நான் கூடுமானவரை தினமும் காலை வேளையில் நடக்கிறேன். முடிந்தால் மாலைகளில் கூட. அப்போது நான் பார்ப்பவை, பார்ப்பவர் மட்டுமே மனதில் தங்குகிறதாகவும் என்னை ஏதேனும் ஒரு வகையில் தூண்டுகிறதாகவும் இருக்கின்றன/இருக்கிறார்கள். அந்தச் சமயம் தோன்றுகிறதை நான் எனக்கு நெருக்கமான சிலருக்குக் கைபேசியில் குறுஞ்செய்திகளாக அனுப்புகிறேன்.
இன்று நான் அனுப்பிய குறுஞ்செய்திகளில், எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முடிகிற. சிலவற்றை உங்களிடம்.
*
எப்போதும் சந்தோஷம் மட்டுமே படாத, எப்போதும் கவலை மட்டுமே அடையாத இரண்டு புள்ளிகளின் நடுவில் இடப்பட்ட பாலமே இப்போது நான் கடந்துகொண்டிருப்பது.
*
என் இடப் புறம் இருந்து, வலப்புறம் சாடி, வேப்பமரம் ஏறும் அணில் குஞ்சை விடவும் அதிகமாக இந்த வாழ்வைக் கொண்டாடிவிட முடியாது நான்.
*
தீ மேல் நோக்குகிறது.
வியர்வை கீழ் நோக்குகிறது.
இரண்டும் ஒன்றுதான் ஆனால்.
*
நல்ல காதல் ஒர் பளிங்கு நீரோடை போல, இரண்டு கைவிரித்து குனிந்து அள்ளிப்பருக, தாகம் உடையோரை அழைக்கிறது.
*
இந்த மைதானம், மைதானம் போலவே இருக்கிறது. அதே போல இருக்கும் அது எல்லாம் அழகுதான்.
*
இரவுப் போக்குவரத்துச் சக்கரங்களில் பின்னுடல் நசுங்கி, அதிகாலை வெய்யிலில் படம் எடுத்துச் சீறி தரை கொத்தும் பரிதாபக் கருநாகம் பார்த்ததை ராஜாங்கம் சொல்லியிருக்கிறார்.
*
வேப்பம் பூ போல நுணுக்கமான மலர்வும், கசப்பான வாசனையும் உடைய ஒரே ஒரு கவிதையை நான் எழுதிவிட்டால் போதும்.
*
பறவைகள் இந்த நல்ல நாளை அறிந்திருக்கின்றன. அவர்தம் குரல்களில் ஆனந்தம் ஆனந்தம்.
*
சவுதி வாசகர் தியாகராஜம் வரும்போது நான் ஒரு கிண்ணத்தில் வேர்க்கடலை வைத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன், சட்டை போடாமல். அது முதல் கூச்சம். என்னுடைய நான்கு புத்தகங்களில் கையெழுத்து இட்டுத் தரச் சொல்லிக் கேட்டார். அது என்னுடைய இரண்டாவது கூச்சம். இந்தக் கூச்சம் என்னை ஐம்பது வருடங்கள் காப்பாற்றிவருகின்றன. இனி கைவிடுவதற்கில்லை