழியில உதிர்ந்து கிடக்கும். குனிஞ்சு எடுத்துக்கிடுவோம். என்னிக்காவது எத்தனை தடவைதான் இப்படி குனிஞ்சு குனிஞ்சு எடுக்கிறது என்று நமக்கு தோணிச்சுது என்றால், எல்லாத்துக்கும் சேர்த்து அப்படியே

7
அண்ணாந்து வானத்தைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்திடலாம், என்னை மாதிரிஎன்றாள். அந்த என்னை மாதிரிதான் கஷ்டமாக இருந்தது.
வேறு மாதிரி பேசுகிறோம், இயல்பாக இல்லை என்று அவளுக்கே பட்டிருக்க வேண்டும். ‘இதோ உங்கள் வீட்டுக்கு வருகிற வழியில்தான் கிடந்தது. அப்போதுதான் உதிர்ந்ததோ என்னவோ, எடுக்கும் போது லேசா வெதுவெதுண்ணு கூட இருந்துச்சு. எங்கே பார்த்தாலும் நசுங்கின வேப்பம் பழம். இது வேப்பம் பழத்தை விரும்பி உண்கிற பறவை ஒன்றின் இறகாகக் கூட இருக்கலாம்என்று என்னிடம் சொல்லிக்கொண்டே கையில் இருந்த இறகை முகர்ந்து பார்த்தாள். ‘கசப்பு வாசனை ஒண்ணும் இல்லைஎன்று சிரித்தாள்.
தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற புத்தர் சிலையைப் பார்த்தபடி, ‘இங்கேயே தான் இருக்கிறாரா? வேறு எங்கேயாவது ஓடிப் போயிருப்பார் என்று அல்லவா நினைத்தேன்’  என்றபடியே அந்த ஒற்றை இறகை புத்தர் வெண்கலச் சிலையின் மடியில் வைத்தாள். இது ஜானகி அப்படி வைக்கிற மூன்றாவது இறகு. முதலில் ஒரு காக்கைச் சிறகு. காக்கைச் சிறகுடன் புத்தர் உட்கார்ந்திருக்கிற படம்தான் நெடுங்காலம் சுந்தரத்தின் செல்ஃபோன் முகப்பில் இருந்தது. அப்புறம் சின்னஞ்சிறு குருவி ஒன்றின் இறகு. இப்போது வெள்ளையும் பழுப்புமாக இது.
‘இறைவாஎன்று யார் கையிலிருந்தோ நழுவி விழும் ஒரு பொட்டலம் போல, தன் கனம் முழுவதையும் கழற்றி வீசிவிட்டு  நாற்காலியில் உட்கார்ந்தாள். எதிரே இருக்கிற புகைப்படத்தைப் பார்த்துச் சிரித்தாள். ‘சுந்தரம், நீ, அனு மூணு பேரும் இருக்கிற ஒரு ஓவியத்தை வரைந்து அந்த இடத்தில் மாட்டவேண்டும்என்று சொன்னாள். இதையே முன்பும் ஒருமுறை சொல்லிவிட்டு, ‘ஒருபோதும் ஓவியம் என்பது ஒரு புகைப்பட டிஜிட்டல் க்ளிக் அல்லஎன்று அவள் சொன்னது நினைவுக்கு வந்தது.


8
‘அனு அப்பா ஊரில் இல்லை. மார்த்தாண்டம், குழித்துறை என்று ஏதோ வேலைசுந்தரம் எங்கே என்று ஜானகி கேட்பதற்கு முன்பே நான் சொல்லிவிட்டேன்.
