முந்திய சாயுங்காலத்தில் பெய்த மழை, அதன் காரியங்களை ஒரு இரவுக்குள் முற்றிலும் செய்துமுடித்துவிடும் போல.
பகலாக இருந்தாலும் இரவாக இருந்தாலும் அது அலுவலகம் எனினும் வீடு எனினும் மழை பார்த்தல் என்பது எனக்கு விருப்பமான ஒன்றாகவே இருக்கிறது. அதை விரும்புவதற்கு முன்பே அதைச் செய்ய ஆரம்பித்து விடுகிறேன். சுடலைமாடன் கோவில்தெரு வீட்டின் தெரு நடையில் இருந்து எத்தனை மழை பார்த்திருப்பேன்? எத்தனை என்று சொல்ல வேண்டுமா, எவ்வளவு மழை எனச் சொல்ல வேண்டுமா? இலக்கணங்களை மறக்க அடிக்கிற, மறப்பதில் விருப்பமில்லையெனில், இலக்கணங்களை மீறுகிற ஒன்றாகவே மழை இருக்கிறது.
வ.உ.சி. கல்லூரி வகுப்பறையில் இருந்து பார்த்த மழை நிறைய. தூத்துக்குடி கடல் சார்ந்த ஊர் என்பதால் அதன் மழையும் கடல் சார்ந்த தாழ்வழுத்தங்கள் உண்டாக்கும் பெருமழையாக இருக்கும். விடுதியில் இருந்து வகுப்பறைகளுக்கு. வகுப்பறையில் இருந்து இன்னோர் வகுப்புக்கு என நகரும் சமயங்களில் எல்லாம் நான் வணிகவியலை விட அதிகம் கற்றுக் கொண்டது மழையியல்தான். நான் கட்டிடங்கள் துவங்கும் விளிம்பில் இருந்து கல்லூரியின் முகப்பு வாசல் வரை விரிந்து கிடக்கும் செம்மண் பூமியில் விழுந்து விழுந்து தெறிக்கும் மழைக் கொப்புளங்களை, அதற்கு இன்னும் எனக்கு ஒரு உவமை சொல்லத் தெரியவில்லை, மட்டும் பார்த்துக் கொண்டே இருப்பேன். தரையில் மோதி, விசிறி, உடைந்து, ஏற்கனவே பெருகும் மழை நீருடன் தன்னை இணைத்துக் கொள்ளும் அந்தக் காட்சி இன்னும் என்னை உருவாய் அருவாய், உளதாய் இலதாய் ஆக்கிக் கொண்டிருக்கும் ஒன்று.
நான் சின்ன வயதில் இருந்தே மண்புழுக்களின் சினேகிதன். எங்கள் பூட்டன் வீடு கட்ட வாங்கிப் போட்டிருந்த மரத்தடியின் தூர் ஒன்று தோட்டத்தில் கிடக்கும். அதைப் புரட்ட எல்லாம் அந்த வயதில் வலுவிருக்காது. லேசாக அசைப்பேன். அந்த அசைவே போதுமானது. உள்ளிருந்து மண்புழுக்கள் ஊர்ந்து வர ஆரம்பிக்கும். நான் அவற்றைச் சேகரிக்கத் துவங்குவேன். ஒரு தேங்காய்ச் சிரட்டையில் விடப்படும் மண்புழுக்கள், அந்தச் சிரட்டையின் உட்சுவர்களுக்குள் மடிந்து நகரும் உயிர்ப்பு, இது தன் மண்ணில்லை, வேற்றிடம் என முற்றிலும் உணர்ந்த உணர்வுடன், சற்றே அதிகமான பரபரப்புடன் தன்னை அதிலிருந்து விலக்கிக்கொள்ள எடுத்துக் கொள்ளும் எச்சரிக்கையான நகரல் எல்லாம் இப்போதும் இந்த மடிக்கணினிச் செவ்வகத் திரை வரை அப்படியே இருக்கிறது.
நினைவின் ஓயாத தூரிகை தன் வரைதலை நிறுத்துவதே கிடையாது. நான் அந்த மண் புழுக்களை என் புறங்கைகளில் விட்டுக் கொள்ள, அவை அதனதன் திசைகளைத் தீர்மானித்து நகரும். விரல் இடுக்குகளில் நுழைந்து உள்ளங்கைக்குள் ஒன்று வளை தோண்டும். கழுத்தில் பெருவளையங்கள் இட்டிருக்கிற பழங்குடிகள் போல, அது தன் வளையங்கள் நகர்த்தி, சில பொழுதுகளில் பிறுபிறுவென மணலையே எச்சமாகக் கழித்துச் சென்று கொண்டே இருக்கும். எப்படியும் அதன் ஆதி ஈரமண்ணை நிச்சயம் அது அடைந்துவிடும் என்ற தீராத நம்பிக்கை அதன் நகர்வில் இருக்கும். நான் அந்த மண் புழுக்களைத் தேடுகிறேன்.
இந்த வீட்டிற்குக் குடிவந்து ஆறேழு வருஷங்கள் இருக்கும். அப்போது தார் ரோடு போடப்பட்டிருக்கவில்லை. எதிரே கூட ஏகப்பட்ட செடிகள் காடாக வளர்ந்துகிடக்கும். இரண்டு மூன்று உடைமரங்கள். நிறைய வேலிக்கருவை. சப்பாத்திக் கள்ளி. எருக்கலம் மூடுகள். உடைமரத்தின் மேல் படர்ந்த கோவைப் பழம் கொத்த கிளிக் கூட்டம் தாழப் பறந்து போகிற அற்புதமான
காட்சி இப்போது தொலைந்துபோய் விட்டது. கல்வெட்டாங் குழியில் மீன் பிடிக்க வருகிற மிலிட்டரி லைன் பையன்கள் சப்பாத்திக் கள்ளிப் பழம் பறித்துச் சாப்பிட்டு சிவப்பாகச் சிரிப்பார்கள். மணிக்கணக்குத் தவறாமல் இரண்டு பாகம் நீளத்திற்கு காலை எட்டு எட்டே காலுக்கு அந்தப் பாம்பு எந்த இருசக்கரங்களுக்கு உள்ளேயும் நசுங்காமல் அது பாட்டுக்குப் போகும்.
எங்கள் வீட்டுக் கருவேப்பிலைச் செடி மூட்டுக்குள் இருந்து கீரிப் பிள்ளை ஓடி, எதிர்ப்பக்கம் அது தேர்ந்தெடுத்திருக்கும் அதன் வாழிடத்துக்குள் நிலா வெளிச்சம் பூசிச் செருகிக் கொள்ளும். பார்த்திருக்கிறேன். கறை நல்லது எனச் செம்மண்ணில் அணில் புரண்டுவந்தது போன்ற , இதுவரை பார்க்காத ஒரு புது நிறத்து முயலைத் துரத்திக் கொண்டு எங்கள் பக்கத்துத் தெரு நாய்கள் அனைத்தும், அதனதன் கருப்பு, வெள்ளை, பழுப்பு நிறங்களைக் காலடிகளில் உதறிவிட்டுப் பாய்ந்தது இப்போது நடந்தது போல, தோற்றதன் குரைப்போடும் வன்மம் நிறைந்த உறுமலோடும் தெரிகிறது. காதுகளும் கழுத்தும் நிமிர்த்தி, தோல்வியின் மாயக்கோட்டைத் தாண்ட விரும்பாதது போல்,தூரத்தில் இன்னும் பின் கால் வீசி ஓடிக்கொண்டிருக்கும் முயலின் திசை நோக்கி நின்று, அந்த வெவ்வேறு நாய்கள் மொத்தமாகத் திரண்டு ஒரே நாயாக உருமாறிய நேரம், எனக்குக் கானகத்தின் குரல் கேட்டது என்றே சொல்ல வேண்டும்.
அப்படி அவை நின்ற இடத்தில் இருந்துதான் தெரு கிழக்கில் இருந்து மேற்குப் பக்கமாகத் தாழ்ந்து இறங்குகிறது. இயற்கை தன் திசைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. மழையின் சூட்சுமம் அபாரமானது. அது ஒரு நொடி கூடத் தன்னைத் தரையில் தேங்க விடுவதில்லை. மண்ணில் துளி அம்பு தைத்து, குமிழியிட்டுப் பூச் சிதறினவுடன் அது நகரத் துவங்கி விடுகிறது. நீர் ஒரு சர்ப்பத்தின் நெளிந்து சீறும் பாய்ச்சல் உடையது. புடை தேடும் ஒரு திசைதவறிய பாம்பின் மூர்க்கத்துடன் மழைத் தண்ணீர் தரை முகர்ந்து தலை திருப்பி விரைவதைப் பார்க்கையில் நமக்குப் பிடாரன் ஆகிவிடவே தோன்றும். கருங் கம்பளியும் மகுடியும் வட்டப் பிரம்புக் கூடையும் சிரியா நங்கை வேரும் நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும். கொத்த வருவது போல, உங்கள் பாதத்தின் கீழ் வரை மழைத் தண்ணீரின் நாக்கு நக்கிவிட்டு அப்பால் போகும்.