‘முன் கூட்டிச் சொல்லாமல் வந்தது என் தப்பு. சொல்ல முடியும் நிலையில் இல்லை. எல்லாக் காகிதங்களிலும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, கோர்ட்டில், நீ யார், எந்த ஊர், எப்போ கல்யாணம் ஆச்சு என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி, இரண்டுபேருக்கும் இதில் சம்மதம், எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்று பெஞ்ச் க்ளார்க் முகத்தைப் பார்த்து எச்சிலை முழுங்கிக்கொண்டே ஒப்புக்கொண்டு,  ஆறு மாதத்திற்குப் பிறகு வாய்தா என்று கேட்ட பின், என்னிடம் யாருக்குச் சொல்லவும் எந்தச் சொல்லும் இல்லை. எல்லாத் திசை காட்டிகளும் பிடுங்கி எறியப்பட்ட சாலையில் நான் நின்றேன். சுந்தரத்துக்குக் கார் ஓட்டத் தெரியாது என்று தெரியும்.  என்றாலும் அவனுடைய வாகனம் என் அருகே வந்து நின்று என்னை ஏற்றிக்கொள்ளாதா என்று தோன்றியது நீலா.’  ஜானகி கால்களை மாற்றிப் போட்டுப் பின்னி உட்கார்ந்து கொண்டு, என்னைப் பார்த்தாள். இது அவள் உட்காரும் முறை. அவளுடைய அலுவலகம் சார்ந்த வெளிநாட்டுப் பயணத்தின் வார இறுதிச் சுற்றுலாவில் கல்லறைத் தோட்டம் ஒன்றின் பக்கத்தில் நீல ஜீன்ஸ், ஒரு மெஜந்தா கம்பளிச் சட்டையும் அணிந்தபடி நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் படத்தை மீண்டும் பார்ப்பது போல இருந்தது.
ஒவ்வொரு புகைப்படத்தின் பின்னாலும் சிறு சிறு வரிகள் எழுதியனுப்புகிற பழக்கம் சீலனுக்கு உண்டு. அந்தப் படத்தில், ‘ராணியம்மா ஆசைப் பட்டா, பாடச் சொல்லி ஆணையிட்டாஎன்று எழுதியிருப்பான். இப்போது ராணி முடி துறக்கவேண்டியது ஆகிவிட்டது போல. இப்படியான யோசனையில்,  துளைப்பது போல நான் அவளை ரொம்ப நேரம் பார்த்தபடி இருந்திருக்க வேண்டும்.
ஜானகி, ‘ஹலோஎன்று என் முன் இருக்கும் கரும்பலகையை அழிக்கும் அசைவுகளுடன்  கைகளை ஆட்டினாள். ‘அனு எப்போது ஸ்கூலில் இருந்து திரும்புவாள்? அவள் வரைந்த மயில் படம் இன்னும் என் மேஜையில்
9
ஆடிக்கொண்டு இருக்கிறது.என்று என்னைக் கலைத்து அவள் பக்கம் திருப்பிவிட்டு,  என் முகத்தைத் தாண்டி எங்கோ பார்த்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள். ‘சிறுவர்கள் வரைகிற மயில்களுக்குத்தான் எட்டாவது நிறம் ஒன்றில் தோகை இருக்கிறது. களங்கமின்மையின் வண்ணம் அது. பெரியவர்களின் தூரிகையால் அதை ஒரு போதும் தொடவே முடியாது என எனக்குத் தெரியும்என்றாள். கைகளை உயர்த்தி உடம்பை முறுக்கி, ‘யம்மாஎனச் சத்தமாக முனங்கினாள். ‘முன் பதிவு செய்யமுடியவில்லை. உட்கார்ந்துகொண்டே ரயிலில் வந்தேன். எட்டு மணி நேரம் என்பது இந்த முறை முடியவே முடியாத தொலைவில் இருந்தது. உறங்கவும் இல்லைஅவள் குரல் ஒரு களைத்த ஜானகியுடையதாக , தரையில் சருகு நகர்வது போலக் கேட்டது.
‘டயர்டாக இருக்கிறாய். சாப்பிட்டுவிட்டுப் படு ஜானகிஎன்று நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ‘சொல்லவே வேண்டாம். உன் மடியில் படுத்தால் கூட, அப்படியே தூங்கிவிடுவேன்என்று சிரித்தாள்.
‘சுந்தரம் எப்போது திரும்புவான். அதுவரை தூங்கவா?என்றாள். அவன் புதியதாக ஏதாவது கவிதைகள் எழுதியிருந்தால் அவனை வாசித்துக் காட்டச் சொல்ல வேண்டும். தன்னுடைய கவிதைகளை மட்டும் அல்ல. மற்றவரின் உயர்ந்த கவிதைகளை அவன் குரலில் கேட்க நன்றாக இருக்கும். பி.பி. ராமச்சந்திரனின் அந்த மலையாளக் கவிதையை முதல் முறை அவன் வாசிக்கும் போதே, அது எனக்கு மனப்பாடம் ஆகிவிட்டது தெரியுமா நீலா?என்று ஜானகி அதைச் சொல்ல ஆரம்பித்தாள். ஒவ்வொரு வரியாகச் சொல்லிக்கொண்டே வந்து, ‘ இதை விட எளிமையாக/ எப்படி வெளிப்படுத்தும்/ கிளிகள்/ தங்கள் வாழ்வை?என்று முடித்தாள். கண்களை மூடி அப்படியே இருந்தாள். ‘இதை விட எளிமையாக எப்படி வெளிப்படுத்தும்என்பதை மட்டும் மீண்டும் சொன்னாள். எனக்குக் கண்களில் அழுகை திரண்டுவிட்டது. நான் ஜானகியின் பக்கத்தில் போய் அமர்ந்தேன். அனேகமாக என் விரல்களில் அப்பியிருந்த சோப்பு நுரை இப்போது முற்றிலும் தணிந்துவிட்டிருந்தது.
10
‘வெளிப்படுத்துதலை விடச் சிரமமானது எளிமையாக வெளிப்படுத்துதல். சீலனுக்கு அது தெரியாமல் போய்விட்டது.’  என்று சொல்லும் போது ஜானகி தன் கைவிரல் நகங்களைப் பார்த்தபடி குனிந்திருந்தாள். எந்த வகையிலாவது அவளை எனக்குத் தொடவேண்டும் என்று இருந்தது. அப்படித் தொடுவதன் மூலம் இப்போதிருக்கிற அவளை வேறு ஒருத்தியாக மாற்றிவிட முடியும் என நினைத்தேன்.
‘சுந்தரத்திடம் நீயே பேசு. வந்திருப்பதைச் சொல். உனக்காக அலுவலக அட்டவணையை மாற்றிக்கொண்டு சீக்கிரமே அவன் வரலாம். ஒன்றரை மணிக்கு அனு வந்துவிடும். எட்டு முதல் ஒன்று வரைதான் பள்ளிக் கூடம். அதுவரை நீ படுத்திரு. நானும் அடுக்களையைக் கவனித்துவிட்டு வருகிறேன், சரியா?என்று அவளைப் படுக்கையறைக்குக் கூட்டி போனேன்.
படுக்கையின் தலைமாட்டில் இருக்கிற சி.டி. ப்ளேயருக்குப் போனாள். ஓடவிட்டாள். சுந்தரம் சமீபத்திய இரவில், வெளியூர் கிளம்புவதற்கு முன்பு கேட்ட, ஹரிப்ரஸாத் சௌரஸ்யா ததும்பி வழிய ஆரம்பித்தார். காற்றில் சிறு தழல் போல் விசிறும் புல்லாங்குழலின் முதல் பரவலிலேயே, ஜானகி நெஞ்சோடு கையை வைத்துக்கொண்டாள். தொலைந்து போகச் சம்மதம் என்பது போல இருந்தது அந்தச் செய்கை.
‘கதவைச் சாத்திவிட்டுப் போகிறேன்’  என்று நான் சொல்கையில், ஜானகி ஒரு தலையணையை எடுத்துத் தன் மடியில் வைத்திருந்தாள். ‘எதற்குச் சாத்த வேண்டும்? கதவு திறந்தே இருக்கட்டும். சௌரஸ்யாவுக்குத் தயக்கம் இராது. உன்னுடன் அடுக்களை வரை வருவார். முன் அறையின் புத்தரோடு உரையாடுவார். பழங்கள் உதிரும் வேப்பமரத்தின் கீழ் அமர்ந்து வாசிப்பதை அவர் விரும்பக் கூடும். இதோ.. இதோ.. இந்த இடத்தில் அவருடைய இசை ஆளற்ற தெருவில் அடிக்கிற வெயில் போல இருக்கிறது ‘ என்று எம்பினாள்.