சருகெலாம் அகன்று, செம்மண்ணின் சீனிக் கல் எல்லாம் உருண்டு, வண்டலும் கருப்புமண்ணுமாக நிலம் தெளியும் நேரம் சரியாக மண் புழுக்களுக்குத் தெரியும் போல. அதனதன் துளையில் இருந்து அவை வெளிவரத் துவங்கும் அன்றும் அப்படித்தான் துவங்கியது. எங்கள் தெரு மண்புழு முளைத்துக் கிடந்தது. அல்லது பூத்துக் கிடந்தது. ஒரு மார்கழிச் செம்பருத்திப் பூவின் சூல் முடி போல அவை வளைந்து வருகையில், அடுத்த பாட்டம் மழைத் தண்ணீர் அணை உடைந்தது போல் கீழிறங்கி ஓடிவந்து கொண்டிருந்தது.
ஒரு மண் புழுவைக்கூடத் தண்ணீர் அடித்துச் செல்லமுடியவில்லை. எல்லாப் புழுக்களும் தண்ணீரை எதிர்த்து நகரத் துவங்கின. எந்தெந்தத் துளைகளில் இருந்து வெளிவந்தனவோ அவற்றுள் சற்றுப் பின்வாங்கி, தங்களை ஆழமாக அதனுள் நட்டுக் கொண்டன. தண்ணீருக்கு எதிரான பாடம் ஒன்றை அவை ஏற்கனவே கற்றிருந்தன. ஒரு பாரம்பரிய மீனவன் அலைகளின் சாதுரியங்களுக்குக் கட்டுப்படாது சிரிப்பது போல, தன் மேல் நகர்ந்துசெல்லும் தண்ணீரைப் போக அனுமதித்து அவை நின்ற கோலம், ஆம், கோலம்தான் அது, என்னைப் போன்ற பார்வையாளனுக்கு பெரும் சிலிர்ப்பு உண்டாக்குவது. எப்போதுமே மண்புழுக்களின் நடத்தை இப்படித் தான் இருக்குமா என்பதை நுண்ணுயிரியல் அறிந்தவர்கள் சொல்லக் கூடும்.
எனக்கு அந்த அறிவு எல்லாம் வேண்டாம். பள்ளத்துள் வேகமாக இறங்கி ஓடும் மழைத்தண்ணீருக்கு அசைந்து கொடுக்காமல், தன் வளைகளுக்கு வெளியே சிவப்பு முளைகள் போல் எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்த அந்த மண் புழுக்கள் வேண்டும். இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இப் பொழுதில் எழுத்தெழுத்தாக நகர்ந்துகொண்டிருக்கும், மேலுக்கு மேல் அடுக்கடுக்கடுக்காகப் படிந்துவரும் அத்தனை வரிகளும் நெளிந்து என் விரல்களின் வழி ஏறி என் இரு புறங்கைகளிலும், எங்கள் அம்மாச்சியின் கனிந்து தோல் நகன்ற புறங்கைகளில் ஓடும் பச்சை நரம்புகள் போல, ஊர்ந்துகிடக்கும் எனில் எப்படி இருக்கும்.
அவை ஒன்றின் மேல் ஒன்றாகக் கொடிகளாகப் பின்னி. வழுவழுப்பான பிரியத்துடன். என் முன்கை ரோமங்களின் ஊடாக, நிலத்தின் நீர்மையுடன், ஆழ் மண்ணின் ஆதி வெதுவெதுப்புடன், திசையற்று அல்லது எல்லாத் திசைகளிலும் நகர்வது எத்தனை அருமையானது. அவ்வப்போது, அவற்றில் ஒன்றிரண்டு சற்றே தலை தூக்கி, ஒளிமையம் நாடும். நான் என்னைப் பார்ப்பதற்கான முயற்சியாக அதை எடுத்துக் கொள்வேன். அதன் தூக்கிய
முகத்தை நோக்கிக் குனிவேன். எப்போதோ எந்தக் காலத்திலோ நான் எழுதிய அந்த இரண்டு வரிகளை அதனிடம் சொல்வேன்.
’’அடிக்கடி பார்க்க முடிகிறது யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று மண் புழுவைப் பார்த்து”.
%