‘முதலில் அவர் அடுக்களைக்கு வரட்டும். புளிக்குழம்பு பிடிக்குமா அவருக்கு என்று கேட்டுக்கொள்கிறேன்.என்று சிரித்துக்கொண்டே போனேன். அப்படிச்

11
சொன்னேனே தவிர, ஒரு நீர்த்தடம் போல அந்தப் புல்லாங்குழல் ஒலி நான் செல்கிற இடம் எல்லாம் வந்துகொண்டு இருந்தது.
வாஷிங் மெஷினில், குக்கர் விசிலில், செல் ஃபோன் அழைப்பில், காஸ் சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று கணகணவென்று சிவப்பாக மோத தெருவில் செல்லும் டெம்போ சத்தத்தில், சப்போட்டா மாதுளேய்ய் என்ற பழக்காரன் குரலில் எல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தது. கூரியர் பையன் அல்லது அனுவின் ஆட்டோ ரிக்‌ஷா வருவதற்குள் குளித்துவிட வேண்டும். ஒரு அத்தியாயம் முடிந்து இன்னொரு அத்தியாயம் துவங்குகிற மாதிரியான நேரம் அது.
அனு அப்பாவிடம் பேசினேன். ஜானகி வந்திருப்பதைத் தெரிவித்தேன். அவளைப் பேசு என்றேன் பேசவில்லையா என்று கேட்டேன். பேசவில்லை போல. சௌரஸ்யா கேட்டுக்கொண்டு இருப்பதைச் சொன்னேன். ஜானகிதான் முதலில் சௌரஸ்யாவை அறிமுகப்படுத்தினாளாம். அது காஸட் காலமாம். ‘சரி. சீக்கிரம் வந்துவிடுங்கள். நான் அவளிடம் எதுவுமே பேசவில்லைஎன்றேன்.
‘ஃபோனை அவளிடம் கொடுக்கட்டுமா? இரண்டு வார்த்தை பேசுகிறீர்களா?என்று நகர்ந்தபோது, குளித்து அவசரமாகத் துவட்டப்பட்ட தலையில் இருந்து முதுகில் ஈரம் இறங்கிக் கொண்டு இருந்தது. நான் படுக்கை அறை நோக்கிச் செல்கிற நேரத்தில், தொலைபேசியின் மறுபக்கத்தில் அலுவலகச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. ‘கொஞ்சம் லைன்லெ இருங்கஎன்று மறுபடி சொல்லி நகர்கையில், புத்தர் சிலையின் மடியில் ஜானகி வைத்த இறகு துடித்தது.
கதவு அகலத் திறந்தே இருந்தது. புல்லாங்குழல் இசை ஓடிமுடிந்து, அணைக்கப் படாமல் மஞ்சள் சன்னலில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்தப் பக்க விசிறிக்குப் பதிலாக இந்தப் பக்க விசிறியின் பொத்தானைப் போட்டிருக்கிறாள். தலைமாட்டிற்குப் பதிலாக கால்மாட்டில் காற்றுச் சுழன்று, கரண்டைப் பக்கம் சேலை விலகிக் கொலுசு தெரிந்தது.
12
மடியில் வைத்திருந்த தலையணையைப் பக்கவாட்டில் வைத்திருந்தாள். சன்னலுக்கு வெளிப்பக்கம் இருந்து அசையும் மஞ்சள் கொன்றைச் செடியின் நிழல் அவள் முகத்தைத் துடைத்துக்கொண்டு இருந்தது.
‘நல்லா தூங்கிட்டாஎன்று மட்டும் ஃபோனில் சொல்லியிருக்கலாம். அதைச் சொல்லவில்லை. ‘சிறகிலிருந்து பிரிந்த இறகொன்றுஎன்று சொல்லத் தோன்றியது. அதையும் சொல்லவில்லை. எதையும் சொல்லவேண்டாம் என்று தூங்குகிற ஜானகியையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
அந்தச் சிறகு அவளிடம் இருந்துதான் உதிர்ந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

%

கல்கி - தீபாவளி மலர்.2013.